search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு மையம்"

    • சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது.
    • சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சென்னை:

    சமூகநலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஆய்வு செய்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் குறித்து அனைத்து புள்ளி விவரங்களும், கோரப்பட்டுள்ளன.

    28 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது. பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும், தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காகவுமே காலை உணவுத் திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

    அத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்திட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது மட்டுமில்லாமல் "வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

    அப்படியிருக்க சத்துணவுத் திட்டத்துறையில் உள்ள சத்துணவு மையங்களை எப்படி அரசு மூட முயற்சி எடுக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், சத்தான உணவை முறையாக மாணவர்களுக்கு வழங்கிடவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்திடவுமே அரசு திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன.
    • சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்கள் ஆகியவற்றின் விவரங்களை வரைபடங்களுடன் திரட்ட வேண்டும்; அவை அனைத்தையும் இன்று காலை 11 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் ஆணையர்களுக்கு சமூக நலத்துறை ஆணையிட்டிருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் 3 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள சத்துணவு மையங்களை கணக்கெடுக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதன் நோக்கம், 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் தேவைப்படும் சத்துணவை ஏதேனும் ஓரிடத்தில் தயாரித்து கொண்டு சென்று வழங்குவதாகத் தான் இருக்க வேண்டும். இது தமிழகத்தின் அடையாளமாக திகழும் சத்துணவு திட்டத்தை வலுவிழக்கச் செய்யும். சத்துணவுத் திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைத்து விடும்.

    சத்துணவு பணியாளர்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும்போது, ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அந்த பள்ளிகளில் உணவு வழங்கும் பொறுப்பு பள்ளியில் பணியாற்றும் ஏதேனும் ஒரு பணியாளரிடம் ஒப்படைக்கப்படலாம். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும்.

    தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால், சுமார் 85 ஆயிரம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மோசமான பணியாளர் விரோத நடவடிக்கையாகவே அமையும்.

    ஒருபுறம், காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் தமிழகத்தில் 1,545 தொடக்கப்பள்ளிகளில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால், காலை உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும், அந்தந்த பள்ளிகளில் சமைத்து வழங்கும் வகையில் விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய சமூக நலத்துறை, அதை விடுத்து சத்துணவு மையங்களை மூடுவதற்கான திட்டங்களை வகுப்பது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்காது.

    எனவே, சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×