search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்பான நோய்"

    • நீரிழிவை ஒரு காலத்தில் பணக்கார நோய் என்று சொல்வார்கள்.
    • நீரிழிவு என்பது நாள்பட்ட உடல் நலக்கோளாறு.

    சர்க்கரை...

    வாயில் போட்டால் இனிக்கும்; அதனால் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவே உடம்பில் இருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்.

    சிலரிடம் கேட்டால் 'சர்க்கரை நோய்' என்ற `நீரிழிவு' ஒரு நோயே அல்ல என்பார்கள். ஆனால் விருந்தினர்களை வரவேற்பது போல் சிவப்பு கம்பளம் விரித்து பல நோய்களை வரவழைப்பதும் அதுதான். வந்த நோய்களை போக விடாமல் தடுத்து நிறுத்தி வைப்பதும் அதுதான்.

    நீரிழிவை ஒரு காலத்தில் பணக்கார நோய் என்று சொல்வார்கள். அதாவது வசதி படைத்தவர்கள்-சொகுசான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற ஒரு எண்ணம் அப்போது இருந்தது.

    ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வயது, தொழில், ஏழை-பணக்காரன் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் வருகிறது. சில குழந்தைகள் பிறக்கும் போதே சர்க்கரை நோயுடன் இந்த பூமிக்கு வரும் துரதிருஷ்டமும் நிகழ்கிறது. சர்க்கரை நோய் பற்றிய சில கசப்பான உண்மைகளை பார்ப்போம்...

    நீரிழிவு என்பது நாள்பட்ட உடல் நலக்கோளாறு. நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றுவதை இது பாதிக்கிறது.

     நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) ரத்தத்தில் கலக்கிறது. உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பு உற்பத்தி செய்யும் `இன்சுலின்' என்ற `ஹார்மோன்' ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.

    கணையம் போதிய அளவு இன்சுலினை உற்பத்தி செய்யவில்லை என்றாலோ அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் சரிவர பயன்படுத்தி கொள்ளா விட்டாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அப்படி அதிகரிப்பதைத்தான் நீரிழிவு நோய் என்கிறோம். இது ஒரு நாள்பட்ட தீராத நோய் ஆகும்.

    ஒருவருக்கு மரபு ரீதியாகவோ அல்லது சுற்றுப்புற சூழலை பொறுத்தோ நீரிழிவு நோய் வரலாம்.

    நீரிழிவு நோயில் முதல் வகை (டைப் 1), இரண்டாவது வகை (டைப் 2) என இரு வகைகள் உள்ளன. உடலில் காயங்கள் இருந்தால் மெதுவாக குணமடைவது, சரும அழர்ச்சி, மூக்கில் இருந்து நீர் வடிவது, வாந்தி, வயிற்று வலி ஆகியவை முதல் வகை நீரிழிவுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தோன்றிய சில வாரங்கள் அல்லது மாதங்களில் நீரிழிவு நோய் வரும். எந்த வயதிலும் இந்த முதல் வகை நீரிழிவு வரலாம். குழந்தைகள், பருவ வயதினர், இளைஞர்களுக்கு முதல் வகை நீரிழிவு வருகிறது.

    முதலாவது வகை நீரிழிவு இரண்டாவது நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் பலருக்கு இதுபற்றிய எந்த அறிகுறியும் தெரியாது.

    பெரும்பாலும் இளம் வயதில்தான் இரண்டாவது வகை நீரிழிவு தொடங்குகிறது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இரண்டாவது வகை நீரிழிவு ஏற்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரிக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருந்தாலும் ஒருவருக்கு அந்த வகை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    நீரிழிவு காரணமாக இதய மற்றும் சிறுநீரக நோய்கள், கண்பார்வை இழப்பு போன்றவை ஏற்படலாம்.

    உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது, உடற்பயிற்சி, சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்வது, ஆரோக்கியமான உணவு போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

     நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று சொல்வார்கள். தினமும் 45 நிமிடம் கையை வீசி வேகமாக நடக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் நீரிழிவு வராமல் தடுக்க முடியும் என்றும், ஏற்கனவே இருந்தாலும் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    நடப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடப்பதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அலுவலகங்கள் மற்றும் பெரிய கட்டிடங்களில் மின்தூக்கியை (லிப்ட்) பயன்படுத்தாமல் படிகளில் ஏறிச்செல்வது ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் அவர்கள் யோசனை தெரிவிக்கிறார்கள்.

    பொதுவாக இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் நடப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் மூலநோயை தடுப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.

    ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 3 நிமிடம் மிதமான வேகத்தில் நடந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறைவதாக இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டில் உலக அளவில் 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதாவது 53 கோடியே 70 லட்சம் பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த எண்ணிக்கை வருகிற 2030-ம் ஆண்டில் 64 கோடியே 30 லட்சமாகவும், 2045-ல் 78 கோடியே 30 லட்சமாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     பரிசோதனை செய்து கொள்ளாததால் தங்களுக்கு நீரிழிவு இருக்கிறது என்பது தெரியாமலேயே ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (44 சதவீதம்), அதாவது 24 கோடி பேர் அந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது வகை பாதிப்பு இருப்பதாகவும் ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் பரிசோதனை செய்து கொள்ளாததால், 90 சதவீதம் பேர் தங்களுக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    2021-ம் ஆண்டில் மட்டும் நீரிழிவு காரணமாக உலகம் முழுவதும் 67 லட்சம் பேர் இறந்து இருக்கிறார்கள்.

    உலகிலேயே அதிக அளவிலான நீரிழிவு நோயாளிகள் சீனாவில்தான் இருக்கிறார்கள். அங்கு 15 கோடி பேர் நீரிழிவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

    இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், மெக்சிகோ, வங்காளதேசம், ஜப்பான், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

    இந்தியாவில் 10 கோடியே 10 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11.4 சதவீதம் என்றும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 15.3 சதவீதம் பேர் நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் நீரிழிவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1990-ல் 2 கோடியே 50 லட்சமாகவும், 2016-ல் 6 கோடியே 50 லட்சமாகவும் இருந்தது. இப்போது அது 10 கோடியை தாண்டி இருப்பது, நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

    நம் நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் 90 முதல் 95 சதவீதம் பேர் இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகளே.

    இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மரபு, போதிய உடலுழைப்பு இன்மை, உடல் பருமன், மனஅழுத்தம், வாழ்க்கை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பெருநகரங்களில் மக்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறுவதும், மனிதர்களின் பல வேலைகளை எந்திரங்களே செய்துவிடுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    1950-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் மட்டுமே நகரங்களில் வசித்தனர். இப்போது 35 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கிறார். வேலைவாய்ப்பை தேடி ஏராளமானவர்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் நகரங்களில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது.

    இதனால் நகரங்களில் வசிப்போருக்கு வீடு, குடிநீர், போக்குவரத்து பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு அதிகரித்தல் போன்றவை காரணமாக மனஅழுத்தம் ஏற்படுகிறது. நகரங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரம் பேர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில் அதிகபட்சமாக கோவாவில் 26.4 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேரும், கேரளாவில் 25.5 சதவீதம் பேரும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    மக்கள் தொகை அதிகமுள்ள உத்தரபிரதேசத்தில்தான் குறைந்த அளவாக வெறும் 4.8 சதவீதம் பேருக்கே நீரிழிவு உள்ளது. என்றாலும் அங்கு நீரிழிவு வரக்கூடிய நிலையில் 18 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இது தேசிய சராசரியை (15.3 சதவீதம்) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனா, இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளிலுமே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 130 கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்காவில் 3 கோடியே 73 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் 11.3 சதவீதம் ஆகும். நீரிழிவுக்கு ஆளானவர்களில் 2 கோடியே 64 லட்சம் பேர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஆவார்கள்.

    குழந்தைகளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு 2020-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

    இந்தியாவில் நிகழும் மரணங்களில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் நீரிழிவு காரணமாக ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றால் 70 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.

    2019-ம் ஆண்டு சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலகையே முடக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்று, சர்வதேச அளவிலான சுகாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை நன்கு அறிவோம். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் கொரோனாவின் அச்சுறுத்தல் முடிந்தாலும், அதன் பாதிப்பு ஏதாவது ஒருவகையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மறதி ஏற்படுவதாக ஒரு கருத்து உள்ளது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு பின், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகள் மூலம் இன்சுலின் சுரப்பி பாதிக்கப்பட்டு அதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந்தேதி உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தாக்கத்தை எந்தெந்த வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உணவு முறையின் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அரிசி உணவை குறைத்துக்கொண்டு முடிந்தால் தவிர்த்து கம்பு, சோளம், சாமை போன்ற சிறுதானியங்களையும், பருப்பு வகைகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

    சர்க்கரை நோய் ஓர் அழையா விருந்தாளி. அந்த விருந்தாளியை யாரும் விரும்புவதில்லை. ஆனால் வந்துவிட்டால் போவதும் இல்லை. எனவே சமாளித்துத்தான் ஆகவேண்டும்.

    ×