search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலதெய்வ வழிபாடு"

    • நாட்டுப்புற தெய்வங்கள் என அழைக்கப்படுவது சிறு தெய்வங்களேயாகும்.
    • கலைகளின் வளர்ச்சிக்குத் திருவிழாக்கள் மூலகாரணம் எனின் மிகையாகாது.

    நாட்டுப்புறத் தெய்வங்கள் என அழைக்கப்படுவது சிறு தெய்வங்களேயாகும். சிறுதெய்வ வழிபாடு பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் தான் மிகவும் நேர்த்தியாக நடைபெறுகிறது. இச்சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகளும் நாட்டுப்புறப்பாடல்களும் பரவியுள்ளன. சிறுதெய்வ வழிபாட்டில் திருவிழா, கலை, பண்பாடு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் போன்ற நாட்டுப்புறக் கூறுகள் உள்ளன. இந்நாட்டுப்புறக் கூறுகளை சிறுதெய்வ வழிபாட்டின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    வழிபாடு விளக்கம்:-

    "வழிபாடு என்ற சொல்லுக்கு வணக்கம், கோட்பாடு, பூசனை, பின்பற்றுதல், வழக்கம் என பல பொருள்கள் இருப்பினும் கடவுளையோ, உயிர் இல்லாதவற்றையோ, உயிர் உள்ளவற்றையோ, வாயால், மனத்தால் வழிபடுவதே வழிபாடு" என தமிழ் லெக்சிகன் விளக்கம் தருகிறது.

    குறிப்பிட்ட ஒரு வெற்றிடத்தை வழிபடல், நிலைக்கதவை வழிபடல், பீடத்தை வழிபடல், உருவத்தை வழிபடல், நடுகல்லை வழிபடல் என வழிபாட்டில் பல நிலைகள் இருந்து வருகின்றன.

    சிறுதெய்வ வழிபாடு:-

    இயற்கை வழிபாடே உலகின் தொன்மையான வழிபாடாக கருதப்படுகின்றது. இயற்கை வழிபாட்டின் தொடக்க நிலையில் இருந்து சிறு தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம்.

    "வீட்டுத் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என நான்கு வகைப்படும். முதல் மூன்றையும் சிறு தெய்வ வழிபாட்டின் கண் அடக்குவர். சிறுதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாடாகவும், குலதெய்வ வழிபாடு ஊர் தெய்வ வழிபாடாகவும், ஊர் தெய்வ வழிபாடு நாடு தழுவிய வழிபாடாகவும் மாறுகின்றது. இத்தகைய சிறுதெய்வ வழிபாட்டால் ஒரு சமுதாயத்தின் தொன்மை கூறுகளை அறியலாம்.

    சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்:-

    மனித வாழ்வில் இன்பங்களையும் துன்பங்களையும் ஒருசேர வழங்கி மனிதனைத் தன்வயப்படுத்தி வணங்குமாறு செய்த நிலையில் சிறு தெய்வ வழிபாடு தோன்றியது எனலாம். இச்சிறு தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் மிகுதியும் காணக்கிடக்கின்றன. இந்நாட்டுப்புறக் கூறுகளைத் திருவிழாக்களில் காணலாம்.

    பண்பட்ட சமுதாயத்தின் விளக்கமே திருவிழா எனலாம். விழா என்னும் திறந்த வாசல் வழியேதான் நம் நாட்டு மக்களை அறிந்து கொள்ளமுடியும் எனத் தாகூரின் கருத்தினை மேற்கோள் காட்டுவர். சு. சக்திவேல். திருவிழாக்கள் மூலம் கலையாற்றலும் கலையனுபவமும் மேலோங்கி வளர்கின்றன.

    கலைகளின் வளர்ச்சிக்குத் திருவிழாக்கள் மூலகாரணம் எனின் மிகையாகாது. தொன்று தொட்டே கலைகள் அனைத்தும் கோயில்களோடும் விழாக்களோடும் இணைந்துவிட்டன. இத்திருவிழாக்களின் உட்கூறுகளான கலை, பண்பாடு, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள், ஒற்றுமை, உளவியல் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சிறுதெய்வ வழிபாடு அமைந்துள்ளது.

    நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின் படிக்கற்கள் எனலாம். அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்று கூறுலாம். நம்பிக்கைகள் காலம் காலமாக ஒரு தலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பலவித நம்பிக்கைகளை கொண்டிருக்க காண்கிறோம்.

    சிறுதெய்வங்களுக்கு நிகழ்த்தப்படும் தீமிதி, அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்திக் கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக மனிதனின் பண்பட்ட மன உறுதியையும் நம்பிக்கையையும் அறியமுடிகிறது. இவ்வாறு தன்னை வறுத்திக் கொள்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் எல்லா இடையூறுகளையும் எதிர்கொள்ளும் மனத்திட்பம் மக்கள்பால் ஏற்படுகிறது என்பதைச் சிறுதெய்வ வழிபாட்டால் அறியலாம்.

    "பண்பாடு" என்னும் சொல் ஒத்துப்போதல், இசைந்து நடத்தல், பொருந்தி வாழ்தல் என்பன போன்ற பொருள்களைத் தரும். "பண்பு என்ற சொல்லிற்குக் குணம், தகுதி, இயல்பு, தன்மை, முறை என்ற பொருள்கள் வழக்கில் உள்ளன. சிறுதெய்வ வழிபாட்டால் மக்கள் கூடிவாழும் நற்பண்புகளைக் கற்றுக் கொண்டனர்.

