search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "King Charles"

    • பொது இடத்தில் மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • கைது செய்யப்பட்ட வாலிபர் மீது வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வடக்கு இங்கிலாந்து பகுதியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடியபடி நடந்து சென்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை. தரையில் விழுந்து உடைந்தன. 'இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல...' என்று அந்த நபர் கோஷமிட்டார். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மன்னர் மீது முட்டைகளை வீசிய ஹாரி மே (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அந்த வாலிபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் மற்றும் வழக்கு செலவுக்காக 85 பவுண்டுகள் செலுத்தும்படி நிதிபதி உத்தரவிட்டார்.

    ஒருவருடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், அதைத் தீர்ப்பதற்கான வழி, இதுபோன்று பொருட்களை வீசுவது அல்ல என நீதிபதி கண்டித்தார்.

    • பிரதமர் மோடி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுடன் போனில் பேசியதாக தகவல் வெளியானது.
    • இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது

    புதுடெல்லி:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் வாரிசுப்படி அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

    இந்தப் பேச்சின்போது இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மன்னர் மூன்றாம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை பின்னடைவு மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் முன்னுரிமைகள் மற்றும் மிஷன் லைப்இன் சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

    • இங்கிலாந்து அரசராக பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்துவருகிறார்.
    • முட்டையை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ், அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களைச் சந்தித்தார்.

    அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

    மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    ஏற்கனவே, கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமர்வார்.
    • இதன் பிறகு மன்னர் சார்லஸ் ஆட்சி அதிகாரப் பூர்வமாக தொடங்கும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா 6 மே 2023 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவியும் ராணியுமான கமீலா பார்கருடன் முடிசூட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமர்வார்.

    பிறகு, மூத்த மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மன்னருக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து நாட்டு மக்களுக்கு மன்னர் உரையாற்றுவார். இதன் பிறகு அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். 74 வயதாகும் சார்லஸ் இங்கிலாந்து வரலாற்றில் முடிசூட்டிக் கொள்ளும் மிக வயதான மன்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும்.
    • மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ம் தேதி தனது மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார்.

    இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்மூலம் இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார்.இதன்மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.

    மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே, மன்னர் சார்லசின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய நாணயம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சார்லஸ் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
    • பத்மினி கோலாப்புரே முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார்.

    மும்பை

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்தை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக பதவி ஏற்றுள்ளார்.

    இவர் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மும்பை ராஜ்கமல் சினிமா ஸ்டூடியோ வருகை தந்தார். இந்த தருணத்தில் எதிர்பாராத நிகழ்வு நடந்தது.

    அந்த ஸ்டூடியோவில் இருந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் இளவரசர் சார்லசை வரவேற்க காத்து நின்றனர். சார்லசுக்கு வரவேற்பு அளிக்க ஆரத்தி எடுத்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு நின்ற இந்தி மற்றும் மராத்தி நடிகையான பத்மினி கோலாப்புரே சார்லஸ் அருகே நெருங்கினார். திடீரென அவரது கன்னத்தில் "நச்"சென்று முத்தம் கொடுத்து விட்டார். இது இளவரசர் சார்லசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அங்கு நின்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.இது உலக அரங்கில் தீப்பொறியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

    இருப்பினும் இளம்பெண் ஒருவர் இதுபோன்று நடந்து கொண்டது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்ற எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. இதற்கெல்லாம் நடிகை பத்மினி கோலாப்புரே கவலைப்படவில்லை.

    தற்போது அவர் முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார். இந்த தருணத்தில் நடிகை பத்மினி கோலாப்புரேயிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.

    அவர் கூறியதாவது:-

    ராஜ்கமல் ஸ்டூடியோவில் நான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நினைவுகளை ஒருபோதும் மறக்க முடியாது. அவர் தற்போது மன்னராகி விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் எனது நினைவுகள் வானத்தில் பறக்கிறது.

    இளவரசராக இருந்த சார்லசை முத்தமிடும் தைரியம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது நடந்து விட்டது. அதற்கு அவர் என்ன எதிர்வினையாற்றினார் என நினைவில்லை. ஆனால் அது என்னை சிரிக்க வைத்தது. அவருடைய அணுகுமுறையும், நடத்தையும் நட்பாக இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. மறுநாள் காலையில் உலக பத்திரிகைகளில் நான் முத்தமிட்ட படம் முதல் பக்கங்களில் வந்தது. இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

    ஒரு தடவை நான் இங்கிலாந்து சென்றபோது, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி எனது பாஸ்போர்ட்டை பார்த்தார். அப்போது நீங்கள் தான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நடிகையா? என்று கேட்டார். அப்போது ஆமாம் என்றேன். அதற்கு அவர் வெட்கத்துடன் தலையை தாழ்த்தி கொண்டார்.

