search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி திருட்டு"

    • மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது.
    • போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயங்கி வருகிறது.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் இங்கு தினமும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலை நேரத்திலேயே இங்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர்.

    விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுக்கு விடிய, விடிய காய்கறிகள் கொண்டு வரப்பட்டு இறக்கிவைக்கப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சம் அடைந்து வருவதால் தங்கத்தை பாதுகாப்பது போல் வியாபாரிகள் தக்காளியை பாதுகாத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 கிலோ எடை கொண்ட 3 கிரேடு தக்காளி மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி பல இடங்களில் தேடிப்பார்த்தும் தக்காளியை காணவில்லை. விசாரணையில் யாரோ 75 கிலோ தக்காளியையும் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் தற்போது சிவகாமி (50) என்ற வியாபாரி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் பூத் பகுதியில் 25 கிலோ எடை கொண்ட 2 கிரேடு தக்காளியை வைத்து இருந்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது 50 கிலோ தக்காளியும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, இரவு நேரத்தில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து வந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

    செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் தொடரும் தக்காளி திருட்டால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    • ராகுல் காந்தி, ஒரு புறம் அதிகாரத்தை பாதுகாக்க சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர்.
    • மறுபுறம் சாதாரண இந்தியர்களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கைக்கு எட்டவில்லை.

    நாட்டின் பல மாநிலங்களிலும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில இடங்களில் 1 கிலோ தக்காளி ரூ.200-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆசாத்பூர் மொத்த விற்பனை சந்தையில் காய்கறி விலை அதிகமாக இருப்பதை அறிந்த வியாபாரி ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ பரவி வருகிறது.

    இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில், ஜஹாங்கீர்பூர் பகுதியை சேர்ந்த ராமேஸ்வர் என்ற வியாபாரி தனது மகனுடன் சந்தைக்கு காய்கறி வாங்க வந்ததாகவும், அப்போது தக்காளி விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார். மேலும் இவ்வளவு விலைக்கு தக்காளி வாங்கி நாங்கள் எப்படி விற்க முடியும் என்பது கூட எங்களுக்கு தெரிய வில்லை என அந்த வியாபாரி கண்ணீர் வடிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஒரு புறம் அதிகாரத்தை பாதுகாக்க சக்தி வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களின் அறிவுரைப்படி நாட்டின் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. மறுபுறம் சாதாரண இந்தியர்களுக்கு காய்கறிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட கைக்கு எட்டவில்லை. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இந்த இடைவெளியை நிரப்பி கண்ணீரை துடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்துக்கு நிகராக தக்காளிக்கு மவுசு கூடி உள்ளது. இந்த நிலையில் தக்காளியை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

    தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.

    பெங்களூரு அருகே உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ். இவர் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். விளைச்சல் அதிகரித்த நிலையில் அவற்றை அறுவடை செய்தார். இதில் அவருக்கு 2 டன் தக்காளி சேர்ந்தது. பின்பு அவற்றை கோலார் மாவட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு எடுத்து வந்தார். பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வந்தபோது ஒரு இடத்தில் தக்காளி வாகனத்தை அவரும், டிரைவரும் டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழி மறித்தனர். தங்களது மோட்டார் சைக்கிளில் சரக்கு வாகனம் மோதியதாக கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கூட்டாளிகள் 3 பேர் அங்கு வந்தனர். 5 பேரும் சேர்ந்து பின்னர் மல்லேசையும், டிரைவர் சிவண்ணாவையும் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தக்காளி இல்லாமல் வாகனம் மட்டும் தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

    விசாரணையில் சரக்கு வாகனத்துடன் தக்காளியை கடத்தியது தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), அவரது மனைவி சிந்துஜா(36) உள்ளிட்ட 5 பேர் கும்பல் என்று தெரிந்தது. தக்காளியை வாகனத்துடன் கடத்திய கும்பல் அதை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    சென்னையில் 2 டன் தக்காளியையும் ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். மேலும் அந்த பாஸ்கர், சிந்துஜா உள்ளிட்ட உள்பட 5 பேரும் பணத்தை ஆளாளுக்கு பிரித்துக்கொண்டனர். அதன்பின்னர் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், சிந்துஜாவை வாணியம்பாடிக்கு வந்தனர். அங்கு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தக்காளியை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த விவசாயி பர்வதம்மா கடும் வேதனை அடைந்தார்.
    • திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடைத்தரகர்கள் தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. தக்காளியின் மதிப்பு உயர்ந்து வருவதால், திருடர்களின் பார்வை தக்காளியின் மீது விழுந்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணையில் இருந்த ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தக்காளியை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த விவசாயி பர்வதம்மா கடும் வேதனை அடைந்தார்.

    இதுபற்றி பர்வதம்மா கூறுகையில், 'எங்கள் குடும்பத்தினர் தக்காளி பண்ணையை எச்சரிக்கையுடன் பாதுகாத்து வந்தனர். இரண்டு ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந்தோம். இதற்கு முன்பு எதுவும் கிடைக்கவில்லை. சில சமயம் தக்காளி வளரும், ஆனால் அவை பழுக்காது. இந்த முறை நல்ல மகசூல் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் யாரோ திருடிச் சென்றுவிட்டனர்' என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

    நாங்கள் பண்ணையில் மிகவும் கடுமையாக உழைத்தோம். என் கணவரால் பேச முடியாது. எங்களின் உழைப்பையும் பணத்தையும் கொட்டினோம், ஆனால் அவை அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.

    இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து நேற்று இரவு 20 கிலோ தக்காளி திருடப்பட்டுள்ளது. 

    ×