search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dakshanayanam"

    • சூரியன் உதயமாகி சற்று வடக்கு திசை நோக்கி பயணம் செய்வது உத்தராயணம் ஆகும்.
    • உத்தராயண காலம் எல்லாவிதமான சுபசெயல்களுக்கும் ஏற்றதாகும்.

    அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலுக்கு மூன்று முறை சென்று அம்மனை தரிசிக்க வேண்டும். அம்மன் அருள்பார்வை கிடைக்கும் விதத்தில் மனதார வேண்டவேண்டும். மூன்று முறை சென்றால் மூன்று ஆற்றல்களான இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி என்ற முப்பெரும் சக்திகளும் உடலில் நிறைந்து நன்மை பயக்கும்.

    மனிதரை பிடித்த கெட்ட ஆவிகள் யாவும் அங்காள பரமேசுவரி பார்வை பட்டவுடன் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து அழிந்து ஒழிந்துவிடும்.

    சீமந்த வழிபாடு

    அங்காள பரமேஸ்வரியின் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடத்தப்படுவதற்கு முன்பு, அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துவதை மரபாக வைத்துள்ளனர். 5, 7, 9வது மாதங்களில் இந்த சீமந்த வழிபாட்டை கோவிலில் நடத்தலாம். இந்த வழிபாட்டை செய்பவர்கள் 7 வித சாதம் செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டு பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும். வளையல் போன்றவற்றையும் படைத்து வணங்கி வினியோகிக்கலாம்

    திதி கொடுக்க ஏற்ற நாள்

    சூரியனின் பயணத்தை வைத்து உத்தராயணம்', தட்சணாயனம்' என ஒரு ஆண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அயனம்' என்றால் பயணம் என்று பொருளாகும்.

    சூரியன் மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய ஆறு ராசிகளில் பயணம் செய்யும் காலமாகிய தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் உத்தராயணம்'' என அழைக்கப்படுகிறது.

    சூரியன் கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ஆறு ராசிகளில் பயணம் செய்யும் காலமான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, ஆகிய ஆறு மாதங்கள் தட்சணாயனம் என்று அழைக்கப்படுகிறது.

    சூரியன் உதயமாகி சற்று வடக்கு திசை நோக்கி பயணம் செய்வது உத்தராயணம்' ஆகும். சற்று தெற்கு நோக்கி பயணம் செய்வது தட்சணாயனம்' ஆகும்.

    அதாவது உத்தராயணத்தில் சூரியன் தென்கிழக்கில் உதயமாகி வடமேற்கில் மறைவது போன்றும், தட்சணாயனத்தில் வடகிழக்கில் உதயமாகி தென்மேற்கில் மறைவது போன்றும் தோற்றமளிக்கும். உத்தராயண காலம் தேவர்களுக்கு பகல் பொழுது என்றும், தட்சணாயனம் காலம் தேவர்களுக்கு இரவுக்காலம் என்றும் கூறப்படுகிறது. எனவே உத்தராயண காலம் எல்லாவிதமான சுபசெயல்களுக்கும் ஏற்றதாகும்.

    உத்தராயண காலத்தின் தொடக்கமான தைமாத அமாவாசையும், தட்சணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இறந்த பெற்றோர்கள் மற்றும் நம்முடைய முன்னோர்களை (பித்ருக்களை) இந்த அமாவாசையில் வணங்குவதன் மூலம் நலம் பெறுவதாக நம்பிக்கை.

    பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது பேணிப் பாதுகாக்க வேண்டும். இறந்த திதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் அவர்களுக்கு திதி தரவேண்டும்.

    இறந்த தேதியை பார்த்து திதி அளிக்க தெரியாதவர்கள் அல்லது மறந்தவர்கள் ஆடி, தை மாத அமாவாசை நாட்களில் நதிகள், கடற்கரையோரங்களில் புரோகிதர் மூலமாக திதி கொடுக்கலாம். கருடபுராணத்தில் மகனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

    இவ்வுலகத்திலும், மேல் உலகத்திலும் இன்பத்தை பெற நினைப்பவன் முன்னோர்களுக்கு திதியும், தர்மமும் செய்திருக்க வேண்டும். செய்ய தவறினால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து போய்விடும்.

    நல்லமகனை பெற்றவனே அனைத்து உலகங்களிலும் நன்மையை அடையலாம் என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் அவர்களுக்கு மேல் உலகிலும் நன்மை கிடைக்கும்.

    நீத்தார் கடன்களை செய்யாமல் விட்டு விடக்கூடாது. ஒவ்வொருவரும் பெற்றோர்களை பேணுதல் முக்கிய கடமை போன்று திதி செய்வதும் கடமையே ஆகும். மறைந்த நம் முன்னோர்களின் ஆசியை இதன் மூலம் பெறலாம். அதனால் மிகுந்த நன்மையுண்டாகும்.

    ஆடி அமாவாசை தினத்தன்று திருவையாறில் சிவபெருமான் கயிலை கோலமான அம்மையப்பரின் காட்சியை திருநாவுக்கரசருக்கு காண்பித்தார். இந்த காட்சி அப்பர் கயிலாயக்காட்சி என்று அழைக்கப்படுகிறது.

    ×