search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephants movement"

    கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை மாமரம் உள்பட சுற்றுவட்டார ஆதிவாசி கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழம் சீசனாக இருப்பதால் பலா மரங்களில் ஏராளமான காய்கள் காய்ந்துள்ளன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியிலிருந்து காட்டு யானைகள் இந்த பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன.

    மேலும் இந்த சாலையின் பெரும்பகுதி வனப்பகுதி வழியாகவே செல்வதால் ஆங்காங்கே யானைகள் சாலையை கடக்கும் வழித்தடங்களும் உள்ளன. எனவே பலாப்பழங்களை உண்ண வரும் யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலை வழியாக கும்பலாக நடந்து செல்வதும் வழக்கமாக உள்ளது.

    எனவே இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் நடமாட்டம் இருப்பதால் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறுகையில், தற்போது குஞ்சப்பனை மாமரம், செம்மனாரை, கீழ்கூப்பு, மேல்கூப்பு உள்பட ஆதிவாசி கிராமங்களில் உள்ள பலாமரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. பலாப் பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியிலிருந்து வந்து பலாப்பழங்களை உண்டு வருகின்றன.

    எனவே யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் பலாப்பழங்கள் விற்பனை செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வாகனங்களில் செல்வோர் யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கவோ அல்லது செல்பி புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்க கூடாது.

    மேலும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யானைகள் சாலையை கடக்க நேர்ந்தால் சற்று நேரம் காத்திருந்து யானைகள் சென்ற பின்பே செல்ல வேண்டும். காற்று ஒலிப்பானை (ஏர்ஹாரன்) ஒலிக்க வைத்து யானைகளை மிரள வைத்தலை தவிர்க்க வேண்டும்.

    இதுமட்டுமின்றி ஆதிவாசி கிராம மக்கள் அதிகாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது தனியாக செல்லாமல் ஒன்றாக செல்ல வேண்டும். வயதானவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும். இதனால் யானைகள் மனிதர்களை தாக்குவதை தவிர்க்க முடியும், என்று தெரிவித்தார்.
    ×