search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன தொழில்நுட்ப வசதிகள்"

    • ‘உரிமை வீரர் கலைஞர்' என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    • ‘புதிரை வெல் கலைஞர் வழி செல்' என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன.

    சென்னை:

    இந்திய அரசியலில் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அன்று தனது 95 வயதில் மரணத்தை தழுவினார். தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலேயே தனது உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பமாக இருந்தது.

    ஆனால் அதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. தரப்பில் நீதிமன்றம் சென்றனர். அனுமதி ஆணை பெற்று, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    திறப்பு விழா காணும் கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளது. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் சமாதியில் 'ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்' என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனது சமாதியில் எழுத வேண்டும் என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன.

    பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுக்கும் பூச்செடிகள், பளபளக்கும் மார்பிள்ஸ் கற்களுடன் திராவிட கட்டிட கலையில் கருணாநிதியின் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. அவரது சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கருணாநிதியின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் 'லேசர்' மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கருணாநிதி சமாதியை சுற்றி பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏ.சி. காற்று மனதை வருடுகிறது. கருணாநிதி எழுதிய புத்தகங்களின் பெயர்கள் 'க' என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தின் இலச்சினை ஆகும்.

    அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றதும் 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... ' என்ற கருணாநிதியின் காந்த குரல் வாசகம் பளிச்சென்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 'தாயின் பாசமும், தனயனின் நேசமும்' என்ற தலைப்பில் கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் அம்மையாருடன் இருக்கும் புகைப்படம் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளது.

    'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கருணாநிதியின் இறுதிப்பயண புகைப்படங்களும், 'அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. இது மனதை கலங்க வைக்கின்றன.

    மேலும் இந்த அறைக்குள் நுழைந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கருணாநிதி 23.11.1970 அன்று பிறப்பித்த அரசாணையும், தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று பிறப்பித்த அரசாணையும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

    'உரிமை வீரர் கலைஞர்' என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு '3 டி' தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது. கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கருணாநிதியே பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது.

    'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 'கலைஞரின் சிந்தனை' சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் 'ஏ.வி.' தொழில்நுட்பத்தில் கருணாநிதி பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. 'புதிரை வெல் கலைஞர் வழி செல்' என்ற தலைப்பில் கருணாநிதி பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன. சரியான பதிலை சொல்பவர்களை கருணாநிதியே பாராட்டுவது போன்று குரல் ஒலிக்கிறது. கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் 'டிஜிட்டல்' திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் வீடியோவாக தோன்றுகிறது. இந்த அறையில் 9¼ அடி உயரத்தில் கருணாநிதியின் மெழுகு உருவச்சிலையும் அமைய இருக்கிறது.

    'கலையும், அரசியலும்' என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி தியேட்டரும் உருவாக்கப்பட்டுள்ளது. 60 அடியில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி தனது 14 வயதில் தமிழ் கொடி ஏந்தி இந்தி எதிர்ப்பு போராட்டம், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் அரவணைப்பு, அவருடைய மரணம் வரையிலான வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

    இதில் அவர் இயக்கிய, வசனம் எழுதிய திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்த தகவல்களும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற காட்சிகளும் வருகின்றன. இந்த குறும்படம் கருணாநிதியின் புகழையும், சாதனைகளையும் போற்றி பாராட்டும்விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, வள்ளுவர்கோட்டம், அண்ணா மேம்பாலம், குடிசைமாற்று வாரியம், டைட்டல் பார்க், பாம்பன் பாலம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, அண்ணா நூலகம், மெட்ரோ ரெயில் போன்ற திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் அருங்காட்சியகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் பாதைகளில் பளிச்சிடுகின்றன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து மெரினா கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் பூங்கா போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பெண்ணிய காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்ற தலைப்புகளில் கருணாநிதியின் புகழ் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பறைசாற்றப்பட்டுள்ளது. கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் 'டிஜிட்டல்' தொழில்நுட்பங்கள் திகட்ட, திகட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கருணாநிதியுடன் நேரில் பழகியது போன்ற உணர்வு உண்டாகும் வகையில் இந்த அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

    கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தவுடன் நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் 'கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்துதான் பார்வையிட முடியும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். முன்பதிவு விவரத்தை இங்கு அமைந்துள்ள சேவை கட்டிட அலுவலகத்தில் காட்டினால் கையில் 'டேக்' கட்டி விடுவார்கள். அதன்பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

    கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம். கருணாநிதி அருங்காட்சியகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தின் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையே மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார் ' என்றார்.

    ×