search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Violence Against Women"

    ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும்.
    இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. 2014-ம் ஆண்டில் 89 ஆயிரமாகவும், 2015-ல் 94 ஆயிரமாகவும் இருந்த குற்றங்கள், 2016-ல் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை வழக்குகள் 2015-ல் 319 ஆக இருந்தது, 2016-ல் 421 ஆக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் காதுகேளாத சிறுமிக்கு பலரால் ஏற்பட்ட விபரீதம்போல் இப்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    எங்கோ யாருக்கோ நடந்தது என்று தாய்மார்கள் இனியும் கருதிக்கொண்டிருக்காமல், இந்த பிரச்சினை தன் வீட்டு குழந்தைகளையும் பாதிக்காமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். அப்படி ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் வீட்டில் இது போன்ற பாதிப்பு உருவாகாமல் தடுத்தால்தான், ‘இது நம்ம நாடு.. இனி இது நடக்கக்கூடாது..’ என்ற நிலையை உருவாக்கமுடியும்.

    “பள்ளிக்கு செல்லும் உங்கள் குழந்தைகளோடு நீங்கள் இரவு உணவு சாப்பிடும்போது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் டெலிவிஷனில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது உங்கள் கவனம் முழுவதும் அதில்தான் பதிந்திருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையிடம் மனம்விட்டுப்பேச வேண்டிய பொன்னான நேரத்தை இழந்துவிடுகிறீர்கள்.

    அந்த நேரத்தில் சுமுகமான சூழலை உருவாக்கி, அமைதியாக அன்றாட நிகழ்வுகளை பேசும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தால் உங்கள் மகள் பள்ளி வாகனத்திற்கு காத்திருந்தது முதல், அதில் ஏறியது, பயணம் செய்தது, அந்த டிரைவர் தன்னோடு நடந்துகொண்டது, பள்ளியை சென்றடைந்தது.. பள்ளியில் நடந்தது.. என்று ஒவ்வொன்றையும் உங்களிடம் கூறுவாள். அப்போது எங்கேயாவது பிரச்சினைக்குரிய விஷயம் நடந்திருக்கிறதா? பாலியல் தொந்தரவு ஏதேனும் நடந்துள்ளதா? என்பதை தாய்மார்களால் கண்டறிந்துவிட முடியும்.

    அதுபோல் பேசி, சிரித்து, விளையாடி, குழந்தைகளுக்கு சோறூட்டினால், குழந்தை மகிழ்ந்து தாயிடம் எல்லாவற்றையும் பேசும். அப்படி பேச வேண்டிய குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து அதற்குள் அதனை சிறைபடுத்திவிடுகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் குழந்தைகளுக்கு பேசுகின்ற வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொடுத்தால்தான், தங்களுக்கு ஏற்படும் அதுபோன்ற அவஸ்தைகளை அவர்கள் தாயிடம் சொல்வார்கள்.

    பெரும்பாலான பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளுடன் எப்படி பொழுதுபோக்குகிறீர்கள்? என்று கேட்டால், சினிமாவுக்கு போகிறோம்- மாலுக்கு போகிறோம்- சுற்றுலாவுக்கு போகிறோம் என்று சொல்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்று குழந்தையோடு இருட்டறையில் அமர்ந்து, திரையையே பார்த்துக்கொண்டிருப்பதை, குழந்தையுடன் நேரத்தை செலவிடுதல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

    அதுபோல் ஷாப்பிங் செல்வதும், அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் குழந்தையுடனான பொழுதுபோக்கு அல்ல. குழந்தையோடு சுற்றுலாவுக்கு சென்று, அங்கே ஓய்வின்றி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து பார்த்துவிட்டு, அந்த நேரத்தை எல்லாம் குழந்தையோடு செலவிட்டேன் என்று கூறுவதும் சரியல்ல. குழந்தைக்கான நேரத்தை அதனோடு மட்டும் செலவிடவேண்டும். அந்த நேரத்தில் வேறு தொந்தரவோ, அடுத்தவர்களின் தலையீடோ இருக்கக்கூடாது.

