search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amman temple"

    • மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர்.
    • நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவில், இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டதாகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமூகத்தினர், சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்வாதாரம் தேடி நிலக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த சமயத்தில், நிலக்கோட்டை பகுதியில் வசித்த மக்கள் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நாடார் சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள், இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம் தான் காரணம் என்று கருதினர். எனவே அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நிலக்கோட்டையில் மிக சிறிய அளவில் மாரியம்மனுக்கு கோவிலை கட்டினர். கோவிலின் அருகே தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து, பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். இதன் எதிரொலியாக, நிலக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட நோய் தாக்குதல்கள் விரைவாக குறைந்தன.

    அம்மனின் அருளால் தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நாடார் சமூகத்தினர் நம்பினர். அதன்பிறகு கடந்த 1912-ம் ஆண்டில், இந்த கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும், நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் 75 ஆண்டுகளுக்கு பிறகு 1987-ம் ஆண்டு கலைநயத்துடன் கூடிய பல்வேறு வேலைபாடுகளுடன் திருப்பணிகள் நடத்தி கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு கோவிலின் முன்புறம் புதிதாக 5 நிலைகள் கொண்ட 50 அடி உயர ராஜகோபுரம் அமைத்து, மிக பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    கோவில் வளாகத்தில் முதல் கடவுள் விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணாச்சலேஸ்வரர், பைரவர், லிங்கோத்துபவர், ஆஞ்சநேயர் மற்றும் ஒரே இடத்தில் ரங்கநாதர், மகாலட்சுமி, கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வேண்டி வழிபட்டு வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தரும் தெய்வமாக மாரியம்மன் வீற்றிருக்கிறார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    வாழைப்பழம் சூறையிட்டு வழிபாடு

    நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதேபோல் வாழைப்பழ சூறையிடும் நிகழ்ச்சி திருவிழாவில் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

    மனவேதனை நீங்கியதற்காக வாழைப்பழங்களை பக்தர்கள் சூறையிடுகின்றனர். இதற்காக கோவில் முன்பு வாழைப்பழங்களை குவியலாக வைத்து, சூறையிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்த வேண்டுதல் நிகழ்ச்சி, பல ஆண்டுகளாக நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    கரும்புத்தொட்டில் சுமக்கும் தம்பதிகள்

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். அவர்களது கோரிக்கையை அம்மன் நிறைவேற்றுவார். இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதிகள் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதன் மூலம் கரும்புகளில் தொட்டில் கட்டுவார்கள். குழந்தையை அதில் படுக்க வைத்து நிலக்கோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்து, பின்பு கோவிலை 3 முறை சுற்றி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    அதன் பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் விழாவில் கரும்பு தொட்டில்களில் நேர்த்தி கடன் செலுத்தும் தம்பதிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிய வண்ணம் இருக்கிறது.

    நோய்களுக்கு அருமருந்தாகும் தீர்த்தம்

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால், பக்தர்களின் வாழ்வில் இடர்பாடுகள் நீங்குகிறது. பல்வேறு நோய்களும் தீர்ந்து வருகிறது. கோடைக்காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் பல்வேறு கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்கள் தீர அம்மனை மனதார வேண்டி கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோவிலில் வழங்கப்படுகிற தீர்த்தத்தை 3 நாட்கள் தொடர்ந்து அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என்பது ஐதீகம். இதேபோல் பிற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இக்கோவிலின் தீர்த்தம் உள்ளது.

    • இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.
    • இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது.

    கிராமப்புறங்களில் இருக்கும் கோவில்களில் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கும். அதிலும் சின்னஞ்சிறு கோவில்களில் இருக்கும் சிறப்பம்சங்களை பார்க்கும் போது, அவற்றில் சில வியப்பை அளிக்கலாம். கிராம தெய்வங்கள், கிராம காவல் தெய்வங்கள் என்று மக்கள் பல்வேறு விதமாக சிறு தெய்வங்களை கொண்டாடி வருகிறார்கள். அப்படியொரு சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், கடலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலம்பிமங்கலத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன் திருக்கோவில்.

    சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. முன்னதாக நம்மை வரவேற்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு வளைவு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வளைவிலும் சிலம்பியம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    கோவிலுக்குள் சென்றால் மகா மண்டபம், அதன் மேற்கூரையின் நடுவில் சிலம்பியம்மன் உள்பட 7 அம்மன்களை நாம் தரிசிக்கலாம். அதைக் கடந்து சென்றால், திரிசூலம், பலிபீடம், அம்மனின் வாகனமான சிம்மம் ஆகியவை உள்ளன. கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள்.

    தல வரலாறு

    இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. அதனால் இது மிகவும் தொன்மையான ஆலயம் என்பது புலனாகிறது. ஒரு முறை தில்லை எனப்படும் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும், தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள், 16 கரங்களைக் கொண்ட தில்லைக்காளி அம்மன். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று சீறிப்பாய்ந்து ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.

    நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும், இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன.

    மேலும் சிலம்பியம்மனுக்கு கோவில் அமைக்க அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே, ஆலயத்தை நிறுவலாம் என்று நினைத்தனர். அதற்காக பள்ளம் தோண்டியபோது, விநாயகர், நந்தி, ஆஞ்சநேயர், அங்காளம்மன், எருமை வாகனத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, மணிமேகலை, பாவாடைராயன், நாககாளி, கருமாரியம்மன், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆகியோரது திருவுருவச் சிலைகளும் பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்டதை கண்டு மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அதன்பின்னர் இங்கு அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இங்குள்ள மக்கள் பலரும் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, இப்பகுதி மக்கள் அனைவரும் இத்தல அன்னையிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். அம்மனும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்றளவும் அமோகமான விளைச்சலை தந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், இப்பகுதி விவசாயிகள் முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.

    இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில் அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன், தில்லை காளியின் மறு வடிவமாகவே இந்தப் பகுதி மக்களால் பார்க்கப் படுகிறார். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும், தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை. இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எந்த தெய்வச் சிலைகளும், வெளியில் இருந்து கொண்டுவரப்படவில்லை என்பதே இந்த புண்ணிய பூமியின் சிறப்பை எடுத்துக்கூறுவதாக அமைந்திருக்கிறது.

