search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lacknow"

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் முஸ்லீம் என்பதால் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த முஹம்மது சித்திக் என்பவருக்கும் இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் என்பவருக்கும் கடந்த 2007-ல் கலப்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் பாஸ்போர்ட் பெறுவதற்காக லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து ஜூன் 20-ம் தேதி நடைபெற்ற நேர்காணலின் போது 3 சுற்றில் தன்வி நிராகரிக்கப்பட்டார். கணவர் இஸ்லாமியராக இருக்கிறார் என அதிகாரி கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தன்வி “எனது கணவர் முஸ்லிமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை” என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. தன்வியின் பதிலால் ஆத்திரமடைந்த அதிகாரி அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி வெளியேறும் படி கூறியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, தன்வியின் கணவர் சித்திக்கை அழைத்து பேசிய அந்த அதிகாரி, நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது, என அவரையும் அவமானப்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக பாஸ்போர்ட் அலுவலத்தில் இருந்த ஆர்.பி.ஓ அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இருவரும் நடந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டேக் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.  அந்த பதிவில் “ஆதங்கத்துடன் இதை பதிவிடுகிறேன், கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது, 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.



    இதைத்தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும், வெளிவிவகாரத்துறை செயலாளர் டி.எம்.முலாய் உத்தரவின் அடிப்படையில் அந்த தம்பதியினருக்கு தற்போது பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 
    ×