search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நதிநீர் பிரச்சினை"

    காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் குமாரசாமிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுரை வழங்கி உள்ளார். #DeveGowda #CMKumaraswamy #Cauveryissue
    பெங்களூர்:

    தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்ப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு ‘‘காவிரி நதிநீர் ஆணையம்’’ உருவாக்கியுள்ளது.

    இந்த ஆணையத்தில் உறுப்பினராக இருந்து செயல்படுபவர்களின் விபரங்களை மத்திய அரசு, தமிழக அரசு, புதுச்சேரி, கேரளா ஆகியவை தெரிவித்து விட்டன. ஆனால் கர்நாடகா மட்டும் இன்னமும் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்காமல் உள்ளது.



    காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வரும் கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி, அந்த ஆணையத்துக்கும் உறுப்பினர்களை நியமிப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் அவருக்காக காத்திராத மத்திய அரசு காவிரி ஆணையத்தை செயல்பட வைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமி நேற்று தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை சந்தித்துப் பேசினார்.

    அமைச்சர்களின் செயல்பாடு, இடைக்கால பட்ஜெட், விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து தேவேகவுடாவிடம் குமாரசாமி ஆலோசனை பெற்றார். அப்போது குமாரசாமிக்கு தேவேகவுடா சில அறிவுரைகளை வழங்கினார்.

    ‘‘காவிரி நீர் ஆணையம் தொடர்பாக மத்திய அரசுடனோ அல்லது தமிழக அரசுடனோ மோதல் போக்கை கடை பிடிக்காதே. அது தோல்வியில் முடிந்து விடும். எனவே தமிழக அரசுடன் சற்றுவிட்டுக் கொடுத்து நடந்து கொள்’’ என்று கூறியதாக தெரிய வந்துள்ளது.

    காவிரி ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லாதே. அதற்கு பதில் மத்திய அரசுடன் சமரசமாக செல்வதே நல்லது என்றும் குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளாராம்.

    இதைத் தொடர்ந்தே முதல்-மந்திரி குமாரசாமி நீர்ப்பாசன நிபுணர் வெங்கட்ராமை அழைத்து விரிவான அறிக்கை தயாரித்து தரும்படி உத்தரவிட்டாராம். அதன் அடிப்படையில் பிரதமர் மோடிக்கு குமாரசாமி மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுத முடிவு செய்துள்ளார். #DeveGowda #CMKumaraswamy #Cauveryissue

    ×