    பொய்பேசுதல், களவு, கொலை, கொள்ளை போன்ற தீய பண்புகள் இல்லாமல் மக்கள் வாழ்வதற்குக் காரணம் நாட்டுப்புறங்களில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாடேயாகும், சிறுதெய்வ வழிபாட்டினைப் "பழந்தமிழ் மக்களின் பண்பாட்டுக் கண்ணாடி" என்கிறார் ச.கணபதிராமன். இவ்வாறு சிறுதெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக்கூறுகள் கலந்துள்ளதை அறிய முடிகிறது.

    • குடும்பத்தினர் குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர்.
    • சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை

    குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

    அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

    கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

    தலைமுறைகள் கடந்து வாழும் நம்மில் பலருக்குத் தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல் பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது. சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும் வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குலதெய்வ வரிசையில் வருவதில்லை.

    குலதெய்வம் என்பது ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.

    ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கீகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.

    அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.

    இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.

    ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

    குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

    எப்போது வழிபடுவது?

    கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேஷ நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

    திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.

    வழிபாடு பலன்கள்

    குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

    அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

    திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்

    பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

    பகவத் கீதை தரும் விளக்கம்

    குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

    உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

    • குலதெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.
    • சுபகாரியங்கள் செய்தால் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.

    ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும். இவர்களுக்கு காவல் தெய்வம், குலதெய்வம் வழிபாடு இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு, முதல் முடி குலதெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள். சிலர் காது குத்துவார்கள்.

    குலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும். அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.

    குலதெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.அப்படியானால் குலதெய்வமும், இறைநிலையும் வேறுவேறா? அப்படி கிடையாது, அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    உலகத்தில் இன்பத்தையும், பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் முடியாது, லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்குதான் இறைதூதர்களையும், தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார். அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள்.

    குல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள், முழுவதும் பங்காளி ஆவார்கள். இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதுபவர்கள். இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ , எடுக்கவோ மாட்டார்கள்.

    மேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும், சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.

    குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    குலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்புப்பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. 'குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும்' என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.

    • குலதெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும்.
    • வருடத்துக்கு ஒரு முறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும்.

    குலதெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாக கூட இருக்கக் கூடும். அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.

    நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.

    உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும். ஒரு வேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்தில் இருந்து நீங்கள் வெகு தூரம் வாழ்ந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட திதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை மணி ஓடர் அனுப்பி விடுவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர், நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள் (பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்) நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும்.

    மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குலதெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்கு செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.

    உங்களது குலதெய்வம் கோவிலுக்கு சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

    குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் விட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது மணிப் பர்சில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்கிட வேண்டும். ஒருவருக்குக் குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்திரகாளி அம்மன் என வைத்துக் கொள்வோம்.

    அவர் ஹட்டனில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை ஹட்டனில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால், அது குலதெய்வத்தைப் போய்ச் சேராது. ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால் இந்த நிலை. எனவே, தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக் கடனை செலுத்திட வேண்டும்.

    • குலதெய்வம் என்பது தாய்-தந்தை போல வழிகாட்டும் அருட்சக்தி.
    • குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாக கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்த கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

    இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை, கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.

    • முன்னோர் மற்றும் குலதெய்வ வழிபாட்டையும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
    • மனதில் அழுக்கு இல்லாமல், தூய்மை, நல்லெண்ணத்துடன் வழிபாடு செய்வோருக்கு அவர் கண்டிப்பாக காட்சி தருவார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட் சார்பில் 63ம் ஆண்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. தினமும் காலையில் அய்யப்பனுக்கு சிறப்பு பூஜையும், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    குலம் செழிக்க குல தெய்வ வழிபாடு எனும் தலைப்பில் கவிஞர் ஆழ்வை கண்ணன் பேசியதாவது:- நம் முதல் குலதெய்வம் நம் முன்னோர்கள் தான். அத்தகைய பெரியோருக்கு மரியாதை செலுத்துவதையும், முன்னோர் மற்றும் குலதெய்வ வழிபாட்டையும் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

    கிராமங்களில் வாழ்ந்து வந்த நாம், வேலை வாய்ப்பு தேடி நகரங்களை நோக்கி படையெடுத்த பின், குலதெய்வ வழிபாட்டில் இடைவெளி அதிகரித்துள்ளது. ஆதலால் இறைவன் அருள் கிடைக்க தாமதமாகிறது.

    எந்த ஊரில் எங்கு வாழ்ந்தாலும் நாம் நம் குலதெய்வ வழிபாட்டை ஒரு போதும் மறக்க கூடாது. கடவுள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.ஆனால் மனதில் அழுக்கு இல்லாமல், தூய்மை, நல்லெண்ணத்துடன் வழிபாடு செய்வோருக்கு அவர் கண்டிப்பாக காட்சி தருவார்.நேரில் சென்று வணங்க முடியாத படியோ அல்லது பல மைல்தரூத்தில் குலதெய்வம் இருந்தால், ஆண்டுக்கணக்கில் செல்ல முடியாமல் போனால் இனியாவது நீங்கள் செல்லும் போது கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைத்து வழிபட துவங்குங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

    ×