search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stalin statement"

    விவசாயிகள் பேரணிக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Farmerrally #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் (பி.ஏ.பி) கீழ் தமிழக விவசாயிகளின் கனவுத் திட்டமான “ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை” நிறைவேற்றவும், “அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்பட்டும் தண்ணீரை நீறுத்தக் கோரியும்” பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15-ந்தேதி அன்று நடைபெற இருக்கும் “மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தப் பேரணியில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 09.11.1958 ஆம் வருடத்திலிருந்து செயல்படுத்தும் வகையில், 29.05.1970 அன்று போடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பின்தேதியிட்ட ஒப்பந்தம் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பல நதிகளை இணைக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய ஆனைமலையாறு திட்டத்தினால், தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். அது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமைக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.


    இத்திட்டத்தை நிறைவேற்ற, கழக ஆட்சியில் 21.01.2011 அன்று, இருமாநில தலைமைச் செயலாளர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அ.தி.மு.க ஆட்சியில் கடந்த ஏழு வருடங்களாக ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை என்பது வேதனைக்குரியது. விவசாயிகள் மிகுந்த பயன்பெறும் “ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்கள்”, அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பி.ஏ.பி. விவசாயிகள் சார்பாக நடத்தப்படும் இந்த “மாபெரும் எழுச்சிப் பேரணி” தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று எதிர்பார்க்கிறேன். ஆகவே, வரலாற்றுச் சிறப்புமிக்க பி.ஏ.பி. ஒப்பந்தத்தின் பயன், தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில், அ.தி.மு.க அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் “ஆனைமலையாறு நல்லாறு” திட்டத்தை நிறைவேற்றிட போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Farmerrally #DMK #MKStalin

    ×