search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்"

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வருகிற டிசம்பர் மாதம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.
    நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய பஞ்சபூத தலங்களில் நீர் தலமானது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். சைவ கோவில்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக உப சன்னதிகளான 45 பரிவார தெய்வங்களுக்கு பாலாலய பூஜை நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள், ஹோமம் நடந்தது. பாலாலய பூஜையையொட்டி உப சன்னதிகள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வழிபாட்டிற்காக சுவாமி படங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, விநாயகர் சன்னதிகளில் பாலாலய பூஜை வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதனால் இந்த சன்னதிகளில் வழக்கம் போல பக்தர்கள் வழிபாடு நடத்தலாம்.

    இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதியை கோவில் நிர்வாகம் நேற்று முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 9, 12-ந்தேதிகளில் 2 கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 45 பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு டிசம்பர் மாதம் 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

    இதற்காக யாகசாலை பூஜைகள் டிசம்பர் மாதம் 6-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் தொடங்கும். 2-ம் கட்டமாக மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட பிரதான சன்னதிகளுக்கும், ராஜகோபுரம், மல்லப்பன் கோபுரம், கார்த்திகை கோபுரம், சங்கேமிஸ்வரர் கோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் டிசம்பர் மாதம் 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மேல் பிரதான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்பின் அன்றைய தினம் மாலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

    கும்பாபிஷேக விழாவுக்கான பணிகள் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர். ரூ.3½ கோடியில் புனரமைப்பு பணிகளும், ரூ.72 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் மின்விளக்குகள் உள்பட மின்சார தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் யாகசாலை பூஜைக்காக நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. கோவில் அலுவலகம் அருகே யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. மொத்தம் 18 குண்டங்கள் அமைக்கப்பட உள்ளது.

    2-ம் கட்ட கும்பாபிஷேகத்திற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் அருகே 23 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்படும் என அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். நன்கொடையாளர்களும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். 
    ×