என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலாப் பயணிகள்"
- திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.
- மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது.
சீனாவில் படம் எடுக்கச் சிறுத்தையின் அருகே வந்த சுற்றுலாப் பயணியின் முகத்தை பனிச் சிறுத்தை கடித்துக் குதறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோக்டோகாய் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
நண்பர்களுடன் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற ஒரு சுற்றுலாப் பயணி, திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு பனிச் சிறுத்தையைக் கண்டுள்ளார்.
காரில் இருந்து கீழே இறங்கி மிக அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
ஆத்திரமடைந்த பனிச் சிறுத்தை, மின்னல் வேகத்தில் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரிய விலகுகளாக கருதப்படும் பனிச்சிறுத்தைகள் உலகம் முழுவதும் மொத்தமே சுமார் 4,000 முதல் 7,000 வரை தான் எஞ்சியுள்ளன.
- முகாம் வேன்கள், கார்கள், கூடாரங்கள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தது.
- மண்ணில் அடித்து செல்லப்பட்டு புதைந்தன.
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் மவுங்கானுய் மலை உள்ளது.
இந்த மலையடிவாரத்தில் உள்ள மவுவோ பகுதியில் பிரபல சுற்றுலா முகாம் தளம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் முகாம்களை அமைத்து தங்குவார்கள்.
இந்த நிலையில் மலையடிவாரத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முகாம் வேன்கள், கார்கள், கூடாரங்கள், ஒரு குளியலறை ஆகியவை மீது பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தது.
இதனால் அந்த முகாம்கள், வாகனங்கள் மண்ணில் அடித்து செல்லப்பட்டு புதைந்தன. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர்.
- சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
ஒகேனக்கல்:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.
இதனிடையே தமிழக-கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணைய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலையோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
- கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர்.
- கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக வேளாங்கண்ணி அமைந்துள்ளது. இங்கு கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்ககூடிய புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கடற்கரை நகரமாக விளங்ககூடிய வேளாங்கண்ணி ஆன்மீகம் நகரம் மட்டும் இல்லாமல் பொழுது போக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
எப்போதுதே வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதியில் இருந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுகடங்காத அளவில் உள்ளனர்.
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு வேளாங்கண்ணிக்கு அதிகாலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள், மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காக கூட்டம் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகளாக காட்சியளிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காணும் பொங்கலை முன்னிட்டு பலர் தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து கடற்கரையை சுற்றி பார்த்து குளித்து மகிழ்ந்தனர்.
வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை சாலை, நடுத்திட்டு, தியான கூட்டம், முடி காணிக்கை செலுத்தும் இடம், பழைய மாதா கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகத்தில் சவாரி செய்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளதால் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏராளமான கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
+2
- காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது.
- குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடுகளில் ஒன்றாகும். இந்த காடு சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகிறது. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரத்து 20 எக்டேர் பரப்பளவில் அலையாத்திக்காடு காணப்படுகிறது. திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் இந்த காடு பரவி உள்ளது.
காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தின் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு பகுதி வரை இந்த அலையாத்திக்காடு நீண்டுள்ளது.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடலாம். அதற்கேற்ற வகையில் மரப்பலகையால் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காடுகளை உயரே இருந்து பார்க்க வசதியாக உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் என இயற்கையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் இங்கு உள்ளன. வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
அலையாத்திக்காட்டுக்குள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.

குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம். இந்த அலையாத்திக்காட்டை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படகுதுறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்வதை அந்த பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. அதற்கேற்ற சூழல் இங்கு நிலவுவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தற்போது கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
- ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் பாறையை ஒட்டி மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகை கால விடுமுறை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமானது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் தென்காசி நகரப்பகுதி குத்துக்கல்வலசை, மேலகரம், குற்றாலம், வல்லம், மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணிக்கு மேல் மிகக் கனமழையாக கொட்டி தீர்த்ததால் முக்கிய அருவியான குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது
மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளமானது பாதுகாப்பு வளைவைத் தாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்கும் பகுதி வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் இரவில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியது.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழ தொடங்கியது. எனினும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்று காலை முதலே கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு தேர்வு கால விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கும் வருகை தந்து தங்களது குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்னதாக குற்றால அருவிகளில் புனித நீராட அதிக அளவில் வருவதால் குற்றாலமானது ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தாலும் களை கட்டி உள்ளது.
தற்போது மழைப் பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
- தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது.
- இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரையில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளான ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது. இதனால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து காணப்படுவதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.
- மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
- ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமான வெயில் மற்றும் பனி மூட்டம் நிலவி வந்தது . மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏரிச்சாலை மற்றும் ஒரு சில பகுதிகளில் பணியாட்கள் நெருப்பு மூட்டி குளிர் காயும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் கடும் பனி உருவாகும் என்பதால் கடும் உறைபனியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது 10 டிகிரிக்கும் குறைவான தட்பவெட்ப நிலை உருவாகியுள்ள நிலையில் மேலும் குளிர் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உறைபனி அதிக நாட்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை நேரங்களில் பனிச்சாரலுடன் கூடிய பனிமூட்டத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை, அதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது.
- கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஆகும். ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு வருவது வழக்கம்.
தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து அங்கிருக்கும் பூங்கா பகுதியில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். மேலும் அணையின் வெளிப்பகுதியில் விற்கப்படும் பொரித்த மீன் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு கரைகளிலும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனினும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிடித்து நிற்க வசதியாக பதிக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்திருந்தது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சேதமடைந்த தடுப்புகளை ஊழியர்கள் சீர் செய்தனர். சீரமைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 நாட்கள் தடைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
- உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
* மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
* அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
* குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.






