search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வெட்டு"

    • கலுங்கில் நீர் பங்கீட்டை வலியுறுத்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை குறித்த கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலுங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது.

    வில்லூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலமுருகன் கொடுத்த தகவல்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் அனந்தகுமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் உவரி பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் உதவி பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    உவரி பெரிய கண்மாய் கலுங்கில் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பளிங்கு பகுதியில் லிங்க வடிவத்தில் தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இதை படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை குறித்த கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது.

    உவரி பெரிய கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கிழக்கு பகுதியில் லிங்க வடிவம் கொண்ட தனி தூண் கல்லில் 5 அடி உயரம், 1 அடி அகலம், 6 வரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இதை ஆய்வு செய்தபோது முதல் 2 வரிகள் முற்றிலும் தேய்மானம் ஏற்பட்டு காணப்படுகிறது. காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

    உவரி பெரிய கண்மாயில் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லூர், புளியங்குளம் கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூர்க்கு நீரை பணிக்கர் என்ற இனக்குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை களல்வெட்டு மூலம் அறியலாம். தற்போது கண்மாயில் இருந்து கலுங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்து இருப்பது மற்றொரு சிறப்பு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சிவகங்கை அருகே பழமையான கல்வெட்டு-முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது.
    • இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு சிவகங்கையை சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட தொல் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல் நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா கூறியதாவது:-

    சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கில் இருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப்பக்கம் இரண்டு அம்மன் கோவில்கள் காணப்படுகின்றன. கோவிலை ஒட்டி குவியலாகக் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்க பெற்றிருக்கிறது.

    இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 13-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிகிறது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோவில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.

    இதுதவிர முத்தலூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான 15-க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன. முத்தலூரில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் காணப்படுகிறது.

    இதில் கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும், மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

    மேலும் இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர் காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரை சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் கள ஆய்வில் தெரிவித்தார். இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இதில் வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும், அதில் 4 ஆரங்களும் உள்ளன.

    • வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்துள்ளது.
    • வட்டெழுத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை "கோகலிமூர்க்கன்" பெயர் வந்துள்ளது.

    திருப்பூர்,

    சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளை இணைக்கும் வகையில் பெரு வழிகள் எனப்படும் பழங்கால வணிக பாதைகள் திருப்பூர் மாவட்டம் வழியாக பயணித்த கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

    இந்தப்பாதைகளை காக்க ஒவ்வொரு பாதையிலும் காவல் வீரர்கள் இருந்ததும், இந்தப் பாதைகளை பயன்படுத்தும் வணிகர்கள், வழியில் அமைந்துள்ள ஆலயங்களுக்கு வரி கொடுத்த சான்றுகளும் ஏராளமாக கிடைத்த வண்ணம் உள்ளன. அதே போல்,மேற்கத்திய நாட்டவர்கள் இங்கு வணிகத்துக்கு வந்து சென்றதும் பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் பண்டைய கொங்கு 24 நாடுகளான, காங்கேய நாடு, பூந்துறை நாடு, குறுப்பு நாடு என இருந்துள்ளதும், இவை உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு வணிகத்தால் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் சிறப்போடு திகழ்ந்துள்ளது. அதில் மிகச் சிறப்படையதாக காங்கேயநாடு உள்ளது. இங்கு "பெரில்" எனப்படும் பச்சைக் கல்லுக்குப் பெயர் பெற்ற படியூரும், சிவன் மலையும் பண்டைய காங்கேய நாட்டில் அமைந்திருந்ததால் இக்கற்களை விலைக்கு வாங்க வணிகர்கள் இங்கு வந்தனர்.

