search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam Tinsukia ATM"

    அசாமில் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.12,38,000 மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை எலிகள் வேட்டையாடி பணத்தின் மதிப்பை இழக்கச் செய்துள்ளன. #ATM #Rats #Destroyed
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் தின்சுகியா நகரில் லாய்புலி என்னும் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர்.

    இந்த நிலையில், கடந்த 11-ந்தேதி ஏ.டி.எம். எந்திரத்தின் பழுதை சரி செய்வதற்காக மெக்கானிக்குகள் சிலர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் எந்திரத்துக்குள் வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவை அனைத்தும் எலிகளால் கடித்துக் குதறப்பட்டவை என்பது தெரிய வந்தது. ரூ.12,38,000 மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை இப்படி எலிகள் வேட்டையாடி பணத்தின் மதிப்பை இழக்கச் செய்துள்ளன.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த மாதம் 19-ந்தேதி ரூ.29 லட்சம் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பப்பட்டது. மறுநாளே அது செயல்படவில்லை. எந்திரத்தின் பழுதை நீக்கியபோது, 16,62,000 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே எவ்வித சேதமும் இன்றி மீட்க முடிந்தது. ரூ.12,38,000 நோட்டுகளை எலிகள் கடித்து சின்னாபின்னமாக்கி விட்டன” என்றனர்.

    இச்சம்பவம் குறித்து தின்சுகியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேநேரம் எலிகள் இவ்வளவு பணத்தை கடித்து சிறுசிறு துண்டுகளாக்கியதாக கூறுவது அப்பகுதி மக்களிடையே பெருத்த சந்தேகத்தை கிளப்பி உள்ளது. பழுதடைந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்ய ஏன் 20 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  #ATM #Rats #Destroyed
    ×