search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சை நிற பால்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.
    • தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.

    ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

    மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சைநிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டிலைட் ஊதா பாக்கெட் 3.5 சதவீத கொழுப்புச் சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலின் விலையும் லிட்டர் ரூ.44 ஆகும். ஆனால் கிரீன் மேஜிக் பச்சைநிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

    மற்ற தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.54 முதல் ரூ.56 வரை உள்ள நிலையில் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் ரூ.44-க்கு கிடைப்பதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.

    சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் இன்னும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையாகிறது. அதுவும் மிக குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சுனேஜா கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தரப்படுத்தப்பட்ட பால் கார்டு வைத்திருப்பவர்கள் (பச்சை நிறம்) இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய 3 வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும் என்றார்.

    செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ந் தேதி வரை பால் வினியோகத்தை செய்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×