search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமநாயக்கன்பட்டி"

    • 10-ம் திருநாளான திங்கள்கிழமை பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழாவின் முக்கிய விழாவான தேர்பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இத்திருத்தல விண்ணேற்பு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடைபெற்று வந்தன. 2-ம் திருநாளான 7-ந் தேதி புதுநன்மை விழாவும், 8-ம் திருநாளான 13-ந் தேதி மரியன்னை மாநாடு, 9-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

    10-ம் திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நடைபெற்றது. அதையடுத்து தேர்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்களில் ஆரோக்கிய மாதாவும், பரலோக மாதாவும் தனித்தனியே புறப்பட்டு ரத வீதிகளில் பவனி வந்தனர். தேர்களின் பின்புறத்தில் இறைமக்கள் கும்பிடு சேவை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதையடுத்து அருட்தந்தையர்களின் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    விழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இறைமக்கள், பொதுமக்கள், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி திருத்தல பங்குதந்தை அந்தோனி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு ரீகன், மரியின் ஊழியர் சபை அருள் சகோதரிகள், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி ஆகிய பகுதி இறைமக்கள் செய்திருந்தனர்.


     


    ×