search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் விழா ரத்து"

    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட வருவார்கள்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கும்போது இங்கும் பண்டிகை தொடங்கிவிடும். பண்டிகை நாட்களில் அரண்மனை முன்பு ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். அதில் ஆடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் ஓணம் பண்டிகையான நேற்று அரண்மனை திறக்கப்படவில்லை. அரண்மனை வாசல் இழுத்து மூடப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அரண்மனை மூடப்பட்டிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டுதோறும் ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்படாதது பத்மநாபபுரம் பகுதி மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரண்மனை வாசல் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பத்மநாபபுரம் நகராட்சி துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் வினோத், நாகராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் குமரி ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போதிய நிதி இல்லாததால் இந்த ஆண்டு ஓணம் விழா கொண்டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா வழக்கம் போல் கொண்டாட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ×