search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati brahmotsavam"

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா 3-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை மலையப்ப சாமி சின்ன சே‌ஷ வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமி வேடம் அணிந்தும், பெண்கள் கோலாட்டம் நடனமாடியும் ஊர்வலம் முன்பு வந்தனர்.

    3-ம் நாளான இன்று காலை 9 மணிக்கு மலையப்ப சாமி சிம்ம வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு முத்து பல்லக்கு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நேற்று பக்தர்கள் ரூ.1 கோடியே 90 லட்சம் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம் மோற்சவ விழா நேற்றுமாலை கொடி யேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. முதல் வாகன புறப்பாடாக நேற்றிரவு பெரிய சே‌ஷம் எனும் 7 தலைகளுடன் கூடிய தங்க நாக வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார்.

    பாற்கடலில் மகாவிஷ்ணுவை எப்போதும் தன் உடலால் தாங்குபவர் ஆதிசே‌ஷன். ஆதிசே‌ஷனின் வடிவமாக கருதப்படுவது 7 தலைகள் கொண்ட பெரிய சே‌ஷ வாகனம். இதனால், ஆதிசே‌ஷனுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் முதல் வாகனமாக பெரிய சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம், வழக்கமாக இரவு 9 மணிக்கு தொடங்கும் வாகனசேவையை இம்முறை 8 மணிக்கே நடத்தியது. இரவு 8 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற பெரிய சே‌ஷ வாகனத்தின் முன்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய கலைக் குழுவினர் ஆடல், பாடலுடன் மேளதாள வாத்தியங்களை இசைத்தனர்.

    பிரம்மோற்வ விழாவின் 2-ம் நாளான இன்றுகாலை சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி உலா வந்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டு வணங்கினர்.

    இதைத்தொடர்ந்து, இன்று இரவு தங்க அம்ச வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பவனி வருகிறார். நாளை காலை சிம்ம வாகன த்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 16-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், அன்றிரவு சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை, 17-ந் தேதி இரவு நடக்கிறது. கருட சேவையை தரிசிக்க சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. #tirupati #tirupatibrahmotsavam
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் மாட வீதிகளில் வாகனங்களில் சாமி ஊர்வலம் நடக்கிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை நாளை காணிக்கையாக வழங்குகிறார். விழாவின் முக்கிய நாளான 17-ந் தேதி கருட சேவையும், 18-ந் தேதி மாலையில் தங்க ரத ஊர்வலமும், 20-ந் தேதி காலை தேர்த் திருவிழாவும், 21-ந் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். கருட சேவையின் போது, கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் 21-ந் தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா வினைக்காண வசதியாக 31 இடங்களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 11 முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

    கருட சேவை நாளில் ரூ.300 மற்றும் சிறப்பு சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது. இதேபோல் 16, 17 ஆகிய 2 நாட்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களின் விநியோகமும் நிறுத்தப்படும். கருட சேவையன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

    பக்தர்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் போது கூட்டத்தில் குழந்தைகள் காணாமல்போவதை தடுக்க குழந்தைகளின் கைகளில் ஒரு மென்பொருள் சாதனம் அடங்கிய கயிறு கட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதையொட்டி கொடியேற்றம் அன்று அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களை சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    எனவே அன்று திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றி திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மொகந்தி, திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி சிவக்குமார்ரெட்டி (பொறுப்பு) ஆகியோர் பல இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சந்திரபாபுநாயுடு எந்த வழியாக கோவிலுக்குள் வருகிறார். பேடிஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் வழியில் எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது எனக் கேட்டார். மேற்கு மாடவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரும்புப் படிக்கட்டுகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

    கருடசேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பஸ்களில் வருவார்கள். மேலும் பக்தர்கள் தங்களின் வாகனங்களிலும் திருமலைக்கு வருவார்கள்.

    திருமலையில் உள்ள வெளி வட்டச்சாலையில் 750 வாகனங்களை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். திருமலையில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தி வைக்க, ஒருசில மைதானங்களை சீரமைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.

    வாகன வீதிஉலாவின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 2 ஆயிரத்து 500 போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கருடசேவையின் போது 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். திருட்டுச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாறு வேடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் சுழல் கேமராக்கள் பொருத்தி பக்தர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

    திருட்டுச் சம்பவங்கள் நடந்தால் உடனே போலீசாருக்கும், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க போன் வசதி செய்து கொடுக்கப்படும்.

    கூட்டத்தில் குழந்தைகள் காணாமல்போவது, மர்ம ஆசாமிகளால் கடத்தப்படுவது போன்ற சம்பவங்களை தடுக்க குழந்தைகளின் கைகளில் ஒரு மென்பொருள் சாதனம் அடங்கிய கயிறு கட்டப்படும். அதன் மூலம் கடத்தப்பட்ட குழந்தைகளின் இருப்பிடம், விவரம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து, உடனே மீட்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆய்வின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான சூப்பிரண்டு என்ஜினீயர் ராமச்சந்திராரெட்டி, கேட்டரிங் அதிகாரி சாஸ்திரி மற்றும் பலர் உடனிருந்தனர். #TirupatiTemple

    திருப்பதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் மூத்த குடிமக்கள் உள்பட 8 வகையான தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. #tirupati #brahmotsavam
    திருப்பதியில் வரும் செப்டம்பர் 12 முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது.

    அந்த நாட்களில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள். இதனால் பிரம்மோற்சவ விழா நாட்களில் தேவஸ்தானம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் தரிசனங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள், ராணுவ வீரர்கள், என்.ஆர்.ஐ. வாசிகள் மற்றும் ஆர்ஜித சேவை தரிசனங்கள் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளது.

    ஆதலால் இதனை கருத்தில் கெண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் 67,890 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,289 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று வைகுண்டத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத் திருந்தனர். அவர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    நேர ஒதுக்கீடு முறை பக்தர்களும் நடைபாதை மார்க்கத்தில் வந்த பக்தர்களும் 4 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி வேன், கார், ஜீப் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் கூடுதலாக வசூலித்தால் டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது. அதையொட்டி தனியார் வாகனங்களான வேன், கார், ஜீப் ஆகியவற்றின் உரிமையாளர்கள், டிரைவர்களை வரவழைத்து, திருப்பதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விவேகானந்த ரெட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதேபோல் அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் வாகனங்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் வந்து செல்வார்கள்.

    எனவே பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் டிரைவர்கள் மீதும், அதன் வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். திருப்பதியில் இருந்து திருமலை, திருமலையில் இருந்து திருப்பதிக்கு பெரியவர்களுக்கு ரூ.65, சிறியவர்களுக்கு ரூ.40 நிர்ணயித்துள்ளோம். கட்டண விவரம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் தனியார் வாகனங்களில் ஒட்டப்படும். அதில் கூறப்பட்டுள்ள படியே பக்தர்களிடம் கட்டணமாக வசூல் செய்ய வேண்டும்.

    மேலும் திருப்பதியில் இருந்து திருச்சானூர், ஸ்ரீகாளஹஸ்தி, காணிப்பாக்கம், சீனிவாசமங்காபுரம் ஆகிய கோவில்களுக்குத் தனியார் வாகனங்களில் பக்தர்கள் பலர் சென்று வருவார்கள். மேற்கண்ட கோவில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி, திருமலையில் இருந்தும் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TirupatiTemple

    திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதமும், 2-வது பிரம்மோற்சவம் அக்டோபர் மாதமும் நடைபெற உள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் வாகன சேவைகள் நடக்கிறது. வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.
    ×