search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்தி பேச்சாளர்கள்"

    • பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
    • வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கையில் பணம் கொண்டு செல்ல கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். வழக்கும் தொடரப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களுடன் ரூ.1 லட்சம் வரை வைத்து கொள்ளலாம். ஆனால் அவருடன் இருக்கும் வேட்பாளர் ரூ.50 ஆயிரம்தான் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்புகளையும் நிர்ணயித்துள்ளனர். சிறிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம். பெரிய மாநிலங்களில் ரூ.95 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம்.

    சட்டசபை தேர்தல் என்றால் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். கூட்டங்கள், பேரணிகள், விளம்பரங்கள், வாகன செலவுகள் அனைத்தும் இந்த வரம்பிற்குள் அடங்க வேண்டும்.

    வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் முதல் அன்றாட செலவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். செலவு கணக்குகளை தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

    வேட்பாளர்கள் தினசரி செலவினங்களுக்காக தனி பதிவேட்டை பராமரிப்பதுடன், ஒவ்வொரு நாளும் தேர்தல் அதிகாரிக்கு விரிவான அறிக்கைகளை வழங்க வேண்டும். அந்த பதிவேட்டில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பிற பிரசார நடவடிக்கைகளுக்கான செலவுகள், வீடியோ பதிவுகள் ஆகியவை ஆதாரமாக இருக்க வேண்டும்.

    நட்சத்திர பேச்சாளர்கள் பங்கேற்கும் பிரசார நிகழ்வுகளின் போது ஏற்படும் செலவுகள் வேட்பாளர் மற்றும் பிரசாரகர் இடையே பிரிக்கப்படலாம். எடுத்துக் காட்டாக, ஒரு வேட்பாளர் நட்சத்திர பிரசாரம் செய்பவருடன் பயணம் செய்தால் அல்லது அவரது பெயரையும் படத்தையும் கேமராவில் வைத்திருந்தால் செலவுகள் பிரிக்கப்படும்.

    1951-52-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில், வேட்பாளர்களின் செலவு அதிக பட்சமாக ரூ.25 ஆயிரம். வட கிழக்கு மாநிலங்களில் ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவிட அனுமதிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டில், பெரும்பாலான மாநிலங்களுக்கான செலவுத் தொகை ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டது. 1980-ல் ஒரு வேட்பாளருக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது.

    ×