search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்திய வியாபாரி"

    • கோபாலகிருஷ்ணன் தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
    • சிறுவர்கள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 26). தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினசரி வியாபாரத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தொந்தரவு கொடுத்து கிண்டல் செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டு சென்றார். அப்போது சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போது சிறுவர்கள் அடித்த பந்து இவரது தட்டில் வந்து விழுந்தது.

    இதனால் கோபாலகிருஷ்ணனுக்கு ஆத்தரம் ஏற்பட்டது. உடனடியாக வெளியே வந்த அவர் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சிறுவர்கள் மீது வீசி விரட்டினார். வீட்டிற்கு சென்ற சிறுவர்கள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (47), செந்தில்குமார் (39), சசிகுமார் (47), பிரதீப் (24) ஆகியோர் நடந்ததை கேட்பதற்காக கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றார். அவர்கள் சிறுவர்களை விரட்டியது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த கோபாலகிருஷ்ணனின் மனைவி தனது கணவரை 4 பேரும் ஏதாவது செய்து விடுவார்கள் என நினைத்து வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டினார். பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    வீட்டிற்குள் இருந்த கோபாலகிருஷ்ணன் போலீசார் வந்தால் சிறுவர்களை செங்கல் வீசி விரட்டியதற்காக தன் மீது வழக்கு போடுவார்கள் என நினைத்தார். இதனால் எப்படியும் தன்மீது வழக்கு போடுவார்கள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் 4 பேரையும் கத்தியால் குத்துவது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த கத்தி மற்றும் சுத்தியலுடன் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

    பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த கண்ணன், செந்தில்குமார், சசிகுமார், பிரதீப் ஆகியோரை கத்தியால் குத்தி, சுத்தியலால் தாக்கினர். அதற்குள் அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். கத்திக்குத்தில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×