    ஊர் கட்டுப்பாடு

    வைகாசி மாதம் 1-ந் தேதி முதல் பத்து நாள் உற்சவம் இக்கோவிலில் நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வு தொடங்கி 10-ம் நாள் காப்பு களையும் வரை, இந்த ஊரில் வசிக்கும் யாரும் வெளியூர் செல்லக்கூடாது. வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், காப்பு கட்டும் நிகழ்வுக்கு முன்பாக ஊருக்குள் வந்துவிட வேண்டும் என்பது நடைமுறை வழக்கமாக இருக்கிறது. இதை யாரும் மீறுவதில்லை என்கிறார்கள். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும், சிலம்பியம்மன் மட்டுமே உற்சவராக ஊருக்குள் வீதி உலா வருவார். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறியதற்காக இங்கு பலவிதமான நேர்த்திக் கடனை செய்கிறார்கள்.

    இது தவிர ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். அங்கிருந்து கோவில் இருக்கும் மணல் திட்டுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

    -பொ.பாலாஜிகணேஷ்,

    சிதம்பரம்.

    • இந்த கோவில் பழமையான தலவரலாற்றை கொண்டுள்ளது.
    • 65அடி உயரத்தில் பவுர்ணமி தேவியின் பஞ்சலோக சிலை உள்ளது.

    தலவரலாறு

    திருவனந்தபுரம் வெங்கானூரில், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான தலவரலாற்றை கொண்டுள்ளது. முன்காலத்தில், கேரளாவில் திருவிதாங்கூர் பிரதேசத்தை விழிஞ்ஞத்தை மையமாக கொண்டு ஆய்ராஜவம்சத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களின் போர் தேவதையாக பவுர்ணமிக்காவு தேவி இருந்து வந்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆய் ராஜவம்சத்தின் வெற்றிக்கு பவுர்ணமிக்காவு தேவிதான் காரணம் என்பதை உணர்ந்த சோழ மன்னர்கள், தேவியின் சிலை மற்றும் ஆபரணங்களை அபகரிக்க திட்டமிட்டனர்.

    இதை அறிந்த ஆய்மன்னர்கள் விழிஞ்ஞம் கோவிலில் இருந்து, தேவியின் சிலையை எடுத்து அருகில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு மரச்சுவட்டில் நிறுவினர். சிலையை வனப்பகுதிக்கு மாற்றியதால், ஆய் மன்னர்கள் வியாபாரம், போர் ஆகியவற்றிற்கு செல்வதற்கு முன்பாக, யாகங்கள், பூஜைகள் செய்ய இந்த புதிய இடத்திற்கு வந்து சென்றனர்.

    பிற்காலத்தில் வந்த ஆய்ராஜவம்ச மன்னர்கள் பவுர்ணமி காவு தேவியை வழிபடவும், முக்கியத்துவம் அளிக்கவும் தவறிவிட்டனர். இவர்களின் செயல் அம்மனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    அம்மனின் கோபம்

    அம்மனின் கோபத்தால் ஆய் ராஜவம்சத்தில் ஓயாத துன்பங்கள், எதிர்பாராத விபத்துகள், தீராத வறுமை ஏற்பட்டது. ஆய் ராஜவம்சம் நாளடைவில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் இந்த பகுதியில் புதிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராஜ வம்சத்தினர் அம்மனை ஆராதிக்க ஏராளமான பூசாரிகளை நியமித்தனர். அவர்களின் ஆராதனை சடங்குகளாலும் அம்மன் திருப்தி அடையவில்லை. நாளடைவில் ஆய் ராஜவம்சத்தினர் பவுர்ணமிகாவு ேதவியை வணங்கி வழிபட்ட இடங்கள் மற்றும் அதை சார்ந்த பகுதிகள் பல்வேறு குடும்பங்கள், தனிமனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனாலும் அம்மனின் கோபம் தணியாத காரணத்தால் அந்த பகுதிகளிலும், குடும்பங்களிலும் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.

    இந்த நிலையில் அம்மனின் மகத்துவத்தை அறிந்த வேத மகா பண்டிதர்கள், அம்மனை சாந்தமாக்கவும், அவர் திருப்தி அடையவும் வேண்டி பூஜைகள் வழிபாடுகளை நடத்த தொடங்கினர். இதன் பலனாக பவுர்ணமிக்காவு தேவி அவர்களுடன் இணக்கமானார். அதைத்தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் அம்மன் கொடுத்த உத்தரவின் பேரில், கோவில் புனரமைக்கப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மஸ்ரீ பூஞ்சார் மித்ரன் நம்பூதிரிப்பாடு படை காளியம்மாவை மறு பிரதிஷ்டை செய்தார். கோவிலில் உள்ள பிரதான பிரதிஷ்டையான படை காளியம்மனை அனைவரும் வணங்கி செல்கின்றனர்.

    இங்கு 51 அக்சர தேவதைகளின் சிலைகள், மிகப்பெரிய பஞ்சமுக கணபதி சிலை, 55 அடி உயரத்தில் சிவனின் சிலை, ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நாகராஜா சிலை, 65அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பவுர்ணமி தேவியின் பஞ்சலோக சிலை போன்றவை அமைந்துள்ளன.

    கோவிலுக்கு செல்லும் வழிகள்

    இந்த கோவில் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லம், வாழ முட்டம் வழி வெங்கானூர் சாவடி நடை உச்ச கடை செல்லும் வழியில் உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பள்ளிச்சல் வழியாக விழிஞ்ஞம் செல்லும் வழியில் பெரிங்கமலை சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் வழியாக வரும்போது உச்சகடை - சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. பிரபஞ்சயாகத்துக்கான ஏற்பாடுகளை பவுர்ணமிக்காவு மடாதிபதி சின்கா காயத்ரி தலைமையில், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை நம்பிக்கை.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.

    அந்தன்காடு

    ஒரு காலத்தில் கேரளாவில் எங்கு பார்த்தாலும் மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிரம்ப பெற்றிருந்தது. அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது. அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாக கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர். உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில் யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடையவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்துக்கு மனமிறங்கிய பார்வதி தேவி, அவர் முன்பாக தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக, இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாளோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார். நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது.

    சிறைச்சாலை

    கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததை கொண்டு அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டது.

    பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் அழகு வண்ண சிற்பங்கள், கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்ப கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    கன்னியர் பூஜை

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலும் பொங்கல் விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவை தவிர மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி ஆலயத்தில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். இந்த அம்மனுக்கு தினமும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பழஞ்சிறை அம்மனை வழிபடுபவர்களுக்கு இன்னல்கள் எதுவும் ஏற்படாது என்பதுடன், அவர்களுக்கு மறு பிறவி என்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருமண தடை நீங்கும்

    அதேபோல் இந்த ஆலயத்தில் நடைபெறும் பூதபலி பூஜை, பஞ்சபூத பொங்கல் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற கோவில் பூசாரி தனது பாதங்களில் சிலம்பு அணிந்து கரங்களில் திரிசூலம் ஏந்தி மூவர்ண பட்டு உடுத்தி வருவார். கோவில் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்நோக்கி செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்குபலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண் பானையில், கைகுத்தல் அரிசியை போட்டு, தண்ணீர் விட்டு நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குலவை ஒலி ஆகியவை எழுப்பப்படும். பொங்கல் தயாரானதும் வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது.

    இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு பஞ்சபூத பொங்கல் என்று பெயர். நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடக்கும். இத்தலத்தில் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

    அமைவிடம் :

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.

    • ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு.
    • இந்தக் கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

    'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்தக் கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

    பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், தாங்கள் ஆண்ட பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தனர். முன்னதாக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், சேர நாட்டில் 108 சிவாலயங்களையும், 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். பரசுராமர் ஆலயங்களை அமைத்த பகுதியே 'கேரளம்' என்று அழைக்கப்பட்டது. பிற்கால சேரர்கள், சிவன் கோவில்களுடன், பராசக்தியை பகவதி அம்மனாக, சாமுண்டி தேவியாக பற்பல இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

    இவ்வாறு 'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள். இது பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான ஆலயம் ஆகும்.

    தல வரலாறு

    வேதவிற்பன்னர் ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் அருளினார். யோகீஸ்வரனும் தன்னுடைய குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர் முன்பு அன்னையானவள், சிறுமி உருவத்தில் தோன்றினாள். அந்த சிறுமியை குருவும், சீடருமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து குடியமர்த்தினர்.

    உடனே அந்தச் சிறுமி, அம்பிகையாக காட்சியளித்து அங்கேயே குடிகொள்வதாகக் கூறி மறைந்தாள். இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே அருள் சுரக்கும் கரிக்ககத்து அம்மனாக விளங்குகிறாள். இந்த அம்மனை பராசக்தி என்றும், பகவதி என்றும், பரமேஸ்வரி என்றும் அங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர்.

    ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு. சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக அம்மனை மக்கள் வழிபாடு செய்கின்றனர். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரமாகவே உள்ளனர். இந்தச் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை.

    முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தின் கருவறை மூலஸ்தானத்தில், சாமுண்டிதேவியின் உருவம் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்பில் பீடத்தின் பிரதிஷ்டையாக இருந்தது. நாளடைவில் பக்தர்கள், தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய விக்கிரக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக செய்து பிரதிஷ்டை செய்தனர். அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.

    இந்த அம்மனுக்கு கடும் பாயசம் நைவேத்தியமாக படைக்கப் படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் 'கறுப்புக் கயிறு' மந்தரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.

    இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை 'சத்ரு சம்கார' (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்தசொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.

    இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, நாகர் வனம், அன்னபூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    வழக்கைத் தீர்க்கும் அம்மன்

    ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும் படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, 'இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்' என்றான்.

    'யார் குற்றவாளி' என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.

    'அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!' என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.

    அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7-ம் நாளில் பொங்கல் வைக்கும் விழா நடக்கும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, ஏப்ரல் மாதம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. விழாவின் இறுதிநாளான ஏப்ரல் 2-ந் தேதி பொங்கல் விழா நடைபெறும்.

    ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி தேவி ஆலயம்.

    -பிரபா முத்துக்குமார், திருவனந்தபுரம்.

    • நெடுங்காலம் அந்த தலைமுடி வடிவ பீடம் மட்டுமே இருந்தது.
    • ஒரு குடும்பதெய்வத்தின் கதை அதனுடன் இணைந்து இன்றைய ஆலயக்கதை உருவாகியிருக்கிறது.

    இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம்: ஓர் இந்து, நாட்டார்த் தெய்வம். கன்யாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் முடிப்புரை எனப்படுகிறது. இங்குள்ள நீலகேசி அம்மனுக்கு குழந்தைகளை தூக்கியபடி நெம்புகோல் ஒன்றில் தொங்கியபடி சுற்றிவரும் தூக்கு நேர்ச்சை எனப்படும் வழிபாடு செய்யப்படுகிறது.

    இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் கன்யாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில், குலசேகரம் அருகே இட்டகவேலி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் இது முடிப்புரை எனப்படுகிறது. வழிபடப்படுவது முடி எனப்படும் ஒரு பொருள். அண்மைக்காலம் வரை ஆலயம் என்னும் அமைப்பு இல்லாமல் வழிபடுபொருட்களான முடி வைக்கும் கட்டிடமே இருந்தது. இப்போது ஆலயமாக மாற்றமடைந்துள்ளது.

    நீலகேசி அம்மன் கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இட்டகவேலியின் தெய்வம் நீலகேசி அம்மன் எனப்படுகிறது. நீலகேசி என்பது தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. அக்கதையில் நீலகேசி என குறிப்பிடப்படும் தெய்வம் கணவனால் கொல்லப்பட்டு பேயான ஒரு பெண். சமண முனிவரால் மனம்திருந்தி அவர் ஆணைக்கேற்ப சமணக்கருத்துக்களை மறுதரப்புகளுடன் விவாதித்து நிறுவியவள். அந்தக் கதையின் இன்னொரு வடிவம் கள்ளியங்காட்டு நீலி என்ற பெயரில் கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்குகிறது. பழையனூர் நீலி என்ற பெயரிலும் அக்கதை தமிழகத்தில் வழங்குகிறது

    நீலகேசி என்னும் தெய்வம் சமண மதத்தின் வருகைக்கு முன்னரே தமிழ்நிலத்தில் வழிபடப்பட்ட பெண்தெய்வமாக இருக்கலாம். சமணம் அதை உள்ளிழுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சமணத்தெய்வமான நீலகேசி பின்னர் நாட்டார் தெய்வமாக உருமாற்றம் அடைந்து உள்ளூர் தொன்மங்கள் ஏற்றப்பட்டிருக்கவும்கூடும்.

