search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home jewelry robbery"

    ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து 94 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா கோவில் தெருவில் வசித்து வருபவர் பட்டுவர்தன். மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் அங்குள்ள மாநகராட்சியில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் வெளியில் சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க சமையல் அறை கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 94 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர்.

    இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலவாக்கம் பல்கலை நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை போனது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    நாமக்கல்லில் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (41). இவர் நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    தற்போது விடுமுறை என்பதால் பத்மாவதி மற்றும் அவரது 2 மகள்கள் சிதம்பரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். ரவி மட்டும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு ரவியும் சிதம்பரத்திற்கு சென்று உள்ளார். மீண்டும் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நாமக்கல்லுக்கு திரும்பி வந்துஉள்ளார். முன்புற கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ள மர்ம ஆசாமிகள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரவி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த சுமார் 15 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.11 ஆயிரத்து 500 திருட்டு போனதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நாமக்கல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  
    ×