search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்கா"

    ‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கி எங்கள் மனதை குளிரச்செய்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #sarkar #ministerrbudayakumar #vijay

    மதுரை:

    நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

    இந்த திரைப்படத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்தும் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

    இதையொட்டி படக்குழுவினர் சர்ச்சை காட்சிகளை நீக்கி இன்று மதியம் திரையிடப்படும். சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் இடம் பெறாது என்று அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் இதய தெய்வமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் அம்மாவின் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். அந்த மன உளைச்சல் இன்றைக்கு தீர்ந்திருக்கிறது.

    ‘சர்கார்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரது வீடுகளிலும் கூட அம்மாவின் விலையில்லா திட்டம் சென்றடைந்து உள்ளது. அவர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.


    ஜாதி, இனம், மொழி, மத வேறுபாடின்றி கட்சி மாறுபாடின்றி அனைவரும் பயன்பெற்ற இந்த திட்டங்களை இனி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. விமர்சிக்கக்கூடாது.

    ‘சர்கார்’ படக்குழுவினர் அந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு இன்று மதியம் முதல் ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பால் எங்கள் மனம் குளிர்ந்து விட்டது.

    எனவே படக்குழுவினருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    1 1/2 கோடி தொண்டர்களின் தெய்வமாக போற்றப் படுகின்ற அம்மாவின் தியாகத்தை, உழைப்பை கொச்சைப்படுத்துகின்ற நோக்கில் இது போன்ற காட்சிகளை இனி எந்த திரைப்படத்திலும் எடுக்க வேண்டாம்.

    இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் சினிமா துறையினர் கவனமாக செயல்பட வேண்டும்.

    ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கியவர் அம்மா. விலையில்லா திட்டங்கள் சமூக பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டதாகும்.

    இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். இந்த திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். இதனை இலவசம் என்ற பெயரில் சினிமாவில் கொச்சைப்படுத்தி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அந்த வகையில் தான் ‘சர்கார்’ படக்குழுவுக்கு எங்கள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தோம். இப்போது படக்குழுவினரின் அறிவிப்பு, அவர்கள் வழங்கியுள்ள உத்தரவாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எங்கள் உள்ளத்தை குளிரச் செய்து அறிவிப்பை தந்த படக்குழுவுக்கு மீண்டும் ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #sarkar #ministerrbudayakumar #vijay

    ×