search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் போராட்டம்"

    • மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
    • தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (வயது22). பி.ஏ. பட்டதாரி. இவர் அதே ஊரை சேர்ந்த தனாதிபதி மகன் அரிதாஸ்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் காதலித்து வந்த நிலையில், அரிதாஸ் சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சரண்யா தம்மை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அரிதாசை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அரிதாஸ், பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தியுள்ளார்.

    திருமணத்திற்கு தொடர்ந்து சரண்யா வற்புறுத்தி வந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமடைந்திருந்த சரண்யாவை தொழுதூர் அடுத்த கழுதூரில் உள்ள மருந்து கடைக்கு அழைத்துச் சென்று சத்து மாத்திரை என பொய் கூறி கர்ப்பத்தை கலைப்பதற்கான மாத்திரையை அரிதாஸ்கொடுத்துள்ளார். இதனால் சரண்யாவின் கர்ப்பம் கலைந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததையடுத்து, அரிதாசுக்கும் சரண்யாவுக்கும் 11.07.2021 அன்று சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். வெளியூர் சென்ற கணவன் நீண்ட நாட்களாக திரும்பி வராதது குறித்து அரிதாசின் பெற்றோரிடம் சரண்யா கேட்டபோது மாமனார் தனாதிபதியும் மாமியார் தமிழரசியும் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் சரண்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.

    இதனையடுத்து கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து சரண்யா கூறுகையில்,

    தன்னை காதலித்து கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து விட்டு தலைமறைவான அரிதாஸ் உடன் தன்னை சேர்த்து வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தனது கணவருடன் சேர்த்து வைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை எனவும் கூறினார். மேலும் தன்னை தாக்கிய மாமனார் தனாதிபதி மற்றும் மாமியார் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    • பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
    • திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி (24). பி.இ. பட்டதாரி.

    அந்தியூர் அடுத்த சமத்துவபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன், சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன் (30). டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், சிவரஞ்சனி- பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கணவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜலெட்சுமிக்கு கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
    • இடிந்து போன ராஜலெட்சுமி கணவரின் முகத்தையாவது பார்க்க வேண்டும் என அழுது புரண்டார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). இவரது மனைவி ராஜலெட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஹரித் (8), ஹர்சன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    உள்ளூரில் வேலை பார்த்து கிடைத்த வருமானம் குடும்பம் நடத்த சுரேசுக்கு போதுமானதாக இல்லை. குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க முடியாமல் தவித்தார்.

    வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கூறியதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் சுரேஷ் மேற்கொண்டார்.

    அதன்படி சுரேஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகின் பணக்கார நாடு என்று புகழப்படும் புருனே நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்றார். அங்கு 3 மாதம் வேலை பார்த்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து உடன் பணியாற்றும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் குணமடைந்து வருவதாக நண்பர்கள் மூலம் மனைவி ராஜலெட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கணவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜலெட்சுமிக்கு கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் பேரிடியாக கடந்த டிசம்பர் 25-ந்தேதி சுரேஷ் இறந்துவிட்டதாக அங்கிருந்த நண்பர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் இடிந்து போன ராஜலெட்சுமி கணவரின் முகத்தையாவது பார்க்க வேண்டும் என அழுது புரண்டார். ஆனால் ரூ.24 லட்சம் கட்டினால் மட்டுமே உடலை வாங்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து தனது கணவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தி கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு அளித்தார்.

    ஆனாலும் உடலை இதுவரை வாங்க முடியாத சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு தனது கணவர் உடலை பெற்றுத்தர வேண்டும் ராஜலெட்சுமி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கணவரை இழந்து வாடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    இறந்த கணவரின் முகத்தைக்கூட காணமுடியாமல் மனைவிக்கும், வாடிய முகத்துடன் தவிக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்கள் கூறும் ஆறுதல் போதுமானதாக இல்லை. குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று இறந்த கணவரின் உடலை வாங்க 15 நாட்களுக்கும் மேலாக கண்ணீருடன் போராடி வரும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

    ×