search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public panic"

    தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவுளகிரி அய்யூர், நொகனூர், உரிகம், அஞ்செட்டி, பெட்டமுகிலாளம ஆகிய கிராமங்கள் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டையொட்டி அமைந்து உள்ளன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரை ராகிப்போரை குறிவைத்து 100-க்கும் அதிகமான யானை கும்பல் நுழைவதும் வழக்கமான ஒன்று.

    வருடம் முழுவதும் யானைகள் மேற்கண்ட காப்புக்காடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமிராவில் கர்நாடக மாநிலமான பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து 2 சிறுத்தை புலிகள் ஜவுளகிரி காப்புக் காட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜிக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஜவுளகிரி காப்புக்காட்டுக்குள் நுழைந்த 2 சிறுத்தை புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ஜவுளகிரி வனச்சரகர் முருகேசனுக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவுப்படி ஜவுளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை புலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி பொதுமக்களுக்கு விடுத்து உள்ள வேண்டுகோளில் கூறி இருப்பதாவது:-

    காப்புக்காட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம். அப்படி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. #KarurCrater

    கரூர்:

    கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலை வழியாக நேற்றிரவு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். இந்தநிலையில் திடீரென அங்கு தார்சாலை பெயர்ந்து 4 அடி ஆழத்திற்கு கீழே புதைந்தது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சுதாரித்து கொண்டதன் காரணமாக யாரும் குழிக்குள் விழவில்லை. இருப்பினும் பள்ளத்தின் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த வழியாக போக்குவரத்தை நிறுத்தி மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட்டனர். மேலும் பள்ளத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சீரமைக்க முடியவில்லை.

    இதையடுத்து இன்று காலை முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ராணிமங்கம்மாள் சாலையின் அடியில் குடி நீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அதில் ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருகிறது. அதனாலேயே அப்பகுதியில் ராட்சத பள்ளம் விழுந்துள்ளது. இதையடுத்து குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. வேறு எங்காவது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரி செய்த பிறகே, சாலையை சீரமைப்பதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். அதுவரை அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. சமீபத்தில் கரூர் நகரில் காலை நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டதுடன் வீடுகள் அதிர்ந்து பாத்திரங்கள் உருண்டன. இதனால் நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டு இருக்குமோ? என்று பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்ததையடுத்து நிம்மதிஅடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கரூரில் திடீரென ஏற்பட்ட பள்ளம், நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதோ? என்று பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இன்றுகாலை குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து நிம்மதியடைந்தனர். குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக கரூர் நகரில் மேலும் சில இடங்களில் சாலைகளில் பள்ளம் உருவாக வாய்ப்புள்ளதால் அதனை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மணப்பாறையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி சத்தத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    மணப்பாறை:

    மணப்பாறையில் சுற்று வட்டாரா பகுதிகளான மணப்பாறை, வீரப்பூர், நல்லான் பிள்ளை, பழைய கோட்டை, கொப்பம்பட்டி, காட்டுபட்டி உள்ளிட்ட 13 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது.

    உடனே பொது மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்றனர். இந்த திடீர் சத்தம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.

    இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,

    மணப்பாறை வீரமலை பகுதியில் ராணுவ வீரர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது கூட இந்த அளவுக்கு சத்தம் கேட்டது இல்லை. தற்போது அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் நடை பெற வில்லை என்று கூறினர். மேலும் இந்த திடீர் சத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் தெரிய வில்லை என்று கூறினர்.

    கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடி சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டது. அது போல மணப்பாறையில் எதுவும் நிலஅதிர்வு ஏற்பட்டதா? என பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

    நிலக்கோட்டை அருகே மின்விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். #electriclight

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி, கோட்டூர், பச்சமலையான் கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்டு 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தெருவிளக்குகள் ஊராட்சி நிர்வாகத்தின் தகவலின்பேரில் மின்சார ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.

    தற்போது மின்வாரிய அதிகாரிகளுக்கும், ஊராட்சி செயலாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இதனால் தெருவிளக்குகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.

    கிராமங்களில் பெரும் பாலான இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக உள்ளதால் பல இடங்களில் இருள்சூழ்ந்தே காணப்படுகிறது. இதனால் இரவுநேரங்களில் அப்பகுதியை கடந்துசெல்ல பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இருளை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிடுவார்களோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே தெருவிளக் குகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். #electriclight

    வத்தலக்குண்டு பகுதியில் கொள்ளையர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். #robberycase

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அக்ரஹாரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஆறுமுகம் வீட்டை பூட்டி விட்டு மனைவியிடம் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோ, அலமாரிகளை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆறுமுகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இதே தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வநாதன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி விஜயலெட்சுமி கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    தற்போது மீண்டும் இங்கு இதே தெருவில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வெங்கிட்டாபட்டி மின் வாரிய ஊழியர் காசி என்பவர் வீட்டில் வாலிபர் ஒருவர் திருட முயன்றார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அந்த வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து விசாரித்த போது அந்த நபர் விக்ரமங்கலத்தை சேர்ந்த கணேசன் (27) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த தங்கம் என்பவரிடம் சேவுகம்பட்டியைச் சேர்ந்த செல்வம். தான் பெரிய ரவுடி என்று கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி செல்வத்தை பிடித்து வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    வத்தலக்குண்டுவில் அரங்கேறி வரும் தொடர் கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்து வருகின்றனர்.

    போலீசாரும் கொள்ளையர்களை பிடிக்காமல் கொள்ளை சம்பவங்களை மறைப்பதிலேயே குறியாக இருப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×