     

    அப்போது அது மனம்விட்டுப் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால், குழந்தையின் மனதில் இருக்கும் எல்லா விஷயங்களும் வெளிவரும். எல்லாவித சந்தேகங்களுக்கும் அது தாயிடம் விடைதேடும். அதை நுட்பமாக கவனித்தால் குழந்தைக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் ஏதாவது நடந்திருந்தால், நடந்துகொண்டிருந்தால், தெரிந்துவிடும். முளையிலே அதனை கிள்ளி எறிந்துவிடலாம்..

    “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்காக நாம் அரசாங்கத்தையோ, சமூகத்தையோ குறை சொல்லிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும். குழந்தை பள்ளியில் இருந்து வந்த உடன் என்ன படித்தாய்? எவ்வளவு மதி்ப்பெண் வாங்கினாய்? ஆசிரியர் உன்னை பாராட்டினாரா? என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கிறார்கள். வேனில் என்ன நடந்தது? வேன் டிரைவர் எப்படி நடந்துகொண்டார்? பள்ளியில் என்னவெல்லாம் நடந்தது? என்று கல்விக்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பு விஷயங்கள் பற்றியும் பேசவேண்டும்.

    பல தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். நான் சொல்வதைகேள், ஒழுங்காக இருந்து படி, தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசாதே, சும்மா இருக்காதே எதை யாவது செய்.. என்று கட்டளையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி கட்டளையிடும்போது தாய், குழந்தைக்கு இடையேயான சுமூக உறவில் முட்டுக்கட்டை விழுந்து விடும்.

    அந்த குழந்தை தாயிடம் மனந்திறந்து பேசாது. அப்படி பேசாதபோது குழந்தைக்கு பாலியல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது தாய்க்கு தெரியாமல் போய்விடும். பொதுவாக பெண் குழந்தை வயதுக்கு வந்த பின்பே தாயார் அதன் மீது அதிக கவனம் செலுத்துகிறார். 9,10 வயது சிறுமிகளுக்கு பாலியல் பாதிப்பு எதுவும் நடக்காது என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். பத்து வயது சிறுமி, அவளது பெற்றோருக்கு மட்டும்தான் குழந்தை. அவளை பார்க்கும் அனைவரும் அவளை குழந்தையாக தான் நினைப்பார்கள் என்று தவறாக கருதி விடக்கூடாது.

    ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ‘யாரும் குழந்தைகளை எந்த ‘டச்’சும் செய்யக்கூடாது’ என்று வலியுறுத்துங்கள். ‘பெற்றோரும், டாக்டரும் தவிர வேறு யாரும் உன்னை எக்காரணத்தைக் கொண்டும் தொட அனுமதிக்காதே. எந்த உறுப்பு என்றில்லை. உன் உடல் முழுக்க பொக்கிஷம்தான். எங்கே தொட்டாலும் நீ தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். தற்காப்புக் கலையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    முன்பு கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. பாட்டிகள் தனது பேத்திகளிடம் மனம்விட்டுப்பேசி அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அறிந்துவிடுவார்கள். நேரத்தை செலவிட்டு குழந்தைகளை பக்குவப்படுத்தி வளர்ப்பார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் இல்லாததால் எதற்கெடுத்தாலும் உடனே ‘சைக்காலஜிஸ்ட் ஒப்பீனியன்’ கேட்க செல்கிறார்கள். குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டு, மனோதத்துவம் பேசி பலனில்லை.

    பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதுபோல், ஒவ்வொரு தாயும் தனது ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்கவேண்டும். 
    பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.
    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வந்த தாம்சன் ராயிட்டர்சின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கிளப்பிய அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. வேறு சில நிகழ்வுகளால், பரபரப்புகளால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அந்த கருத்துக் கணிப்பு பற்றிய விவாதங்கள் எங்காவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    இந்த கருத்துக் கணிப்புக்கு இந்தியாவின் முதல் எதிர்வினை, மறுப்புதான். முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் பிரச்சினை என்று பல சாக்கு போக்குகளை இந்திய அரசும் அதன் பிரதிநிதிகளும் சொல்லி வந்ததை ஊடகங்களில் பார்த்தோம். இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணை வேறு எப்படியாவது அவமானப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினையில்லை. பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.

