search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரிசாவின் பாரம்பரியமான ஸ்வீட் சேனா போடா"

    • ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை.
    • `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம்.

    இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவுகளில், `சேனா போடா' எனப்படும் ஒருவகை இனிப்பு தனித்துவமான சுவை கொண்டதாகும். `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம். இது ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை. இந்த அற்புதமான சுவை நிறைந்த இனிப்பை நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்-கால் கிலோ

    சர்க்கரை- 1 கப்

    ரவை- 2 ஸ்பூன்

    நெய்- 2 ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா நட்ஸ்- 2 ஸ்பூன்

    திராட்சை- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பன்னீரை எடுத்து கைகளாலேயே நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே ரவை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, நெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து, பன்னீர் மற்றும் ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்தால், நல்ல கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதை அப்படியே நன்றாக சில நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருங்கள்.

    அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள கலவையில், காய்ந்த திராட்சை மற்றும் நட்ஸ்களைப் போட்டு கலக்கி விடவும். இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடலாம். அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அப்படியே சமமாகப் பரப்பி விடுங்கள்.

    இதை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் எளிதாக இருக்கும். இல்லை அடுப்புதான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவு ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடுங்கள்.

    பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள். மேல் பகுதி பொன் நிறமாக மாறியதும் நடுவில் ஏதேனும் குச்சியை வைத்து உள்ளே வெந்துவிட்டதா என குத்திப் பாருங்கள்.

    எல்லாம் சரியாக வெந்ததும் வெளியே எடுத்து, அந்த பாத்திரத்தில் இருந்து சேனா போடாவை வெளியே அகற்றி, அப்படியே சூடாக வெட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இதனுடன் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால், நீங்கள் சொர்க்கத்திற்கே சென்றது போல உணர்வீர்கள். நிச்சயம் இந்த உணவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

    ×