    மேலும் மேற்குக் கடற்கரையில் வந்து இறங்கிய மேலை நாட்டு வணிகர்கள், பேரூர், வெள்ளலூர், காங்கேயம், கரூர் வழியாகப் பூம்புகார் வரை சென்ற பண்டைய புகழ்பெற்ற "இராசகேசரி பெருவழியில்" காங்கேய நாடு அமைந்திருந்ததால் பண்டைய காலத்தில் இது வணிகத்தால் இப்பகுதி சிறப்புற்று விளங்கியுள்ளது. காங்கேய நாட்டில் தொன்மையான ஊர்கள் 12 கிராமங்கள் ஆகும். ஓங்கு புகழோடு விளங்கிய பண்டைய கிராமங்களில் பார்புகழ் "பழஞ்சேபளி" என்றும், பரஞ்சேர்பள்ளி என்றும் அழைக்கப்பட்ட இன்றைய பரஞ்சேர்வழியும் அந்த கிராமங்களில் ஒன்றாகும்.

    தற்போது காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள பரஞ்சேர்வழியில் உள்ள "மகாதேவர் நட்டுராமாந்தார்" என அழைக்கப்படும் மத்யபுரீஸ்வரர் கோவிலில், திருப்பூரில் இருந்து இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க கி.பி.1038 ம் ஆண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு மையத்தின் இயக்குனர் சு.ரவிக்குமார் கூறுகையில், காஞ்சி மாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் தென் கரையிலும், சிவன்மலையில் இருந்து செல்லும் ஓடையின் வட கரையிலும் அமைந்துள்ள ஊர் பரஞ்சேர்வழி. பண்டைய கொங்கு மண்டலத்தில் சைவ,வைணவ மற்றும் சமணம் என முச்சமயங்களும் தழைத்து வளர்ந்த ஊர் பரஞ்சேர்வழி ஆகும். இங்குச் சமணப்பள்ளி இருந்ததற்குச் சான்றாக இன்றும் இங்கு கி.பி.10. ம் நூற்றாண்டைச் சேர்ந்த தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் ஒன்று உள்ளது.

    சமணப் பள்ளிகளில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் மக்களுக்கும், மாணாக்கர்களுக்கும், துறவிகளுக்கும் அறம் உரைத்து வாழ்ந்திருக்கிறார்கள். உணவு, அடைக்கலம், மருந்து ,கல்வி முதலிய நால்வகைத் தானங்களைச் சமணர்கள், சமணப்பள்ளி மூலம் மேற்கொண்டு இருந்தனர். இங்கு இத்தகைய சமணப்பள்ளி செயல்பட்டதை இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டும் மெய்ப்பிக்கிறது

    இந்தக் கல்வெட்டில் பரஞ்சேர்வழி "பழஞ்சேபளி" என்று குறிப்பிடப்படுகிறது.' பளி' என்பது பண்டு சமணர்கள் வாழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல் ஆகும். இந்தக் கல்வெட்டு கொங்கு மண்டலத்தைக் கி.பி.1004 முதல் 1047 வரை சிறப்பாக ஆட்சி செய்த கோனாட்டு அரசர்களில் மூன்றாவதாக வரும் விக்கிரம சோழன் காலத்தை சேர்ந்தது ஆகும்.

    இது அம்மன்னனின் 34-வது ஆட்சியாண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் ஏற்கனவே அன்னூர், பெரமியம், வள்ளியரச்சல், அகிலாண்டபுரம், அரசம்பாளையம், மூலனூர் மற்றும் திங்களூரில் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே வட்டெழுத்துக் கல்வெட்டுகள் என்பது ஓர் தனிச்சிறப்பாகும். வட்டெழுத்து என்பது இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துக்களுக்கு முன்பு கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த தமிழ் எழுத்து வரிவடிவம் ஆகும்.

    இங்கு நமக்குக் கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழனுடைய தந்தை "கோகலிமூர்க்கன்" பெயர் வந்துள்ளது. 30 செ.மீ. அகலமும், 90 செ.மீ. உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் மொத்தம் 17 வரிகள் தான் கிடைத்துள்ளன. கீழ்ப்பகுதி சேதமடைந்துள்ளது. விக்கிரம சோழனுடைய மற்ற வட்டெழுத்துக் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது அது பெரும்பாலும் திருக்கோயில் அல்லது சமணப்பள்ளிக்குக் கொடை அளித்தது பற்றியே வருவதால் இங்கும் 1038-ஆம் ஆண்டு கொடை அளித்தது பற்றி இக்கல்வெட்டு இருக்கலாம் என்றார். 

    ×