search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karur road Crater"

    கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. #KarurCrater

    கரூர்:

    கரூர் அண்ணா வளைவு கார்னர் ராணிமங்கம்மாள் சாலை வழியாக நேற்றிரவு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். இந்தநிலையில் திடீரென அங்கு தார்சாலை பெயர்ந்து 4 அடி ஆழத்திற்கு கீழே புதைந்தது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சுதாரித்து கொண்டதன் காரணமாக யாரும் குழிக்குள் விழவில்லை. இருப்பினும் பள்ளத்தின் காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த வழியாக போக்குவரத்தை நிறுத்தி மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட்டனர். மேலும் பள்ளத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சீரமைக்க முடியவில்லை.

    இதையடுத்து இன்று காலை முதல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ராணிமங்கம்மாள் சாலையின் அடியில் குடி நீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அதில் ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருகிறது. அதனாலேயே அப்பகுதியில் ராட்சத பள்ளம் விழுந்துள்ளது. இதையடுத்து குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்வதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. வேறு எங்காவது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரி செய்த பிறகே, சாலையை சீரமைப்பதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். அதுவரை அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. சமீபத்தில் கரூர் நகரில் காலை நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டதுடன் வீடுகள் அதிர்ந்து பாத்திரங்கள் உருண்டன. இதனால் நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டு இருக்குமோ? என்று பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்ததையடுத்து நிம்மதிஅடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கரூரில் திடீரென ஏற்பட்ட பள்ளம், நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதோ? என்று பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இன்றுகாலை குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக பள்ளம் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து நிம்மதியடைந்தனர். குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக கரூர் நகரில் மேலும் சில இடங்களில் சாலைகளில் பள்ளம் உருவாக வாய்ப்புள்ளதால் அதனை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×