search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சியாளர்"

    தமிழகத்தில் எதை பற்றியும் கவலைப்படாத ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலையை உருவாக்கி தர மக்கள் தயாராக இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #MKStalin #DMK

    மதுரை:

    தி.மு.க. மாநில விவசாய அணி துணைச்செயலாளர் மதுரை சம்மட்டிபுரம் கணேசன் மகன் ராஜகோடி-அன்னபூரணி திருமணம் இன்று மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது சீர்திருத்த திருமணம், சுயமரியாதை திருமணம் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற இந்த நேரத்தில் நான் ஒரு தகவலை சொல்லாமல் இருக்க முடியாது. அது எனது கடமையும்கூட.

    ஒரு காலத்தில், அதாவது 1976-ம் ஆண்டுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்கள் நடந்தாலும் அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அப்போது இல்லை. 1969-ம் ஆண்டுக்கு பின்னர் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. 3 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ் நாடு என மாற்றுவது. இருமொழி கொள்கையை அமுல்படுத்துவது. 1967-ம் ஆண்டுக்கு முன்பு நடந்த சீர்திருத்த திருமணங்களை சட்டப்படி செல்லும் என தீர்மானிப்பது ஆகியவை அவை.

    சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட ரீதியிலான ஆணையை பெற்றுத்தந்தது தி.மு.க. கணேசன் இல்லத்தில் சீரும், சிறப்புமாக நடைபெறும் இந்த திருமணம் தன்மான திருமணம், தமிழ் திருமணம், தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்த மதுரையில் நடக்கும் இந்த திருமணத்தில் மணமக்களை வாழ்த்த கடமைபட்டுள்ளேன். இந்த திருமணத்தில் நான் பங்கேற்றது கணேசனைவிட எனக்கு பெருமகிழ்ச்சி.

    முந்தைய காலக்கட்டத்தில் சீர்திருத்த திருமணங்கள் என்றால் கேலி செய்வார்கள். கிண்டல் செய்வார்கள். எள்ளிநகையாடுவார்கள். ஏகடிகம் பேசுவார்கள். ஆனால் இப்போது சமூகத்தில் ஏராளமான சீர்திருத்த திருமணங்கள் நடக்கின்றன. வைதீக திருமணங்களுக்கு புரோகிதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு கிராக்கி உண்டு.

    சீர்திருத்த திருமணங்களை நாங்களே புரோகிதர்களாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறோம். இது நல்ல மாற்றம். நல்ல புரட்சி. இதற்கு வித்திட்ட பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை வாழ்த்த கடமை பட்டுள்ளோம்.

    மதுரை மக்களுக்கு நான் தெளிவாக விளக்கி சொல்ல வேண்டியதில்லை. நாடு இன்று இருக்கும் நிலை கவலைக்குரியது. திருமண விழாவில் அரசியல் பேசலாமா? என்று கூறுவார்கள். ஆனால் நான் அரசியல் பேசாமல் இருந்தால் கணேசனுக்கு கோபம் வந்துவிடும். சீர்திருத்த திருமணங்களில் நடைபெறும் நிகழ்வு கட்சிக்கும், மணமக்களுக்கும் பயன்படுவதாய் அமைய வேண்டும்.

    1975-76ம் ஆண்டுகளில் தமிழகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அரசியல் மேடைகளில் அரசியல் பேச முடியாது. அத்தகைய காலக்கட்டங்களில் தலைவர் கலைஞர், திருமணம் வாயிலாகத்தான் நாட்டு நடப்பு மற்றும் அரசியல் சூழ்நிலைகளை பொதுமக்களிடம் வெளிபடுத்தி வந்தார்.


    தென்மாவட்டம் தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த துயர சம்பவம் பற்றி நான் விரிவாக சொல்ல வேண்டியதில்லை. இதற்கு யார் காரணம்? யாரெல்லாம் துணைபோனார்கள்? ஏன் அப்படியான நிலை வந்தது? என்பதை பொதுமக்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம்.

    தமிழகத்தில் தகுதியற்ற, திறமையற்ற ஆட்சி நடக்கிறது. மத்தியில் சிந்தனையே இல்லாதவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். சென்னையில் பத்திரிகையாளர்கள் என்னிடம் மோடி ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனையாக எதை சொல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த நான், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அனுதாப செய்திக்கூட வெளிப்படுத்தாத ஆட்சிதான் மோடியின் சாதனை என்று சொன்னேன். அப்படியான நிலையில்தான் நாம் உள்ளோம்.

    4 நாட்கள் தமிழகம் கொளுந்துவிட்டு எரிகின்ற நிலையில் இந்த ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட, புத்தி புகட்ட வேண்டிய நிலையை உருவாக்கித்தர நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மணமக்கள் பட்டதாரிகள். அவர்களுக்கு நாட்டு நடப்பு நன்கு தெரியும். நான் இங்கு பேசும்போது மணமக்களின் பெயருக்கு பின்னால் உள்ள படிப்பையும் குறிப்பிட்டேன்.

    தமிழகத்தில் பெயருக்கு பின் பட்டங்கள்போடும் சூழ்நிலையை உருவாக்கி தந்த பெரியார், அண்ணா, கலைஞர் நினைவை போற்ற வேண்டியது நமது கடமை. மணமக்கள் வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டர்களாகவும் இருந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK

    ×