search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு"

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலையில் கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
    • இவ்விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 12 மணி அளவில் நாமக்கல் மாவட்ட நுழைவு பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் வழியாக நாமக்கல்லுக்கு வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள பொம்மைகுட்டை மேட்டில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாடு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக பொம்மைகுட்டை மேட்டில் 400 அடி நீளம் மற்றும் 240 அடி அகலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தலில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) காலையில் கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இவ்விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 12 மணி அளவில் நாமக்கல் மாவட்ட நுழைவு பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் வழியாக நாமக்கல்லுக்கு வருகிறார். பின்னர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    இதையடுத்து மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் நாமக்கல்லுக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு ராசாம்பாளையம் சுங்கசாவடியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை தி.மு.க.வினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    இதனால் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகில் இருந்து விழா நடைபெறும் மேடை வரை என வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக இன்று காலையில் நாமக்கல் செல்லப்பம்பட்டி அரசு பள்ளியில் போலீசார் எந்த எந்த பகுதியில் பணிமேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள், அமைச்சர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவரும் அமர தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உணவு சாப்பிடும் வகையில் மாநாட்டு திடலில் பெரிய அளவிலான ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    நாமக்கல்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சார்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது.

    இம்மாநாட்டினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநாடு பந்தல் முன்பு சென்னை ரிப்பன் கட்டிடம் வடிவில் முகப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், எம்.பி.யுமான ராஜேஷ்குமார் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.

    காலை 9.30 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் ஆ.ராசா எம்.பி. மற்றும் தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி., திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பர்வீன்சுல்தானா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    மதியம் 12 மணி அளவில் உணவு இடைவெளிக்கு பிறகு வரலாற்று சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார்.

    மாலை 4 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மதிவேந்தன் நன்றி கூறுகிறார்.

    இம்மாநாட்டில் பல்வேறு துறை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×