    ஆனால் எண்ணிக்கையை துறப்பதன் மூலம் தனக்கான பொறுப்பிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொள்கிறதோ? என்கிற சந்தேகத்தை இந்த கருத்துக் கணிப்பு குறித்த அதீதமான எதிர்வினைகள் ஏற்படுத்தியிருக்கிறன.

    இந்த கருத்துக் கணிப்பு வெளியான பிறகு நம் கவனத்திற்கு வந்த வன்முறை சம்பவங்களில், மூன்றே மூன்று சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.

    சமீபத்தில் ஜெய்ப்பூர் அருகில் 70 வயது பெண் ஒருவரை 21 வயது ஆண் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கும் போது, அந்த பெண் அதை தடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு காயம் பட்டு, சில நாட்களில் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.

    இது சென்னையில் நடந்தது. பத்து வயது சிறுமியை பாலியல் ரீதியில் சீண்டி துன்புறுத்தியதற்காக 99 வயது நபர் ஒருவர் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



    இந்த துயரம் அடங்குவதற்குள், சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஊழியர்கள், காவலாளிகள் என 15-க்கும் மேற்பட்டோர் 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு மேல் இன்னும் என்ன நடக்க வேண்டும்?

    இப்படி, ஒவ்வொரு நிமிடமும் நாம் கேள்விப்படும் எண்ணற்ற வன்முறைகளில் இது மூன்றையும் குறிப்பிட்டுச் சொன்னதற்கு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வயதையும், முதல் இரண்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களின் வயதும் தான் காரணம். அதாவது, எவ்வளவு வயதானாலும் பெண்ணுக்கு பாதுகாப்பும் இல்லை, ஆணுக்கு பொருட்டும் இல்லை.

    இந்த இரண்டு பெண்களில் யாரிடமும் சென்று இந்தியா பெண் மீதான வன்முறையில் முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் தவறு இருக்கிறது என்று வகுப்பெடுப்பது எவ்வளவு அபத்தமானதாக, பொறுப்பற்ற செயலாக இருக்கும்? இங்கு வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தியா அந்த அநீதியைத்தான் இழைத்திருக்கிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண் மீதான வன்முறை என்பது அவள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. பெண் கருக்கொலை இப்போதும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பெண் பாகுபாட்டை சந்திக்க வேண்டியிருக்கிறது.

    கல்வி, தொடர்ந்து வேலைவாய்ப்பு, திருமணம், பதவி உயர்வு போன்ற பல விசயங்களிலும் தொடர்ந்து பாகுபாட்டை சந்திக்கும் பெண்கள் கூடுதலான உழைப்பை செலுத்திதான் ஒவ்வொரு தடையையும் உடைத்தெறிய வேண்டியிருக்கிறது.

    பாகுபாடு என்னும் வன்முறையை ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் மீதும் எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி இந்திய சமூகம் ஒவ்வொரு நொடியும் ஏவிக்கொண்டிருக்கிறது. இது தவிர, பாலியல் சீண்டல்களையும் வன்முறைகளையும் குடும்பத்திற்குள்ளும், வெளியிடங்களிலும், பொது இடங்களிலும் எதிர்கொள்ளாத பெண்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள் அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள்.

    பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் ஒரு இயல்பாக இருக்கிறது. சமூக ரீதியாகவே பாகுபாட்டை இந்தியா வளர்த்தெடுக்கிறது. பாகுபாடு, வன்முறைக்கு வழிவகுக்கிறது. நிர்பயா போன்ற மிக மோசமான வன்முறைகளுக்கு ஆளானோருக்கு கிடைக்கும் கவனமும் அழுத்தமும் ஒவ்வொரு நொடியும் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிற இந்தியப் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இங்கு ஆகப்பெரிய அநீதி.

