search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ் ஆதரவாளர்கள்"

    • கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உளவுப்பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடந்த 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.

    கோவை:

    கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகிய உளவுப்பிரிவுகள் உள்ளன.

    மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இப்பிரிவுக்கென தனி காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தொடர்பாக களத்துக்கு சென்று தகவல்களை சேகரித்து போலீஸ் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உளவுப்பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உளவுப்பிரிவுகளின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யும் வகையிலும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கவும், வி.ஐ.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தனியார் உதவியுடன் மாநகர போலீஸ் துறை சார்பில் ஆக்டோபஸ் என்ற பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மென்பொருள் மூலம் 1000 பேரின் சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த மென்பொருள் மூலம் மிக முக்கிய நபர்கள், அவர்களின் புகைப்படங்கள், குடியிருப்பு விவரங்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கையாகும்.

    அதேபோல் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக உள்ள கல்லூரிகள், அரசு, தனியார் பள்ளிகள், பெட்டிக்கடைகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களின் எண்ணிக்கை விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 200 பேரின் சுய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து அப்டேட் செய்து வருகிறோம். அதன்படி கடந்த 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் இந்த மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன.

    இதில் உள்ள விவரங்களை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் பார்க்கலாம். இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்து பிரத்யேக சர்வர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆக்டோபஸ் மென்பொருளில் உள்ள ஆவணங்கள் உளவுத்துறை தகவல்களை சரி பார்க்க அதிகாரிகளுக்கு உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். நடவடிக்கைகளை ஊக்குவிக்க நிதி திரட்டி உள்ளனர்.
    • திருச்சூரில் 3 இடங்களிலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.,

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்தது. மேலும் ஏ.டி.எம். கார்டுகளை திருடி அதன் மூலமும் பணத்தை அபகரிக்கும் சம்பவங்களும் அதிகளவில் நடந்தன.

    இவ்வாறு திருடப்படும் பணத்தை, அதனை திருடும் நபர்கள் இந்தியாவுக்கு எதிரான சதி செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. இதையடுத்து அவ்வாறு செயல்படும் நபர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது ஏ.டி.எம். கார்டுகள் திருட்டில் தொடர்புடைய ஆசிப் (வயது 35) என்பவரை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் பிடித்தனர். கேரள மாநிலம் திருச்சூர் படூரைச் சேர்ந்த அவருக்கு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதினர்.

    அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆசிப்பை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஆசிப்பும், மேலும் சிலரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் ஐ.எஸ். அமைப்பை ஊக்குவிப்பதற்கு பணம் வசூலில் அவர்கள் ஈடுபட்டதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கேரளாவில் பல சதித்திட்டங்களில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ஆசிப் கூறிய இந்த தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவரது கூட்டாளிகள் தொடர்பான தகவல்களை சேகரித்தனர். அதன்படி திருச்சூரை சேர்ந்த சையத் நபீல் அகமது, ஷியாஸ், பாலக்காட்டை சேர்ந்த ரயீஸ் ஆகிய 3 பேரை என்.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    பின்பு அவர்கள் 3 பேரையும் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். ஆசிப், சையத் நபீல் அகமது, ஷியாஸ், ரயீஸ் ஆகிய 4 பேரிடமும் என்.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் உள்ள கைது செய்யப்பட்ட 4 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

    அதில், பயங்கரவாதம் தொடர்பான முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கின. அவற்றை அவர்கள் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது கேரளாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும், சமூக தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டம் தீட்டியது தெரிய வந்தது. பயங்கர சதித்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதால் கேரளாவில் அவர்கள் நடத்த இருந்த பயங்கர செயலை முறியடித்து உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவை தளமாக கொண்டு உளவுப்பணிகளை மேற்கொண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்த ஐ.எஸ். அமைப்பினர் திட்டத்தை முறியடித்து உள்ளோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஐ.எஸ். நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும், கொள்ளை மற்றும் பிற குற்ற செயல்களை செய்வதன் மூலம் பயங்கர தாக்குதல்களை மேற்கொள்வதற்காகவும் நிதி திரட்டி வந்துள்ளனர்.

    நம்பகமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்பு படையுடன் உளவுத்துறை தலைமையில் கேரள என்.ஐ. கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு சதித்திட்டம் தீட்டியவர்களை பிடித்துள்ளது. மேலும் திருச்சூரில் 3 இடங்களிலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். நடவடிக்கைகளை ஊக்குவிக்க நிதி திரட்டி உள்ளனர். மேலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதி செய்து கொண்டிருந்தனர். மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் சில சமூக தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் சிக்கி விட்டனர். அவர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆசிப் உள்பட 4 பேரிடம் தொடர்பில் இருந்த மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை என்.ஐ. அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

    ×