    வரலாறு :

    பனங்கோட்டு நாயர் குடியைச் சேர்ந்த ஒரு பெண் கணவன் இறந்தபின் தன் தமையனுடன் வாழ்ந்தாள். அவள் மகள் பெயர் நீலகேசி. அவளை தாய்மாமனின் மனைவி கொடுமை செய்தாள். நீலகேசியை அடுப்பெரிக்க தீ வாங்கிவரும்படிச் சொல்லி ஓட்டைக் கொட்டாங்கச்சியைக் கொடுத்து அண்டையிலிருந்த பாண்டிநாட்டு கணியன் வீட்டுக்கு அனுப்பினாள். ஓட்டைவழியாகச் தீ சுட்டதனால் அவள் விரலை வாயிலிட்டு சப்பினாள். கணியன் வீட்டில் எதையோ வாங்கி தின்றுவிட்டாள் என பழிசுமத்திய மாமி மாமனிடம் கோள் சொல்லவே மாமன் அவளை கடுமையாக தண்டித்தான். நீலகேசி ஓடிப்போய் ஒரு புதரில் ஒளிந்துகொண்டாள். கணியர் அவளுக்கு உணவு அளித்தார். தாய் நீலகேசியை தேடிவந்து திரும்பக் கூட்டிச்செல்லும்போது நீலகேசி குளத்தில் பாய்ந்து மூழ்கி மறைந்தாள். அவள் அன்னையும் உடன் பாய்ந்தாள். அதை அறிந்து வந்த நீலகேசியின் பாட்டியும் நீரில் பாய்ந்து மடிந்தாள்.

    அவர்களின் உடல் கிடைக்கவில்லை. முடிக்கற்றைகள் மட்டுமே கிடைத்தன. கணியனின் ஆணைப்படி அந்த முடிக்கற்றைகளை தெய்வமாக கோயிலில் வைத்து அவர்களின் குடும்பம் வழிபட்டது. மூன்று முடிகளுடன் வெள்ளிப்பிள்ளை என்னும் சிறிய சிலையும் அங்கே நிறுவப்பட்டது.

    பனங்கோட்டு நாயர்கள் என்னும் குடும்பக் குழுவுக்கு உரிமைப்பட்ட குடும்பதெய்வ ஆலயமாக இருந்தது இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம். கணியர் சாதியினர் அதில் வழிபாட்டுரிமை, பூசையுரிமை கொண்டவர்கள். பின்னர் அனைவரும் வழிபடும் கோயிலாகியது.

    நீலகேசி அம்மன் என்னும் பெயரோ, அப்பெயர் கொண்ட ஆலயமோ முன்னரே இருந்திருக்கலாம். ஒரு குடும்பதெய்வத்தின் கதை அதனுடன் இணைந்து இன்றைய ஆலயக்கதை உருவாகியிருக்கிறது.

    கோயில் அமைப்பு

    வரிசையாக அமைந்த மூன்று கருவறைகளில் நடுவில் நீலகேசி அம்மன் கருவறை, மேற்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய தாயின் கருவறை, கிழக்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய பாட்டியின் கருவறை ஆகியவை உள்ளன. தலைமுடியை விரித்து வைத்தது போன்ற பீடங்களின் மேல் அம்மனின் நகைகளும் மணிமுடியும் வைக்கப்பட்டுள்ளது. நெடுங்காலம் அந்த தலைமுடிவடிவ பீடம் மட்டுமே இருந்தது. அது பனையோலையாலான பெட்டிக்குள் வைத்து வழிபடப்பட்டது. முன்பு ஓலைக்கூரை கொண்ட சிறிய குடிலில் இருந்த தெய்வங்கள் பின்னர் ஓட்டுக்கட்டிடத்தில் அமைந்தன. இப்போதுள்ள கோயில் பின்னர் கட்டப்பட்டது.

    அன்றாட வழிபாடு

    முப்பதாண்டுகளுக்கு முன்புவரை நீலகேசி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் மதியவேளையில் பூசை செய்யப்பட்டது. இப்போது அன்றாட பூசை நடைபெறுகிறது. பச்சரிசி, பழம், அவல்பொரி, மஞ்சள்பொடி, இளநீர், கமுகம்பூ ஆகியவை படையலிடப்படுகிறது.

    விழா

    நீலகேசியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். விழா தொடங்கும் முன்பு நாயர்வழிக் குடும்பத்தினரில் மூத்த ஒருவருக்கு காப்பு கட்டுவர். அதன் பின்பு வடக்கன்குளம், தச்சநல்லூர், ஶ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இருந்து வரும் கணியர் இனப் பூசாரிகளை, பூதப்பாண்டி பகுதிக்கு மேளதாளத்துடன் சென்று எதிர்கொண்டு வரவேற்பார்கள். கணியப் பூசாரிகள் அம்மனை வழிபட்ட பிறகு வெள்ளிப் பிள்ளை, மற்றும் மூன்று முடி பீடங்களை புதிய கோயிலிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பிறகு புதிய கோயில் பூட்டப்பட்டுவிடும். பீடங்களை உற்சவம் நடைபெறும் இடத்துக்கு அதாவது முடிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள கோயிலில் வைத்து பூசை செய்வர். அதன்பின்பு தினமும் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.

    திருவிழாவின் ஏழாம்நாள் நடைபெறும் தூக்க நேர்ச்சைச் சடங்குகோயிலின் சிறப்பான வழிபாட்டு முறையாக உள்ளது. எட்டாம் நாள் விளக்குப்பூசை நடைபெறும். ஒன்பதாம் நாள் அன்று நீலகேசி, அத்தையை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும் கமுகுப் பிடுங்குதல் சடங்கு நடைபெறும். , ஒரு கமுகு மரத்துக்குப் பூசை செய்து, வேருடன் பிடுங்கி, மரத்தின் ஒரு பகுதியை நீலகேசியாகவும் மற்றொரு பகுதியை மாமியாகவும் கருதி இருபக்கமும் ஆட்கள் நின்று இழுப்பார்கள். இறுதியில் நீலகேசி வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

    அதன்பின்பு கமுகமரத்தை ஓரிடத்தில் நட்டு வைப்பர். பின்னர் கமுகமரத்தின் உச்சியில் தீபம் ஏற்றி வைப்பர். பத்தாம் நாள் காளிக்கும் தாருகனுக்கும் நடந்த தாருதயுத்தம் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கணியர் இன மக்களில் ஒருவர் முடிவடிவமுடைய நீலகேசி அம்மன் பீடத்தைத் தலையில் எடுப்பார். மற்றொருவர் தாருகன் வேடம் பூணுவார். இருவரும் சண்டை இடுவதுபோல பாவனை செய்வர். இறுதியில் காளி தாருகனை வெற்றி கொள்வதாகச் சடங்கு நிறைவுறும். விழா முடிந்த பிறகு பீடங்கள் எடுத்துவரப்பட்டு மீண்டும் புதிய கோயிலில் வைக்கப்படும். அத்துடன் விழா நிறைவுறும். விழாமுடிந்த எட்டாம் நாள் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

