search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கத்தலைவர்"

    • பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.
    • பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் சோமனூா் அருகே செந்தில் நகரை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 78). இவா் திருப்பூா், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா் சங்கத் தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாா். இவா் தலைமையில் பல்வேறு போராட்டங்களை விசைத்தறியாளா்கள் முன்னெடுத்துள்ளனா்.

    பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாா். இந்த தகவல் அவரது மனைவி கருப்பாத்தாளிடம் (72) உறவினா்கள் மூலம் நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

    செய்தியை கேட்டதும் கருப்பாத்தாள் அதிா்ச்சியில் மயக்கம் அடைந்தாா். தொடா்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    இதையடுத்து தம்பதி உடல்கள் திருப்பூா் மாவட்டம், வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டன. கணவன், மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்ததால் விசைத்தறியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் ஏராளமானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா். இவா்களது மறைவுக்கு ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

    பழனிசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சாமளாபுரம் பேரூராட்சி, இச்சிப்பட்டி, பூமலூர் ஊராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை விசைத்தறிகளை நிறுத்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் வி.அய்யம்பாளையம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை உரிமையாளர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

    ×