search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணையா விளக்கு"

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அகல் விளக்குகள் விற்பனை தடை செய்யப்பட்டு, கோவிலில் அணையா விளக்கு வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர். இதனையொட்டி கோவில் நிர்வாகம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக அகல் (நெய், எண்ணெய்) விளக்கினை விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்து வந்தது.

    இந்தநிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அகல் விளக்கு விற்பனையை முழுமையாக தவிர்ப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி சிறிது சிறிதாக அகல் விளக்கு விற்பனையை குறைத்து வந்தனர்.

    இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி நடப்பு பசலி ஆண்டான வருகிற (ஜூலை) 1-ந்தேதி முதல் அகல் விளக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக பாதுகாப்பான முறையில் விளக்கேற்ற அணையா (வாடா) விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்ணாடி குவளையில் முக்கோண வடிவில் சுமார் 3 அடி உயரத்தில் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

    அணையா விளக்கின் மேல் பகுதியில் நெய் ஊற்றுவதற்காக குவளை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விளக்கு 24 மணி நேரமும் (கோவில் நடை சாத்திய பின்பும்) அணையாமல் தீபம் பிரகாசிப்பதற்காக விளக்கின் மைய பகுதியில் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

    விளக்கின் அடிப்பகுதியில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட வடிக்கட்டிய நெய்யை சேமிக்க கூடிய பாத்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் நெய்யை ஊற்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா விளக்கு கோவிலுக்குள் 6 இடங்களில் வைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலிலும் ஒரு அணையா விளக்கும் வைக்கப்பட உள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அகல் விளக்குகள் விற்று கோவிலுக்கு வருமானத்தை பெற்று தந்த கோவில் நிர்வாகம், அணையா விளக்கில் தீபம் ஏற்றுவதற்காக, 50, 100 கிராம் நெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைய துறை கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    ×