search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSP suicide"

    கொழிஞ்சாம்பாறை அருகே இளம்பெண் வீட்டில் கும்மாளத்தை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு பயந்து டிஎஸ்பி தற்கொலை செய்து கொண்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை போலீஸ் டி.எஸ்.பி.யாக உள்ளவர் ஹரிக்குமார். இவர் தொடக்கவிலை என்ற இடத்தில் உள்ள இளம்பெண் வீட்டிற்கு சாதாரண உடையில் அடிக்கடி வந்து செல்வதாகவும், குடித்து கும்மாளம் அடிப்பதாகவும் அங்குள்ள பொதுமக்கள் குமுறினர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிக்குமாரை அதே பகுதியை சேர்ந்த சனல்குமார் (32) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி. ஹரிக்குமார் வாலிபர் சனல்குமாரை இரு கைகளையும் சேர்த்து அவரது நெஞ்சில் வைத்து ஆவேசமாக தள்ளிவிட்டார். இதில் நிலைதடுமாறி சனல்குமார் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த கார் கீழே கிடந்த சனல்குமார் மீது ஏறியதில் இறந்தார்.

    சனல்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிணத்தை நடுரோட்டில் வைத்து டி.எஸ்.பி.யை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர்.அதன்படி டி.எஸ்.பி. ஹரிக்குமார் உடனே சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து கேரள முதல்- மந்திரி பினராய் விஜயன் கண்டனம் தெரிவித்தது அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில் கடந்த 6-ந்தேதி முதல் டி.எஸ்.பி.ஹரிக்குமார் தலைமறைவானார். சஸ்பெண்டு செய்யப்பட்டு கொலை வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி.யை கைது செய்ய வேண்டும் என்று சனல்குமாரின் மனைவி விஜி (28) டி.எஸ்.பி.ஹரிக்குமார் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    உண்ணாவிரத போராட்டம் நடத்திய சனல்குமார் மனைவி விஜி

    ஹரிகுமார் தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரியில் பதுங்கியுள்ளதாகவும் அவரை கைது செய்து விடுவோம் என்று போலீசார் அவரது மனைவி விஜியிடம் கூறி உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறினர். ஆனால் டி.எஸ்.பி.யை கைது செய்யும் வரை உண்ணாவிர போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறினார். அதன்படி இன்று 7-வது நாளாக போராட்டம் தொடங்கியது.

    இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை ஹரிக்குமார் கல்லம்பலத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்கு பயந்து ஹரிக்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    டி.எஸ்.பி. ஹரிக்குமார் தற்கொலை செய்து கொண்டதையடுத்து சனல்குமார் மனைவி விஜி உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,

    தெய்வம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள போலீசார் டி.எஸ்.பி ஹரிக்குமார் தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரியில் பதுங்கியிருப்பதாக கூறியது பொய். உயர் பதவியில் இருப்பதால் அவரை கைது செய்ய போலீசார் தயங்கம் காட்டினர். ஆனால் அவரது மனசாட்சியும், தெய்வமும் நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றார். #tamilnews
    ×