    நிர்பயாவுக்கு கிடைத்த நீதியை குறை சொல்வது இங்கு நோக்கமல்ல; அந்த நீதியின் வெளிச்சம் பிற இந்தியப் பெண்கள் மீதும் கொஞ்சம் படர வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    இதை எல்லாம் பற்றி நியாயமான கவலை கொள்ளும் ஒரு அரசு, முதலிடமா? மூன்றாம் இடமா? என்பதில் புழுங்காமல் தீர்வு நோக்கி நகர வேண்டும். சமூகத்தின் இயல்பாக மாறியிருக்கும் பாகுபாட்டை கலைக்கும் திட்டத்தை உருவாக்கி அதை எல்லா நிலைகளிலும் அமல்படுத்த வேண்டும். பெண் மீதான வன்முறை சட்டம் மூலமாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.

    அது வரை பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் மீதான தீராத களங்கமாக சர்வதேச அரங்கில் தொடரும். அதை துடைத்தெறிவதற்கான வழி, எண்ணிக்கையில் இல்லை, செயல்பாட்டில் இருக்கிறது.

    ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்
    பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும்.
    பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

    காலத்திற்கு ஏற்ற விஷயங்கள் என்பவை எவை?

    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

    இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

    பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண் களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.



    செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

    பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.

    காதலில் சிக்கும் பெரும்பாலான பெண்கள் பயந்துவிடுகிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கமுடியும். ஒன்று, காதலர் ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து அவளை மிரட்டலாம். அவள் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பது போலெல்லாம் பேசி அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தலாம். இரண்டு, அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எதையாவது உருவாக்கிவைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட மிரட்டலுக்கு உள்ளாகி ஏற்கனவே மிரண்டு போயிருக்கும் பெண்ணை பெற்றோரும் தங்கள் பங்குக்கு மிரட்டினால் அவள் மனதளவில் நொறுங்கிப்போய்விடுவாள்.

    அதனால் பெற்றோர் அவள் நம்பிக்கையை பெற்று, பக்குவமாக பேசி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவள் உண்மையை சொன்ன பிறகு, ‘நடந்தது நடந்துவிட்டது. நீ எதற்கும் கவலைப் படாதே. எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையூட்டவேண்டும். நம்பிக்கைதான் இந்த பிரச்சினையை தீர்க்கும். மாறாக மகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும்.



    இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும். உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

    உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

    படித்துக்கொண்டிருக்கும் மகள் காதல் வசப்பட்டால், அவள் அவனை ‘உலகிலே மகா யோக்கியன்’ என்பாள். அதை அப்படியே தாய் நம்பிவிடக்கூடாது. ஒருவேளை அந்த பையன் வசதிபடைத்தவனாக இருப்பான். அதனால் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி, அந்த காதலை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. ‘இப்போது நீ படிக்கவேண்டும். அதுமட்டுமே உன்வேலை. காதலை எல்லாம் உடனே ஒதுக்கிவிடு’ என்று கூறி, படிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் நினைவுபடுத்துங்கள். எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கிவிடுவாள்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவரின் ஆலோசனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத்  தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.

    ஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல்
    இயல்பாகப் பேசி பழக வேண்டும். எப்போதும் மனதில் பாலியல் சார்ந்த விஷயத்தையே நினைப்பது, படங்கள் பார்ப்பது போன்றவையிலிருந்து வெளிவர வேண்டும்.

    இதுபோன்ற மாற்றங்கள் நிகழ, பாடத்திட்டத்தில் செக்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாலியல் கல்வியை அமைக்க வேண்டும்.முக்கியமாக, பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.

    ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளை தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும், பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிற பெண்கள் பயந்த மற்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

    மேலும் சக மனிதரை நேசிக்கும் பண்பு, மனிதநேயம், ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்துவது பாவம்; தவறு என்று ஆண்கள் உணரும் ஆரோக்கிய சமுதாயமாக நாம் உருவாகும்போது பாலியல் பலாத்காரம் எனும் ஈன கொடிய செயலை இல்லாமலே ஆக்க முடியும்’’.
    பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும், அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை.

    காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது. நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது.

    உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.

    பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை.



    பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும்.

    எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

    பெண்களின் உடை,  நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள்,  பணிக்கு செல்லும் தங்களின் மனைவி,  சகோதரி,  மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.
    ×