    இப்போது மன்னர் சார்லசை நீங்கள் எப்படி முத்தமிடுவீர்கள் என்று பலர் வேடிக்கையாக என்னை கேட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு நடிகை பத்மினி கோலாப்புரே கூறினார்.

    • மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • “என் அன்பான அம்மா” உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

    லண்டன்

    இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

    ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ் (வயது 73) மன்னர் ஆனார். இங்கிலாந்தின் புதிய மன்னர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுவார்.

    மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்களின் இரங்கலுக்கு மன்னர் சார்லஸ் நேற்று பதில் அளித்து பேசினார்.

    அப்போது தனது தாயை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார். மன்னர் தனது உரையில் கூறியதாவது:-

    நமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக்கருவி நாடாளுமன்றம்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியது போல் ராணி எலிசபெத், வாழும் அனைத்து இளவரசர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவரை பின்பற்றி அரசியலமைப்பு நிர்வாகத்தின் விலைமதிப்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்துவேன்.

    "என் அன்பான அம்மா" உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. வெள்ளி விழா நீரூற்று முதல் பழைய அரண்மனை முற்றத்தில் உள்ள சூரியக் கடிகாரம் வரை அவரது பொன்விழாவைக் குறிக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன.

    இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறினார்.

    இங்கிலாந்து மன்னராக நாடாளுமன்றத்தில் சார்லஸ் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும்.

    இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராணி எலிசபெத்தின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி காலை 6.30 மணி வரை வைக்கப்படுகிறது.

    இதில் அஞ்சலி செலுத்துவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ராணி எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் மிக நீண்ட வரிசை காணப்படும். பல மணி நேரத்துக்கு, குறிப்பாக இரவு வரை நீங்கள் வரிசையில் நிற்க நேரிடும். வரிசை தொடர்ந்து நகர்ந்தவாறே இருக்கும் என்பதால், அமர்வதற்கு குறைவான வாய்ப்பே கிடைக்கும்.

    ராணியின் உடல் வைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தை சுற்றிலும் சாலைகள் மூடப்படும். இதனால் பொது போக்குவரத்து இல்லாமல் நீண்ட தாமதம் ஏற்படலாம்.

    அஞ்சலி செலுத்த வருவோரிடம் விமான நிலையத்தில் நடைபெறும் பரிசோதனைகள் போல சோதனையிடப்படும். ஒரு திறப்பு வைத்த சிறிய பை ஒன்று மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படும்.

    நீண்ட காத்திருப்பு ஏற்படும் என்பதால் குடை, செல்போன் பவர் பேங்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும்.

    உணவு, பானங்கள் எடுத்து வரக்கூடாது. மலர்களோ அல்லது மெழுகுவர்த்தி, புகைப்படங்கள் போன்ற பிற பொருட்களையும் அஞ்சலிக்கு கொண்டு வரக்கூடாது.

    இந்த நிகழ்வின் கண்ணியத்தை மதித்து சரியான முறையில் நடந்து கொள்ளவும், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் அமைதியாக இருக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    இதைத்தவிர அங்கு 'செல்பி', புகைப்படம், வீடியோ பதிவு போன்றவற்றுக்கு தடை விதித்திருப்பதுடன், பட்டாசு, லேசர் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

    • ராணி எலிசபெத் மகன் சார்லஸ் நாளை அந்நாட்டின் மன்னராக அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார்.
    • வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன் என இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக நாளை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட உள்ளார் என தகவல் வெளியானது.

    மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதையடுத்து மகாராணி ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், நீண்ட கால அரச குடும்ப வாரிசான 73 வயது சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகிறார்.

    இங்கிலாந்து அரசு மரபுப்படி ராணி எலிசபெத் இறந்த முதல் 24 மணி நேரத்தில், சார்லஸ் அடுத்த மன்னர் என லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை அக்சஷென் கவுன்சில் நாளை அதிகாரபூர்வ பிரகடனம் வெளியிடுகிறது.

    இந்நிலையில், நாட்டு மக்களிடம் மன்னராக பதவியேற்க உள்ள சார்லஸ் முதன்முறையாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    ராணி எலிசபெத்தை இழந்து தவிக்கும் மக்களி்ன் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்.

    அன்பு, விசுவாசம், மரியாதையோடு என் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக சேவை ஆற்றுவேன். நான் விரும்பி செய்யும் சமூக சேவை பணிகளில் என்னால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது. இங்கிலாந்து இளவரசராக வில்லியம் செயல்படுவார் என தெரிவித்தார்.

    ×