search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தியில் ராமர் கோவில்"

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர் கூறினார். #SriSriRaviShankar #RamTemple
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக மீண்டும் வலுத்து வருகிறது. அங்கு சர்ச்சைக்குரிய பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

    இந்த விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மடாதிபதிகள் டெல்லி டல்கட்டோரா மைதானத்தில் 2 நாள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 2-ம் நாளான நேற்று பங்கேற்று உரையாற்றிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தலையிடக்கூடாது என தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அயோத்தி விவகாரத்தில் 3 பிரிவினரும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான ஒரு முடிவை எட்ட வேண்டும். இதில் சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு இரண்டாம்பட்சமாகவே இருக்கவேண்டும். இதில் கடைசி வாய்ப்பாகவே நாட்டின் சட்டத்துறை (அவசர சட்டம்) தலையிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    நாடு முழுவதிலும் இருந்து சாதுக்கள், மடாதிபதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், நியாஸ் பரிஷத் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி, ராமபத்ர ஆச்சார்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரவிசங்கர், ராமர் கோவில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், சிரியாவை போல இந்தியாவிலும் உள்நாட்டுப்போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். நல்லெண்ண நடவடிக்கையாக அந்த இடத்தை முஸ்லிம்கள் விட்டுத்தர வேண்டும் என வலியுறுத்திய அவர், ராம பிரானின் பிறப்பிடத்தை நாம் மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார்.

    ரவிசங்கரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு அதிருப்தி வெளியிட்டனர். எனவே தனது கருத்துக்கு விளக்கம் அளித்த ரவிசங்கர், சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவதால் நாட்டில் ரத்தம் சிந்தப்படும் என தான் கூறவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அருகே மசூதி கட்டுவதை இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என மத்திய மந்திரி உமா பாரதி கூறியுள்ளார். இந்துக்கள்தான் உலகிலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் எனக்கூறிய அவர், ஆனால் ராமரின் பிறப்பிடமான அயோத்தியாவில் மசூதி கட்டுவதன் மூலம் இந்துக்களை சகிப்புத்தன்மையற்றவர்களாக மாற்ற வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்து கட்சிகளின் உதவியை கேட்பதாக கூறிய உமாபாரதி, அங்கு தன்னுடன் இணைந்து ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சமீப காலமாக அரங்கேறும் நிகழ்வுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தவே இந்த பிரச்சினைகள் அரங்கேறுவதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி கூறினார்.

    ராமர் கோவிலுக்காக சங் பரிவார் அமைப்புகள் போராட்டம் நடத்த தயங்காது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் எனவும், மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார். 
    ×