search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைகளுக்கும், அருவிகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகளவு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை முதல் மழை குறைந்துள்ளது. இன்று காலை வரை அதிகபட்சமாக கடனாநதி பகுதியில் 12 மில்லிமீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட அணையின் நீர்மட்டம் 91.60 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 95.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2803.94 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1004.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 127.56 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு நீர்மட்டம் 74.10 அடியாகவும் உள்ளது.

    அதேபோல் தென்காசி மாவட்ட மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அடவிநயினார் அணைநீர்மட்டம் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 116.75 அடியாக உள்ளது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாகவும், 84 அடி உள்ளது.

    அணைகள் நிரம்ப இன்னும் 2 அடியே தேவை என்பதால் பாதுகாப்பு கருதி கடனா மற்றும் ராமநதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    உசிலம்பட்டி சின்னவீர தேவர் தெருவை சேர்ந்தவர் வீரவேல். இவர் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு வழிபடுவதற்காக இன்று வந்தார்.

    முன்னதாக அவர்கள் பாபநாசத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட அவரது மகன் கோட்டைசாமி (வயது 17) என்பவர் தண்ணீரில் மூழ்கினார்.

    உடனடியாக தகவல் அறிந்து அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தென்காசி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் மழை குறைந்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய 4 அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    சீசன் காரணமாக தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் கடந்த 5 நாட்களாக குளிக்க அனுமதி இல்லாத நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டதாலும், விடுமுறை தினம் என்பதாலும் இன்று ஏராளமானோர் அருவிகளில் திரண்டனர்.

    மெயினருவியில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • ஐந்தருவியில் எவ்வித ஆபத்தும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக சென்று குளித்து மகிழ்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. பாளை, அம்பை, சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

    சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அணைகளில் இருந்து ஏற்கனவே நீர் திறக்கப்பட்டு உள்ளதால் கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் கார் பருவ நெற்பயிர் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 66.85 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 78.80 அடியும், மணிமுத்தாறு அணையில் 78.20 அடியும் நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 544 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட கும்பாவுருட்டி அருவியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஒருவர் உயிரிழந்தார்.

    இதனையொட்டி நேற்று மாலை முதல் இன்று காலை வரை குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் ஐந்தருவியில் எவ்வித ஆபத்தும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக சென்று குளித்து மகிழ்கின்றனர்.

    மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆய்குடி, கடையநல்லூர், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் சாரல்மழை விட்டு விட்டு பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிரம்பி வழிகிறது. கருப்பாநதியில் 4 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது.
    • அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    கடந்த 27-ந்தேதி மாலை திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனால் மறுநாள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று மழை ஓய்ந்து அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கும் விதமாக அருவிக்கரையில் அபாய ஒலி எழுப்பும் வகையில் அலாரம் கருவி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது செயல்படாமல் உள்ளது. செண்பகாதேவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகுதான் மெயின் அருவிக்கு அந்த தண்ணீர் வருகிறது.

    எனவே அங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து அதனை கண்காணிக்க ஏற்பாடு செய்யலாமா? என ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.அதன்படி செண்பகாதேவி அருவிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து முறைப்படி கண்காணித்து வந்தால் இது போன்ற அசம்பாவிதங்களை நிச்சயமாக தடுக்க முடியும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாளை, களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, பத்தமடை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழை நீர் தேங்கியது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக தென்காசியில் 37 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்வதால் மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நேற்று முன்தினம் மெயின் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 2 பெண்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதன் காரணமாக நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மெயினருவியில் நுழைவு வாயில் முன்பு பேரிகார்டுகள் வைத்து தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயினருவியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் மெயினருவி, ஐந்தருவியில் சற்று தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க போலீசார் அனுமதி வழங்கினர். பழைய குற்றாலம் அருவியில் இன்று 3-வது நாளாக தடை நீடித்தது.

    • சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் அனைவருக்கும் விற்பனை அதிகரித்துள்ளது.
    • அருவி பகுதியில் மிகவும் குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சீசன் களை கட்டியுள்ளது.

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் அனைவருக்கும் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் குற்றால பகுதிகளைச் சுற்றிலும் அமைந்துள்ள சொகுசு விடுதிகள் அனைத்தும் ஆகஸ்ட் 10-ந் தேதி வரையில் முழுமையாக புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் சொகுசு விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

    தங்கும் விடுதிகள் பெரும்பாலும் நிரம்பியதால் குடும்பங்களாக வரும் பல சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே மர நிழல்களில் தங்கி உணவை சமைத்து உண்டு குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர்.

    எனவே குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் தமிழக அரசு மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து தங்கும் விடுதிகளை அதிகளவில் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    அருவி பகுதியில் மிகவும் குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    அவர்களும் பணிச்சுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றால அருவிகளில் அதிகப்படியான போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஐந்தருவி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் அருவிகளில் குளிப்பதற்காக வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலையில் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை அமைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அருவி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்று ஐந்தருவி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து பாட்டில்கள், டீ கப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • குற்றாலம் பகுதிகளில் இன்று காலை முதல் மழை குறைந்துள்ளதால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துவிட்டது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன், ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் அணை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அங்கு 30 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 63 அடியாக இருந்த நிலையில் இன்று 64.70 அடியாக உயர்ந்தது. இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையும் 2 அடி உயர்ந்து 79.82 அடியாக உள்ளது.

