search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol smuggling"

    கோவை அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் பயனியர் நகர் உள்ளது. இங்கு வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார். அதன் பின்னர் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த நடராஜர், சிவகாமி அம்மையார், விநாயகர் ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர். திருட்டு போன சிலைகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவிலில் திருட்டு போன சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். #Idolsmuggling #Highcourt

    சென்னை:

    தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது. இவற்றை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார். பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு அவ்வப்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கோவில் சிலைகளை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என்று நீதிபதி கருத்து கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி மகாதேவன், சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில் சிலைத் திருட்டு என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்குமானால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

    ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் எழுந்து, சிலை கடத்தல் வழக்கை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் பொழுதே அண்ணாமலை யார் பஞ்சலோக சிலை மாயமாகி விட்டது. ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இமெயில் மூலம் பல புகார்களை அரசுக்கு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பிளீடர் மகாராஜனிடம் கருத்து கேட்ட நீதிபதி, பின்னர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பழனி மூலவர் சன்னதியில் வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை கோவில் அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.#Idolsmuggling

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் மூலவராக உள்ள தண்டாயுதபாணி சுவாமி சிலை நவபாஷாணத்தால் போகர் எனும் சித்தரால் செய்யப்பட்டது. 5 ஆயிரம் ஆண்டு பழமையான இச்சிலை சேதமடைந்து வருவதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் மறைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் புதிதாக தங்கத்தில் சிலை செய்யஆலோசனை வழங்கினார். இதன் பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏற்பாட்டில் ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி இரவு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை பழனி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 26-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் தண்டாயுதபாணி சிலைக்கு முன்பாக புதிய ஐம்பொன் சிலை நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை மூலவர் சன்னதியில் வைக்கக்கூடாது என்றும், ஒரு கருவறையில் 2 மூலவர்கள் வைப்பது ஆகமவிதிபடி குற்றமாகும் என்றும் பக்தர்கள் ஆன்மீக பெரியோர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி அன்று புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலை கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு உட்பிரகாரத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு அதற்கு தினசரி நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு வந்தது.

    இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்தது தெரியவரவே ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா, நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன், உதவி ஆணையர் புகழேந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை செய்ய முயன்ற போது அவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜராகி சரணடைந்தார். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

    வழக்கு விசாரணைக்காக ஐம்பொன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் டி.எஸ்.பி வெங்கட்ராமன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் நேற்று வந்தனர்.

    சிலையை ஒப்படைக்கும் முன் ஐம்பொன் சிலையில் இருந்த சக்தியை கும்பத்தில் ஆவாகனம் செய்து பின்னர் மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் ஐம்பொன் சிலை சக்தி இழந்த சிலையாக மாற்றப்பட்டது.

    இன்று காலையில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் வருவாயத்துறையினர் ஐம்பொன் சிலையை பிரத்யேகமாக செய்யப்பட்ட பெட்டியில் வைத்தனர்.

    முன்னதாக சிலையில் எடை மற்றும் உயரம் ஆகியவை அளவீடு செய்யப்பட்டது. எடை 219 கிலோ 52 கிராம் இருந்தது. சிலை வைத்த பிறகு பெட்டி பேக்கிங் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின் இழுவை ரெயில் மூலம் கீழே கொண்டு வரப்பட்டது.

    அதன் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கோவில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன் பின் வேன் மூலம் பேக்கிங் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டது. ஐம்பொன்சிலையை மலைக் கோவிலில் இருந்து கீழே கொண்டு வரும் வரை ஏராளமான பக்தர்கள் மிகுந்த கவலையுடன் பார்த்தது கண்கலங்க வைத்தது. #Idolsmuggling

