search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mentally challenged murder"

    பழவேற்காட்டில் மனநோயாளி கொலை தொடர்பாக அரங்கம் குப்பம், லைட்அவுஸ்குப்பம், செம்பாசி பள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி 15 பேரை கைது செய்தனர். #Childkidnap #TNPolice
    சென்னை:

    திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வடமாநில கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும், 200 பேர் வரை ஊடுருவி இருப்பதாகவும் வாட்ஸ்- அப், பேஸ்புக் போன்ற இணையதங்களில் தகவல் பரவியது.

    இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தங்கள் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதி தாக்குதல் நடத்துகிறார்கள்.

    நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் செல்லும் வழியில் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றவர்களை கிராம மக்கள் தாக்கியதில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் பலியானார். அவருடன் சென்ற மேலும் 5 பேர் கிராம மக்களால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குழந்தை கடத்தல்காரன் என்று கருதி கிராம மக்கள் அடித்து கொலை செய்து பழவேற்காடு ஏரி மேம்பாலத்தின் சுவரில் கட்டித் தொங்கவிட்டனர்.

    இந்த இரு சம்பவங்களிலும் அப்பாவிகள் பலியானதால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவங்களை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பிலும் பரவ விட்டுள்ளனர். இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வட மாவட்டங்களில் போலீசார் வாகனங்களில் ரோந்து சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் யாராவது நடமாடினாலோ, பிடிபட்டாலோ அவர்களை போலீசில் ஒப்படையுங்கள், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்கிறார்கள்.

    போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரம் ‘வாட்ஸ்- அப்’களிலும் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வேலூரை அடுத்த சங்கிரி கோவில் என்ற இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் குழந்தை கடத்தல்காரன் என்று கருதி தாக்கப்பட்டார். போலீசார் வந்து மீட்டதால் அவர் உயிர் தப்பினார்.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காட்டு மயிலூர் கிராமத்தில் வடமாநில பெண் ஒருவர் கிராம மக்களிடம் சிக்கினார். அவரை போலீசார் மீட்டனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்த பின்பும் கிராம மக்கள் இரவில் உருட்டு கட்டையுடன் காவல் காத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை பெண் ருக்மணி அம்மாள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ காட்சிகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடினார்கள். முதல் கட்டமாக 67 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் 23 பேர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது கொலை முயற்சி, கொலை உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பழவேற்காட்டில் மனநோயாளி கொலை தொடர்பாக வெளியான வாட்ஸ்அப் வீடியோ மூலம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். அரங்கம் குப்பம், லைட்அவுஸ்குப்பம், செம்பாசி பள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி 15 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருப்பதால் பகலில் கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் மட்டுமே வீடுகளில் தங்கியுள்ளனர். ஆண்கள் உறவினர்களது வீடுகளுக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புகிறார்கள்.

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். தெருக்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட போலீஸ் அதிகாரிகள் பழவேற்காட்டில் முகாமிட்டுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பகுதியில் துணை சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆரம்பாக்கம் பகுதியில் கிராம மக்களிடையே போலீசார் விழிப்புணர்வு  பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.

    அவர்கள் அந்தந்த போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரிடையாக சென்று விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடத்தி உண்மை நிலையை கிராம மக்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜனின் கருத்துக்கள், வாட்ஸ்அப் மூலம் உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்புகளில் போலீசாரால் பதிவிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி பெரும்பேடு லட்சுமிபுரம் கிராமத்தில் கிளி ஜோசியர் ஒருவர் வந்தார். அவரைப் பற்றி கிராம மக்கள் விசாரித்தபோது பதில் சொல்ல முடியாமல் திணறினார். சிலர் அவரை அடிக்க பாய்ந்ததால் கிளி ஜோசியர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பூண்டி ஏரியில் சிறுவர்கள் குளித்துக் கொண்டு இருந்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் வந்து நைசாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் அவரை தாக்கினார்கள்.

    இது தொடர்பாக பூண்டி இருளர் காலனியைச் சேர்ந்த குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Childkidnap #TNPolice
    ×