    தூக்குநேர்ச்சை

    தமிழகத்தில் குமரிமாவட்டத்திலும், கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பத்ரகாளி ஆலயங்களில் நிகழும் ஒருவகை வழிபாடு தூக்கு நேர்ச்சை எனப்படுகிறது. நெம்புகோல்வடிவம் கொண்ட ஒரு அமைப்பில் கயிற்றில் தொங்கும் பூசாரியிடம் சிறுகுழந்தைகளை அளித்து ஆலயத்தைச் சுற்றிவந்து திரும்பப் பெறுதல் இச்சடங்கு. குழந்தைகளை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்ற இது செய்யப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அம்மயிறக்க திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த நேற்று தொடங்கியது. இந்த விழாவில் 26-ந் தேதி 2007 திருவிளக்கு பூஜை, 28-ந் தேதி தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. தொடர்ந்து 30-ந் தேதி கமுகு எழுந்தருளுதல், விழாவின் இறுதிநாளான 31-ந் தேதி பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

    • இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
    • இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    சைவ சமய குரவர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கள் அடியார் திருக்கூட்டங்களோடு பல புண்ணிய தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபடலாயினர். இவ்வகையில் திருவீழிமிழலை என்னும் பதியில் அருள்மிகு அழகிய மாமுலை அம்மன் உடனுறை வீழிநாதசுவாமியை வழிபடும் காலத்தில் ஈசன் திருவிளையாடல் புரிந்த ஆவண வீதியே தற்பொழுது ஐயன்பேட்டை என்று வழங்கப்படுகிறது. ஐயனே வந்து வியாபாரம் செய்தமையால் ஐயன்பேட்டை என்பதாயிற்று. திருவீழிமிழலை தலவரலாற்றில் இதுபற்றி விரிவாகக் காணலாம்.

    அத்துணைப் புகழ் வாய்ந்த இத்தலத்தின் கீழ்த்திசையில் அருள்மிகு முத்துமாரியம்மன் தனிக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறாள். இக்கோவில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பரம்பரையாக சைவ வேளாளர் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இறைவனார் பரமேஸ்வரன், இறைவி பார்வதிக்கு திருவாய் மலர்ந்தருளிய உபதேசத்தில் பிரமாண்ட கேரள நூல் ஏட்டுச் சுவடியில் இவ்வாலயம்பற்றி நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பன்னெடுங்காலமாகவே இக்குடும்பதினரால் பரம்பரையாக இவ்வாலய வளாகத்தில் விஷக்கடி நிவாரணம், ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் அம்மனின் அருட்சக்தி கொண்டு அளிக்கப்படுகிறது. குறிப்பாக நாய்க்கடி, எலிக்கடி, பூனைக்கடி, மனிதக்கடி மற்றும் அனைத்துவித மிருகங்களின் கடிகளுக்கும், விஷ ஜந்துக்களின் கடிகளுக்கும், விஷக் கடியால் ஏற்படும் தோல் நோய்களுக்கும் எந்தவித பத்தியமும் இல்லாத வகையில் பூரண உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை முடிந்தபின், விபூதி, குங்குமப் பிரசாதம், வழங்கிய பிறகு இந்நிவாரணம் செய்யப்படுகிறது. முதலாவதாக ஆன்மிக சத்விஷயங்கள் கூறிய பிறகு மாந்திரீகர் தனது தலை அசைவினாலும், மந்திரக்கோலின் அசைவு கொண்டும் விஷக்கடியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மணி, மந்திர ஔஷதம் என்ற சித்தாமுறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    மனிதர்களுக்கு மட்டுமின்றி மனிதர்களின் வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, நாய், பூணை, குதிரை, கிளி, புறா, கோழி, வாத்து ஆகிய விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பிராணிகளுக்கும் நிவாரணம் அளிக்கப்படுகிறது. விஷக்கடியால் பாதிக்கபட்ட வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் இந்நிவாரணம் தக்கபடி வழங்கப்படுகிறது. இதைத்தவிர திருமணத் தடைகள் அகலவும், குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பூஜை செய்தும் பக்தர்கள் பயன் அடைகிறார்கள். சித்தப்பிரமை, மனநலம் குன்றியோர், நலம் பெறவும் பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து நிவாரணம் பெறவும் சிறந்த பூஜை பிரார்த்தனை செய்து நல்ல பலனை பெறலாம்.

    நித்திய பூஜையும் வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜையும் முறையாக நடைபெறுகின்றன. தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, ஆராதனைகளும், மாலையில் முத்துமாரியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் செய்வித்து சிறப்பு அன்னதானமும் முறையாக செய்யப்படுகின்றன. அத்துடன் மேற்கூறிய விழாக் காலங்களில் மூன்றாவது வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் பல அற்புத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எதிர்பாரத விபத்துகளில் இருந்து தப்புவதற்கான நிகழ்வுகள், இரவு நேரங்களில் வெவ்வேறு வித பூக்களின் மணங்கள் ஆலயத்தில் வீசுகின்றன. இடைவிடாமல் அடிக்கடி ஆலயத்தில் சர்ப்பங்கள் உலாவுவதை காணலாம்.

    ஆலயத்தில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் விருப்பங்கள் அம்மனின் அருட்சக்தியால் நிறைவேறுகின்றன என்பது கண்கூடு.ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் ஆண்டு திருவிழா நடைபெறும். திருவிழாவின் போது ஹோமங்கள், பால்காவடி, பால்குடம், அலகுகாவடியுடன் திருவீதியுலா வந்து முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும், அலங்காரம், பூஜை ஆராதனைகள் நடைபெறும்.

    ஆலயத் தொடர்பு ; 8526739981.

    கும்பகோணம்- பூந்தோட்டம் - காரைக்கால் வழிதடத்திலும், மயிலாடுதுறை - பூந்தோட்டம் - கும்பகோணம் வழித் தடத்திலும் (மருதவஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கவும்). மயிலாடுதுறை - பூந்தோட்டம் - திருவாரூர் வழித் தடத்தில் பூந்தோடத்திற்கு மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

    • இந்தக் கோவிலை ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
    • இந்த கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது, ஆதிவீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பவுர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு. காரணம் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இந்தக் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி அன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அன்று பால், மஞ்சள், தயிர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

    இந்த ஆதி வீரமாகாளியம்மன் கோவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் குடியிருந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதனை வழிபட்டுவந்துள்ளனர். பின்னர் அவர்கள் இடத்தை காலி செய்து விட்டு சென்ற பின்னர், அந்தப் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் ஒரு புற்று ஒன்றும் இருந்துள்ளது. இதனை அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு நாள் திடீரென மழை பெய்த போது புற்றின் மேல்பகுதியில் இருந்த மண் கரைந்து கருப்பு நிறத்தில் ஒரு பொருள் வெளியே தெரிந்தது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பிறகு தண்ணீரை அதிக அளவில் ஊற்றிய போது, அந்தப் புற்றில் இருந்து அம்மன் சிலை தென்பட்டது. அது வீரமாகாளியம்மன் சிலை. இதையடுத்து அந்த சிலை காணப்பட்ட இடத்திலேயே பள்ளியூர் மக்களின் முழு ஒத்துழைப்போடு கோவில் கட்டப்பட்டது. அம்மன் சிலை 1½ அடி உயர கருங்கல் சிலை ஆகும். இந்த சிலை 1996-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அதற்கு கோவில் கட்டி 2005-ம் ஆண்டு குட முழுக்கு நடத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு குட முழுக்கு நடத்தப்பட்டது.

    இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.

    3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.

    அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து 1½ கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    பஞ்சபூத தலம்

    பவுர்ணமி அம்மன் என்று அழைக்கப்படும் ஆதிவீரமாகாளியம்மன் கோவில் பஞ்சபூத தலத்தை உள்ளடக்கியது. இந்தக் கோவிலின் முன்புறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இந்த அம்மன் கோவிலுக்கும், விநாயகர் சன்னிதிக்கும் இடையில் குளம் (நீர்) உள்ளது. கோவில் இயற்கை சூழ வயல்வெளிக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதில் 'புற்று' நிலம் என்றும், அம்மன் 'நெருப்பு' என்று அழைக்கப்படுகிறது. கோவில் பகுதியில் (காற்று) எப்போதும் சிலு, சிலுவென்று காற்று வீசிக்கொண்டே இருக்கும். கோவில் திறந்த வெளியில் (ஆகாயம்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்றுடன் கூடிய பசு சிலை

    பாபவிமோசனம், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் வகையில் கன்றுடன் கூடிய பசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்துள்ள பீடம் 3 அடி உயரமும், சிலை அமைப்பு 3½ அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள இடத்தின் அருகே புற்று உள்ளது. இதனையும் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். இந்த புற்றுக்கு தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. விநாயகருக்கு தல விருட்சமாக அரசமரம் மற்றும் வேப்பமரம் உள்ளது. இந்த இரண்டு மரங்களுக்கும், திருக்கல்யாணமும் நடத்தப்பட்டுள்ளது. வீரமாகாளியம்மனுக்கு தலவிருட்சமாக புளியமரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    -வெண்ணிலா, பள்ளியூர்.

    • இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

    திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோவில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலும் ஒன்று. திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோவிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.

    கோவில் வரலாறும் திருவிழாவும்:

    நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோவிலுக்கு "குட்டி குடி திருவிழா" என்று நடத்தப் படுகிறது.

    கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து)

    ஆபத்தான ஆறுகள்:

    இந்த கோவில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோவிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோவிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.

    கோவில் அமைந்துள்ள இடம்:

    திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    • காவல் தெய்வமாகவும், எல்லை தெய்வமாகவும் திகழ்கிறாள்.
    • இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் திருக்கோவில். சோழர்கள் காலத்துக் கோவில். கரிகாற் சோழன் காலத்துக் கோவில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோவிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

    பெண் என்றால் இளப்பமாகப் பார்ப்பது' இந்தக் காலத்தில்தான் என்றில்லை… அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கனும் அப்படித்தான் நினைத்தான். தஞ்சாசுரனின் இந்த நினைப்பு, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய வைத்தது. தவத்தின் பலனாக வரம் கிடைக்கவேண்டும் என விரும்பினான். சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான். 'சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது. மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது. பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது. இந்த ஊர் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்' என்று வரம் கேட்டான். அப்படியே தந்தார் சிவனார்.

    அவ்வளவுதான். பேயாட்டம் ஆடினான் தஞ்சாசுரன். தேவர்கள் கலங்கினார்கள். முனிவர்கள் நடுங்கினார்கள். மக்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறினார்கள். தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவை சந்தித்து முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானை சந்தித்து வணங்கினார்கள். 'எந்த ஆணாலும் உயிர் போகக் கூடாது என்றும் நம் மூவராலும் உயிர் போகக் கூடாது என்றும் அவன் வரம் கேட்டான். நீங்களும் கொடுத்துவிட்டீர்களே… இது நியாயமா? என்ன செய்வது?' என்று வேண்டினார்கள். சிவபெருமான், உமையவளைப் பார்த்தார். அழைத்தார். பார்வதிதேவி புரிந்துகொண்டார்.

    தன் வாகனமான சிங்கம் கர்ஜித்து வந்தது. அதில் அமர்ந்துகொண்டாள். கௌரி காளியானாள். எண்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ரத்தச் சிவப்பேறிய கண்களுக்குள் கோபம் கொப்பளிக்க, தஞ்சன் முன்பு தோன்றினாள். தஞ்சன் வெறிபிடித்து அலறினான். யுத்தத்துக்குத் தயாரானான். வில் வளைத்து மழையாகப் பாணங்களை தொடுத்தான். தேவி தன் சிறு அசைவால் அந்த பாணங்களைப் புறந்தள்ளினாள். சிம்மத்தின் மீதேறி அமர்ந்து கர்ஜித்தாள். தஞ்சனின் மார்பு மீது கதையால் அடித்து உதைத்துத் தள்ளினாள். மாய உருவங்கள் எடுத்து அம்பிகையை தாக்கினான் தஞ்சன். இறுதியில் தன் மூதாதையர் போல எருமை உருகொண்டு ஆக்ரோஷமாக தேவி மீது பாய்ந்தான். சிறிதும் தயங்காமல் ஏகௌரியானவள் தஞ்சாசுரனின் தலையை சீவி எறிந்தாள். தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.

    தஞ்சனை வதைத்த பின்னும் சீற்றம் குறையாத தேவி, வனமெங்கும் அலைந்தாள். அவளுடைய வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டன. தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் முறையிட்டனர். ஈசனும் 'ஏ, கௌரி, சாந்தம் கொள்' என்று கேட்டுக் கொண்டார். அமைதியடைந்த தேவி நெல்லிப் பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள். சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள். அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.

    தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள், ஏகெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

    தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோவில். இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் ஏகெளரியம்மன்.. இந்த அம்மன் எட்டு திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறாள். காவல் தெய்வமாகவும்,எல்லை தெய்வமாகவும் திகழும் இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம். அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள்.

    • அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ளது.
    • கோவிலின் தல விருட்சம் வேப்பமரம்.

    கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செழுமையான கிராமம் கரம்பயம். இந்த ஊரில் முற்காலத்தில் பால் வியாபாரி ஒருவர் தங்கள் கிராமத்தில் இருந்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு தினசரி சென்று பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு நாள் பால் கொண்டு செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி பால் கீழே கொட்டி விட அவரும் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதனால் மிகவும் வருத்தம் அடைந்த அவர் வீடு திரும்பினாா். மறுநாள் பால் கொண்டு செல்லும்போதும் அதே இடத்தில் கால் தவறி மீண்டும் பால் கொட்டி விட்டது. அன்றும் வருத்தத்துடன் வீடு திரும்பிய அவர் 3-வது நாள் மிகுந்த கவனத்துடன் அந்த குறிப்பிட்ட பகுதி்க்கு சென்றாா். அப்போதும் அவரது கால் இடறி அந்த குறிப்பிட்ட இடத்தில் கீழே விழுந்து பால் கொட்டியது.

    ரத்தம் வெளியேறியது

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மனவேதனை அடைந்த பால் வியாபாரி தனது வீட்டுக்கு வந்து மண்வெட்டி எடுத்துச் சென்று அந்த இடத்தை தோண்டினாா். அப்போது ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மண்வெட்டி சென்றதும் குழியில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி செய்வதறியாது திகைத்து ஊருக்குள் சென்று நடந்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்தது.

    அம்மன் சிலை

    அடுத்த கனமே அந்த பால் வியாபாரி உடலில் அம்மை நோய் தாக்கி உடல் முழுவதும் முத்துக்கள் போடப்பட்டிருந்தது. இதனால் வலியால் பால் வியாபாரி துடித்துப்போனார். இதைத்தொடர்ந்து ஊர் தலைவர் உத்தரவின் பேரில் அந்த இடத்தை பத்திரமாக தோண்டி பாா்த்தபோது ஒரு அழகிய அம்மன் சிலை இருந்தது தெரிய வந்தது.

    ஊர் தலைவரும், ஊர் மக்களும் அதிர்ச்சியுடன் அந்த சிலையை மேலே எடுத்து பார்த்தபோது அழகிய அம்மன் சிலை இருந்தது தெரிந்தது. மேலும் அந்த பால் வியாபாரி, மண்வெட்டியால் வெட்டும் போது ஏற்பட்ட தழும்புகள் இன்றும் அம்மனின் உடலில் உள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக ஊர் தலைவர் உத்தரவின் ேபரில் ஊர்மக்கள் அதே இடத்தில் ஒரு சிறிய கொட்டகை அமைத்து அம்பாளின் உருவத்தை அங்கே வைத்து பூஜை செய்ய தொடங்கினா்.

    கனவில் தோன்றிய அம்மன்

    இதன்பின் பால் வியாபாரியும் வீட்டுக்கு சென்று விட்டார். ஊர் தலைவர் இரவு உணவு முடித்து உறங்கியபோது அவரது கனவில் அம்பாள் தோன்றி நான் இப்பகுதிகளுக்கு நன்மை செய்வதற்காக சுயம்பாக தோன்றி உள்ளேன். அந்த பால் வியாபாரி அறியாமல் செய்த தவறால் அவருக்கு செம் முத்துக்களை(அம்மை நோய்) உடலில் ஏற்படுத்தி விட்டேன்.

    இன்னும் 5 நாட்களில் அவர் உடலில் இருந்து அந்த முத்துக்களை நான் எடுத்து விடுவேன். இப்பகுதியில் யாருக்காவது அம்மை நோய் எப்போது வந்தாலும் எனது கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் நான் சரி செய்து விடுவேன் என்றும், தனக்கு ஒரு கோவில் கட்டி விழா ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினாா்.

    அம்மை நோய் தீர்க்கும் தலம்

    இதன்பின்பு ஊர் தலைவர் விடிந்ததும் பொதுமக்களை கூட்டி அம்பாள் சொன்ன தகவல் அனைத்தையும் சொல்லி அந்த இடத்திலேயே கோவில் கட்டி முத்து மாரியம்மன் என்ற பெயரில் இன்று வரை வழிபாடு செய்கின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    நேர்த்திக்கடன்

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.

    நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

    திருவிழா

    கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20-ந் தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தா்கள் காப்பு கட்டுவார்கள்.

    அடுத்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் காவடி அபிஷேகம், இரவு அரண்மனை மண்டகப்படி நடைபெறும். திங்கட்கிழமை வெளியூர் காவடியும் அபிஷேகமும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை பால்குடம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். புதன்கிழமை பெரிய தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெற்று, இரவு முத்து பல்லக்கு வாணவேடிக்கை நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெறும்.

    வேண்டுதல்கள்

    திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் அனைத்து விழாக்களையும் ஊர் பெரியவர்களும், மண்டகப்படிதாரர்களும், ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    கோவிலின் தல விருட்சம் வேப்பமரம். தீர்த்தக்குளம் கோவில் அருகே உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பா் மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.

    பிரசித்தி பெற்ற தீர்த்தக்குளம்

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.

    தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.

    • குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும்.
    • இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ள கோவிலாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உள்ளது.

    திருமணத்தடை நீக்கி குழந்தை பேறு அளிக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலை பக்தர்கள் நல்வாழ்வு அருளும் நாடியம்மனாக மனதில் வைத்து வழிபட்டு வருகிறாா்கள்.

    காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி வரும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறாா்கள்.

    அம்மன் சிலை

    தற்போது நாடியம்மாள்புரம் என்று அழைக்கப்படும் இத்தலம் முற் காலத்தில் பெரிய வனமாக விளங்கியது. அக்காட்டிலே தஞ்சையை ஆண்ட மன்னர் வேட்டையாடுவதற்காக வந்தார். மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடி புதருக்குள் சென்று மறைந்தது. அப்போது வேடர்கள் சிலர் முயலை துரத்திச்சென்று புதரை வெட்ட அந்த புதரில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதனால் பதற்றமடைந்த வேடர்கள் புதரை விலக்கி பார்த்தபோது அந்த புதருக்குள் அம்பாள் சிலை ஒன்று இருந்தது. இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த வேடர்கள் அம்மன் சிலையின் நெற்றியில் காயம் பட்டு அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதை கண்டு மயக்கம் அடைந்தனர். உடனே அங்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்த மன்னர், அம்பாளுக்கு அதே இடத்தில் கோவில் கட்ட உத்தரவிட்டு மானியமாக நிலங்களையும் வழங்கினார்.

