search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தையை"

    • பரபரப்பு தகவல்கள்
    • 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஊசி பாசி மாலை விற்பனை செய்து வந்த வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 24).

    இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களின் 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை ரெயிலில் கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை அங்குள்ள ரெயில்வே போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று கேரளா போலீஸ் பிடியில் இருந்த 2 பேரை கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர்கள் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48) அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கடத்திச்சென்று கேர ளாவை சேர்ந்த ஒரு கும்பலி டம் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி உள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு குழந்தையை பிச்சை எடுக்கும் தொழிலில் பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் நாராயணனை நாகர்கோவில் ஜெயிலிலும் சாந்தியை தக்கலை ஜெயிலிலும் அடைத்தனர்.

    ×