search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling rice seized"

    கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய்த் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை மதுக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது பஸ் நிறுத்தத்தின் அருகே சாக்கு மூட்டைகள் கிடப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    அங்கு சிறு, சிறு மூட்டைகளில் 400 கிலோ அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது ஒத்த கால்மண்டபம் பகுதியில் இருந்தும் ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதாக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்றனர்.

    ஒத்தகால்மண்டபம் சந்திப்பு அருகே பெரிய சாக்கு மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. 2 இடங்களில் இருந்தும் மொத்தம் 1 டன் ரே‌ஷன் அரிசியை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

    இந்த ரே‌ஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    அலுவலர்கள் வருவதை அறிந்ததும் மர்ம நபர்கள் அரிசி மூட்டைகளை கீழே போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்-யார்? என அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×