    ஐம்பொன் சிலை

    அக்காலத்தில் வீரமாநகர் என்ற பட்டுக்கோட்டையில் சிறந்த பக்திமானாகவும், செல்வந்தராகவும் விளங்கிய சின்னான் என்பவரிடம் அம்பாளுக்கு கோவில் கட்டும் பொறுப்பை அரசர் ஒப்படைத்தார்.

    நாடியம்பாளுக்கு கோவில் கட்டி நடராஜர் என்பவர் பூஜை நடத்த சின்னான், நாடியம்பாளை குலதெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட்டு வந்தார். நாடியம்மனுக்கு அவர் ஐம்பொன் சிலை வார்த்து ஆராதித்தார். மேலும் இந்த கோவிலில் தீர்த்தக்குளம் உருவாக்கப்பட்டது.

    பங்குனி திருவிழா

    பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் காப்புக் கட்டி திருவிழா தொடங்கி 12 நாட்கள் அம்பாள் வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த 12 நாட்களும் பட்டுக்கோட்டை நகரமும் அதன் சுற்றுவட்டார கிராமங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த 12 நாள் திருவிழாவில் 6-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் நாடியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி செட்டியார் தெருவில் வரகரிசி மாலை போடும் விழா ெவகுவிமரிசையாக நடைபெறும்.

    நாடியம்மனுக்கு காப்புக் கட்டியதும் பட்டுக்கோட்டை வாழ் மக்கள் பாயில் படுக்க மாட்டார்கள். நகரில் செக்கு ஆட்ட மாட்டார்கள். உலக்கை சத்தம் கேட்காது. அந்த அளவுக்கு மக்கள் பயபக்தியுடன் இருப்பார்கள். பட்டுக்கோட்டையிலும், சுற்றுப்புறப் பகுதியிலும் நாடிமுத்து, நாடியான், நாடியம்மை என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அதிகம் உண்டு. நாடியம்மன் கோவில் சில காலம் பரம்பரை அறங்காவலர்களின் பொறுப்பில் இருந்து தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    நாயக்க மன்னர்கள்

    முற்காலத்தில் அடர்ந்த வனமாக விளங்கிய பட்டுக்கோட்டை தற்போது நாடியம்மன் அருளால் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இன்று ஒரு பெரிய நகரமாக விளங்குகிறது. பட்டுக்கோட்டை நாடியம்மனை தேடி வரும் பக்தர்கள் கோடி நன்மை பெறுவார்கள் என்பது சான்றோர் வாக்கு. 1676-ம் ஆண்டுக்கு முன்பு பட்டுக்கோட்டையை நாயக்கர் மன்னர்கள் ஆண்டு வந்தனர்.

    பட்டுக்கோட்டையை ஆண்ட நாயக்கர்களில் ஒருவர் பாளையக்காரரான பட்டு மழவராய நாயக்கர். இவர் பெயரால்தான் பட்டு மழவராயன் கோட்டை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி பின்னாளில் பட்டுக்கோட்டை என பெயர் பெற்றது.

    இங்கு சோழர் காலத்தில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டன. பின்னர் வந்த நாயக்கர் காலத்தில் தான் நாடியம்மன் புகழ் பரவ தொடங்கியது என கூறப்படுகிறது. நாயக்க மன்னர்களில் ஒருவரான ராமப்ப நாயக்கர், இந்த கோவிலின் கருவறை கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழைய கோவிலில் முன் மண்டப அமைப்பு முற்றிலும் நாயக்கர் கலைப் பாணியை தழுவி உள்ளது. முற்காலத்தில் வளைவான செங்கற்கள் சுண்ணாம்பு கொண்டு வலிமையாக கோவில் கட்டப்பட்டிருந்தது. இன்று இக்கோவில் முழுமையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் பழைய சின்னங்கள் அழிந்து விட்டன.

    குழந்தை பேறு அருளும் கோவில்

    கி.பி. 1740-ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்ம மகாராஜா நாடியம்மன் புகழை கேள்விப்பட்டு கோவிலுக்குத் திருப்பணி செய்தார். மேலும் அம்மன் உற்சவ திருமேனி, தேர் போன்றவை செய்யப்பட்டன. மாலிக்காபூர் படையெடுப்பின்போது பட்டுக்கோட்டை தாக்கப்பட்டு சிவன், பெருமாள் கோவில்களும் சேதம் அடைந்தன.

    நாடியம்மன் உற்சவர் சிலை மறைக்கப்பட்டு மராட்டியர் ஆட்சிக்கு வந்த பிறகு இச்சிலை செட்டித்தெரு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை நகரின் குலதெய்வமாக விளங்கும் நாடியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தெய்வமாகும். குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும். இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும்.

    குடமுழுக்கு

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முற்காலத்தில் பெரிய ஏரியாக இருந்த நாடியம்மன் கோவில் குளம் தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி ஓடை போல காட்சி அளிக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரகரிசி மாலை போடும் விழா

    கானகத்தில் கற்சிலையாக கிடைத்த நாடியம்மனுக்கு பொற்சிலை வடித்துக் கொடுத்தார் சின்னான். நாடியம்மனின் அருளால் மாதம் மும்மாரி பொழிந்து வரகுப்பயிர் வளமுடன் விளைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த சின்னான், அம்பிகையே உன்னருளால் எனது காணியில் வரகு விளைந்து வீடு கொள்ளாத அளவுக்கு நிறைந்துள்ளது. உன் அருள் நாடி வந்த எனக்கு செல்வத்தை கோடி, கோடியாய் குவிக்கிறாய். ஆனால் நான் உனக்கு எதை கொடுப்பது? எதை விடுப்பது? என்று தவிக்கிறேன் என்று அம்பாளை வேண்டினார்.

    அப்போது அம்பாள், சின்னானின் கனவில் தோன்றி எனக்கு வரகு அரிசியினாலேயே மாலை தொடுத்து போடு என்று ஆணையிட்டாராம். அன்று முதல் சின்னான் வசித்து வந்த செட்டியார் தெருவில் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி, மூன்றாம் செவ்வாய் இரவு அம்பாள் மகா மண்டபத்துக்கு எழுந்தருளி தினமும் வீதி உலாவும், ஆறாம் நாள் ஞாயிறு காலை சரஸ்வதி தரிசனம், இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் மகா மண்டபத்தில் இருந்து அம்மன் எழுந்தருளி செட்டியார் தெருவில் அம்பாளுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் விழா அதி விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக்காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பஸ் அல்லது காரில் பட்டுக்கோட்டைக்கு வந்து பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீ்ட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று நாடியம்மனை தாிசிக்கலாம்.

    ×