search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய இஸ்ரேல் உறவு"

    • இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்
    • இஸ்ரேலுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி 2017ல் சென்றார்

    கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியது. மேலும் தரைவழியாகவும், நீர்வழியாகவும் தாக்குதல் நடத்தியது. இதில் 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

    இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் அறிவித்து ஹமாஸ் பயங்கரவாதிகளை தீவிரமாக வேட்டையாடி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. பலியான அப்பாவி இஸ்ரேலிய பொது மக்களின் குடும்பங்களுக்கு எங்களின் பிரார்த்தனைகள். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறது" என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    "இந்தியா, உலகில் ஒரு முக்கியமான நாடு. பயங்கரவாதத்தை குறித்த முழுமையான புரிதல் இந்தியாவிற்கு உள்ளதால் இஸ்ரேலை ஆதரிக்கிறது", என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் (Naor Gilon) தெரிவித்தார்.

    பல தசாப்தங்களாக நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியா, இஸ்ரேலை ஆதரித்ததில்லை. தற்போது இந்தியா எடுத்திருக்கும் ஆதரவு நிலை பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    1962ல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இந்தியா, இந்திய-சீன போரில் இஸ்ரேலின் உதவியை பெற்றாலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கிடையே சமமான பார்வையை கொண்டிருந்தது.

    1970-களில், பாலஸ்தீன ஆதரவு நிலை எடுத்த ஒரே அரபு நாடுகளல்லாத தேசமாக காங்கிரஸ் சார்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா இருந்து வந்தது.

    2000-வது ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் மத்திய அமைச்சராக இருந்தவர் எல்.கே. அத்வானி. அதே வருடம், இஸ்ரேலுக்கு செல்லும் முதல் வெளியுறவு துறை அமைச்சர் எனும் அந்தஸ்தை பெற்றவர் அவர் அரசை சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.

    2003ல் வாஜ்பாய் அரசு நடைபெறும் போது இந்தியாவிற்கு வந்த முதல் இஸ்ரேலிய பிரதமர் எனும் அந்தஸ்துடன் ஏரியல் ஷெரோன் இங்கு சிறப்பான உபசரிப்பை பெற்றார்.

    2004-2014 காலகட்டத்தில் பாலஸ்தீனிய ஆதரவு நிலையை விட்டு கொடுக்காமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இஸ்ரேலுடன் உறவை வளர்த்தது.

    2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமரானார். அப்போது முதல் இஸ்ரேல்-இந்திய உறவு வலுப்பெற தொடங்கியது. பிறகு 2014, 2015, 2016 ஆகிய வருடங்களில் இரு தரப்பு முக்கிய தலைவர்களின் பரஸ்பர வருகை அதிகரித்தது. இரு நாடுகளுக்கிடையே பல ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் அளவிற்கு உறவு வலுவடைந்தது.

    2017ல் மோடி இஸ்ரேலுக்கு சென்றதன் மூலமாக இஸ்ரேலுக்கு செல்லும் 'முதல் இந்திய பிரதமர்' எனும் அந்தஸ்தை பெற்றார்.

    தற்போது இந்தியா வெளிப்படையாக இஸ்ரேல் ஆதரவை எடுத்திருப்பது அதன் வெளியுறவு கொள்கையில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள போதெல்லாம் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்து வருவதாக அரசியல் விமர்சிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×