    தொடர்ந்து அணை பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருவதால் நெற்பயிர் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வயல்களில் தொழி அடிக்கும் பணியும், சில இடங்களில் நாற்று நடவு செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஐந்தருவிக்கு படையெடுத்தால் அங்கு கூட்டம் அலைமோதியது.

    குற்றாலம் பகுதிகளில் இன்று காலை முதல் மழை குறைந்துள்ளதால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துவிட்டது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 21 மில்லிமீட்டரும், தென்காசி, ஆய்குடியில் தலா 14 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை குண்டாறு அணையில் அதிகபட்சமாக 47 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை சுமார் 1 மாதமாக முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    இதனால் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி பணி நடைபெற்று வருகிறது.

    • தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் நேற்று மதியம் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. நேற்று இரவு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் காலை முதல் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலத்தில் இன்று காலை அதிகமான சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    ஐந்தருவி செல்லும் பாதையில் அமைந்துள்ள படகு குழாமில் நீர் முழுமையாக நிரம்பி உள்ளதால் படகு சவாரி தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது. மேலும் தற்போது கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக குற்றால பகுதிகளில் தொடர் மழை எதிரொலியாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதாலும், சீசன் களைகட்டி உள்ளதாலும் தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த சாரல் திருவிழா இந்த ஆண்டு கோலகலமாக நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    தென்காசி, நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 8 மில்லிமீட்டரும், கடனாநதி பகுதியில் 7 மில்லிமீட்டரும் பதிவாகி உள்ளது.

    அதேபோல் மணிமுத்தாறு, ராமநதி, கருப்பாநதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

    தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    அதன்படி சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 73.46 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைநீர்மட்டம் 75.30 அடியாகவும், பாபநாசம் அணை நீர்மட்டம்58 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் இன்று 1.5 அடி உயர்ந்து 54.50 அடியாகவும், ராமநதி அணைநீர் மட்டம் 2 அடி உயர்ந்து 68.50 அடியாகவும் உள்ளது.

    அதேபோல் குண்டாறு முழுகொள்ளளவான 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை 55 அடியாகவும், கருப்பாநதி 25.92 அடியாகவும் உள்ளது.

    • நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
    • தென்காசி பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

    இன்று அதிகாலை முதலே தென்காசி பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல மழை அதிகமாக பெய்தது. மதியம் 12 மணி அளவில் மெயினருவி, ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.

    மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக்கொட்டி வருகிறது.
    • தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வண்ணம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக்கொட்டி வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். ஐந்தருவி செல்லும் பாதையில் அமைந்துள்ள படகு குழாமில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யும் வண்ணம் அதற்கான பணிகளை சுற்றுலா துறையினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    சீசன் களைகட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வண்ணம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே கடனா, ராமநதி, அடவிநயினார், குண்டாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை வரையிலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதகிளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கடனா அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. 85 அடி கொண்ட அந்த அணையில் தற்போது 53 அடி நீர் இருப்பு உள்ளது.

    இதேபோல் ராமநதி அணையின் நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 66.50 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணையில் 53.75 அடி நீர் இருப்பு உள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது. ஆலங்குளம், கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு சாரல் மழை பெய்வதோடு குளிர்ந்த காற்று வீசுகிறது.

    • இன்று அதிகாலை முதல் மலை பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
    • அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் 12 மில்லிமீடடர் மழை பதிவாகியது.

    தென்காசி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. வழக்கமாக கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டமான தென்காசியில் சாரல் மழை பரவலாக பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கிவிட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது அணை பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயினருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியது. குற்றாலம் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் மெயினருவிக்கு குளிக்க சென்றதால் அங்கு கூட்டம் சற்று அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மலை பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் காலையில் அங்கு சுற்றுலா பயணிகள் அங்கு வழக்கம்போல் குளித்து மகிழ்ந்தனர்.

    குற்றாலத்தில் சீசனை எதிர்நோக்கி வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் காத்திருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் 12 மில்லிமீடடர் மழை பதிவாகியது. குண்டாறு அணையில் 3 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது.

    • குற்றாலம் பகுதிகளில் பெய்த மிதமான மழையினால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியை விட ஐந்தருவியில் மூன்று ஓரளவிற்கு தண்ணீர் விழுகிறது.
    • குற்றாலத்தில் விடுமுறை நாட்களை போன்று இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மிதமான மழையினால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியை விட ஐந்தருவியில் மூன்று கிளைகளில் ஓரளவிற்கு தண்ணீர் விழுந்து வருவதால் அதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகாலை முதல் சற்று அதிகமாக காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் அவர்களை வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். விடுமுறை நாட்களைப் போன்று இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

    ×