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல கோடி மதிப்பிலான ஐம்பொன் முருகர் சிலை மற்றும் சூளம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 200 ஆண்டுக்கும் மேல் பழமையான ஐம்பொன் சாமி சிலைகள், பல நூறு கோடி மதிப்பிலான வைரம், வைடூரியம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. சமீபத்தில் அஷ்டபந்தனம் பெயர்த்து எடுக்கப்பட்ட விவகாரத்தில் பல கோடி மதிப்பு நகைகள் கொள்ளை போனதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், அஷ்டபந்தனத்தை பெயர்த்து நகைகள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்துவேன். அருணாசலேஸ்வரர் கோவிலில் பழங்கால சாமி சிலைகள், நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில், அருணாசலேஸ்வரர் கோவில் பெட்டகத்தில் இருந்த ஐம்பொன் தண்டாயுதபாணி முருகர் சிலை மற்றும் சூளம் மாயமானதாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், இந்து அறநிலையத்துறையிடமும், எஸ்.பி.பொன்னியிடமும் புகார் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து எஸ்.பி. பொன்னி இன்று காலை கோவிலில் முருகர் சிலை மற்றும் சூளம் இருந்த இடத்தில் ஆய்வு செய்தார். கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினார்.

    தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலை திருடுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சர்ச்சைக்குள்ளான பழனி ஐம்பொன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அதிகாரிகள் இன்று எடுத்து சென்றனர். #Idolsmuggling

    பழனி:

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகரால் வடிவமைக்கப்பட்ட நவபாஷாணத்தால் ஆனதாகும்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி புதிய மூலவர் சிலை அமைக்க கடந்த 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐம்பொன்னால் ஆன 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ஸ்தபதி முத்தையா தலைமயில் சிலை வடிவமைக்கப்பட்டு 2004-ம் ஆண்டு மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் 2 சிலைகள் இருப்பதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் சில மாதங்களிலேயே ஐம்பொன்சிலை நிறம் மாறத் தொடங்கியது. இதனால் சிலை அமைத்ததில் மோசடி நடந்திருக்கலாம் என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் வைக்கப்பட்ட ஐம்பொன்சிலை அகற்றப்பட்டு கோவில் தனி அறையில் வைக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக பல்வேறு கோவில்களில் நடந்த சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனிகோவிலிலும் விசாரணை மேற்கொண்டார்.

    இந்த விசாரணையில் புதிய ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்தது தெரிய வரவே ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிலை வடிவமைக்கப்பட்ட காலத்தில் பணியில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த முயன்றபோது அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மதுரை ஐகோர்ட்டு கிளையில் தடை ஆணை பெற்றார்.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த வாரம் கும்பகோணம் நீதிமன்றத்தில் தனபால் ஆஜராகி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் சர்ச்சைக்கு உள்ளான ஐம்பொன் சிலையை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பழனி கோவிலுக்கு வந்த ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான போலீசார், பழனி தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் ஐம்பொன்சிலையை எடுத்துச் சென்றனர்.

    இதனால் பழனி கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. #Idolsmuggling

    ரூ.9 கோடி சிலை கடத்தல் வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் ஞானஅன்புசுவாமிதாஸ். இவர் கடந்த 2008-ம் ஆண்டு தன்னுடைய விவசாய நிலத்தை தோண்டும்போது சிவகாமி அம்மன், சிவன்-பார்வதி உலோக சிலைகள் கிடைத்தன.

    இதுகுறித்து அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த பிரிவின் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா, ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் விவசாய நிலத்தில் கிடைத்த 3 சிலைகளையும் கைப்பற்றினர்.

    அவர்கள் அதனை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடம் ரூ. 15 லட்சத்துக்கு விற்றதாக தெரிகிறது. இந்த 3 சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 9 கோடியாகும்.

    இதனை சிலை கடத்தல் கும்பல் வெளிநாட்டில் விற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையை தொடர்ந்து, டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றிருந்த காதர்பாட்சா மற்றும் சுப்புராஜை போலீசார் கைது செய்தனர்.

    சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மதுரை மாவட்டம் தாட்கோ காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 33) என்பவர் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் 10 ஆண்டுகளாக அவர் போலீசாரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்தார்.

    இந்த நிலையில் முத்துப்பாண்டி மதுரையில் இருப்பதாக சிலை கடத்தல் போலீசாருக்கு 2 நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுரையில் முகாமிட்ட போலீசார் நேற்று முத்துப்பாண்டியை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை வருகிற 9-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பாண்டி மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். #Tamilnews

    ×