search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman road blocked"

    பெரியபாளையம் அருகே குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே மெய்யூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு, பள்ளத்தெரு, பாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

    இதனை கண்டித்தும், குடிநீர் வழங்ககோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூரில் இருந்து மெய்யூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடுமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது மெய்வாடி. இங்குள்ள கிராமத்தையொட்டி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு அமராவதி மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 25 நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை உடுமலை- பழனி சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் உடுமலை டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்தியூரில் இன்று காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் 7-வது வார்டில் உள்ள சிவசக்தி நகரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வரவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் இன்று காலை திடீரென அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலிகுடங்களுடன் பெண்கள் நடுரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். மறியல் நடத்திய பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் வில்லியம் ஏசுதாசும் அங்கு வந்தார்.

    “வெள்ளம் காரணமாக பம்ப்பிங் தொட்டி (கிணறு) பகுதியில் சேறும் சகதியும் அடைத்து உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இவை சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்கப்படும்” என்று வில்லியம் ஏசுதாஸ் கூறினார். இதையொட்டி பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    திண்டுக்கல் பாரதிபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாரதிபுரம் தீப்பெட்டி காலனி தெரு, சைக்கிள் காலனி தெரு, டிப்போ ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இது குறித்து பொதுமக்கள் பல முறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 3 மாதத்துக்கு முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது தண்ணீர் வரவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று பாரதிபுரம் மெயின்ரோடு பகுதியில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் செய்தனர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    பொது மக்கள் தெரிவிக்கையில், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது மழை நீரை பயன்படுத்தி வந்தோம். தற்போது மழையும் இல்லாததால் குடிநீருக்கும், வீட்டு உபயோகத்திற்கும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வழங்கா விட்டால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

    ×