search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது- குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
    X

    குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது- குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

    • இன்று அதிகாலை முதல் மலை பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
    • அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் 12 மில்லிமீடடர் மழை பதிவாகியது.

    தென்காசி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. வழக்கமாக கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டமான தென்காசியில் சாரல் மழை பரவலாக பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கிவிட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது அணை பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயினருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டியது. குற்றாலம் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் மெயினருவிக்கு குளிக்க சென்றதால் அங்கு கூட்டம் சற்று அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மலை பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் காலையில் அங்கு சுற்றுலா பயணிகள் அங்கு வழக்கம்போல் குளித்து மகிழ்ந்தனர்.

    குற்றாலத்தில் சீசனை எதிர்நோக்கி வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் காத்திருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் 12 மில்லிமீடடர் மழை பதிவாகியது. குண்டாறு அணையில் 3 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது.

    Next Story
    ×