search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் பல்லவி பல்தேவ்"

    தேனி அருகே குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார். #CollectorPallaviBaldev
    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குடியிருப்புகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரித்து வாங்கும் பணி, டெங்கு கொசு ஒழிப்பு பணி, உடற்பயிற்சி மையம், இறகுப்பந்து அரங்கம், பூங்கா பராமரிப்பு பணி நடக்கிறது. இந்த பணிகளை, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பழனிசெட்டிபட்டி முல்லைப்பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு கலெக்டர் சென்றார். அங்கு தண்ணீரை சுத்திகரிக்க பயன்படுத்துகிற குளோரின் அளவை ஆய்வு செய்தார். இதேபோல், வீரபாண்டி முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதிக்கு கலெக்டர் சென்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு போதிய அறிவிப்புகள் செய்யப்பட்டு உள்ளதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா? என்பதை கேட்டறிந்தார். முன்னதாக தேனி பங்களாமேடு திட்டச்சாலையை கலெக்டர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வு குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு, பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், வருகிற 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தவிர்த்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். முல்லைப்பெரியாற்றில் இருந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலந்து சுத்திகரித்து வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், உதவி பொறியாளர் கருப்பையா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் சித்திரைக்கனி, செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 
    ×