search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவறையை சுத்தம் செய்தல்"

    • தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது, இன்போசிஸ்
    • வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்றார் என்ஆர்என்

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

    1981ல், தனது 6 நண்பர்களுடன் இந்நிறுவனத்தை தொடங்கியவர் என்ஆர் நாராயண மூர்த்தி (78).

    தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்து உலகெங்கும் பிரபலமடைந்துள்ள இன்போசிசின் நிறுவனரும், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர், எளிமையான வாழ்க்கை முறையை வலியுறுத்தி வருபவர்கள்.

    நாராயண மூர்த்தி தனது வீட்டு கழிவறையை தானே தினமும் சுத்தம் செய்கிறார்.

    பொதுவாக, பெரும் பணக்கார குடும்பங்களில் இது கவுரவம் குறைந்த செயலாக பார்க்கப்பட்டு இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது:

    நமது சமூகத்தில் தங்கள் வீட்டு கழிவறையை தானே சுத்தம் செய்பவர்களை கீழ்த்தரமாக பார்ப்பவர்களும் உண்டு.

    இந்த எண்ணம் இதற்கு முன் பல பணக்கார குடும்பங்கள் உருவாக்கியிருந்த ஆதிக்க மனப்பான்மையின் விளைவு. இது போன்ற எண்ணங்களால்தான் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரிவுகள் தோன்றுகின்றன.

    என் குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள். எதையும் கேட்டு தெரிந்து கொள்வதில் விருப்பமுடையவர்கள். எனவே என் குழந்தைகளுக்கு நான் இதன் மூலம், "நம்மை விட தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை" என்பதை அடிக்கடி உணர்த்த முடிகிறது.

    பிறரை மதிப்பதற்கான பல சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று என எனது குழந்தைகளுக்கு அன்புடனும் அரவணைப்புடனும் நான் கூறுவேன்.

    சமுதாயத்தில் நாம் அடக்கமாக இருக்க வேண்டும். சில நேரம் நமக்கு சமுதாயத்தில் கிடைக்கும் சற்று அதிக பயன்களை நீடித்த சலுகையாக நினைக்க கூடாது.

    வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

    தனது எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு பேரக்குழந்தைகளுடன் நேரம் கழிக்கவும், புத்தகங்கள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் நேரத்தை செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


    ×