search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amala Paul"

    விஷ்ணு விஷால் - அமலாபால் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வெளியான தகவலுக்கு விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார். #VishnuVishal #AmalaPaul
    நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில் நேற்று திடீர் என்று சமூக வலைதளங்களில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்யஉள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


    விஷ்ணு விஷால்- அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்” என்று கோபமாக பதிவிட்டுள்ளார். #VishnuVishal #AmalaPaul

    ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்யும் புதிய முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. #Aadai #AmalaPaul
    ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.

    இந்த நிலையில், ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்வதாக படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். கலைஞர்களின் மொழிப் பிரச்சனை, படப்பிடிப்பு சூழுலை கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், அதனை சவாலாக எடுத்துக் கொண்டு ஆடை படக்குழு கள இசையை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    இதுகுறித்து ரத்னகுமார் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    ஆடை படத்தில் நேரடி இசை. கள இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி என படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு தேவை என்பது சவாலான ஒன்று. சவாலை ஏற்றுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். #Aadai #AmalaPaul

    அதோ அந்த பறவை போல படத்திற்காக அடர்ந்த காட்டுக்குள் சாகச ஸ்டண்ட் காட்சிகளில் அமலாபால் நடித்ததாக இயக்குனர் கே.ஆர்.வினோத் கூறியுள்ளார். #AmalaPaul #KRVinoth
    செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம், ‘அதோ அந்த பறவை போல’. அட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அமலா பால் கதை நாயகியாக நடித்துள்ளார்.

    கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது, ‘அதோ அந்த பறவை போல’.

    அமலாபால் கதைநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.



    இந்த படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல் வர்ணனையாளரும், ஜனத், ஹவுஸ்ஃபுல் 3, டேஞ்சரஸ் ஐசக் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் அமலாபாலுக்கு நெருக்கமானவராக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இவர் ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். மேலும் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார். படம் பற்றி இயக்குநர் வினோத் பேசும் போது, ‘படத்தின் பெரும்பகுதி வனப்பகுதிகளி்ல் உருவாவதால், அங்குள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வடமாநிலக் காடுகளில் படத்தை உருவாக்குவது எங்களுக்கு சாதகமாக இருந்தது. படத்தில் அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக்குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தது பாராட்டுக்குரியது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்து கொடுத்தார் அமலாபால். ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. தேவையில்லாமல் எந்த காட்சிகளும் எடுக்கக்கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பே திட்டமிட்டோம்.



    படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்த காட்சிகள், ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுக்கும். அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

    ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை  உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
    அதோ அந்த பறவை போல படத்தில் டப்பிங் செய்யும் அமலாபால், டப்பிங் பேசி முடிப்பதற்குள் நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது என்று கூறியுள்ளார். #AdhoAndhaParavaiPola #AmalaPaul
    ராட்சசன் படத்திற்கு பிறகு ’அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார் அமலாபால். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம்.

    கே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார் அமலாபால். இது குறித்து, “எக்சாம் பீவர் போல் இது டப்பிங் பீவர்.

    மைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள் நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ளத் தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை இது? இது அதோ அந்த பறவை போல நேரம்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். செஞ்சுரி இன்டர்நே‌ஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே.ஆர்.வினோத்.



    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் நடிகை அமலா பாலுடன், முன்னணி நடிகர் ஆஷிஸ் வித்யார்தி, சமீர் கோச்சார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். துருவங்கள் பதினாறு, மன்னர் வகையறா, சுட்டுப்பிடிக்க உத்தரவு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமூக கருத்துக்களை சார்ந்து உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. #AdhoAndhaParavaiPola #AmalaPaul

    ராம்குமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளவரை படக்குழு நேற்று அறிமுகப்படுத்தியது. #Ratsasan #VishnuVishal
    முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் `ராட்சசன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் வில்லனாக, சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தவர் சரவணன் என்பவரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

    சரவணன் என்பவர் தான் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal

    ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குநரை பாராட்ட சென்றேன், ஆனால் அவரோ பதறி அங்கிருந்து சென்றுவிட்டதாக அமலாபால் கூறினார். #Ratsasan #AmalaPaul
    ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் நடிகை அமலாபால் பேசியதாவது,

    படம் ரிலீசாகும் போது கடுமையான போட்டி இருந்தது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ராட்சசன் படத்தில் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ராம் ஒரு எளிஜிபில் பேச்சிலர். யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு கல்யாணம் பண்ணியிருந்தால் நடந்திருக்கும் என்று ராமிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். இந்த படத்துக்கு அப்புறம் எல்லாரும் கொஞ்சம் டென்சன் ஆயிருவாங்க, இந்த படத்தின் படப்பிடிப்பில் அனைவருமே கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்த உடனே ராமுக்கு நன்றி தெரிவித்து அவரை அரவணைத்து பாராட்ட சென்றேன். ஆனால் அவரோ பதறியடித்து ஓடியேவிட்டார். ரொம்ப சிறந்த மனிதர்.



    நிறைய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமான விஷ்ணுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது.

    மீடூ பற்றி முதலில் ட்வீட் செய்தது நான் தான். எல்லாருக்கும் தெரியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு ஒரு பாலியல் தொல்லை வந்தபோதே நான் சொல்லியிருந்தேன். எனக்கு ஒரு தொல்லை வரும் போது அது பற்றி நான் பேசிவிட்டேன். இது மூடிவைக்கக்கூடிய விஷயம் அல்ல, இந்த மாதிரியான தொல்லைகள் நிறைய இருக்கிறது. சினிமாவில் மட்டும் இல்லை, மற்ற பல துறைகளிலும் இருக்கிறது. #Ratsasan #AmalaPaul

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் கைப்பற்றியிருக்கிறார். #Ratsasan #VishnuVishal
    முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ராட்சசன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்திற்கான இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், நடிப்பதோடு மட்டுமில்லாமல் புதிய தொழிலிலும் ஈடுபட உள்ளார். #AmalaPaul #Amala
    நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் அவர், அடுத்து சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    ஊட்டச்சத்து தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார்.



    சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்ட அமலாபால் அடுத்து பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராட்சசன் படத்தின் விமர்சனம். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul
    உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு முயற்சி செய்து வருகிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு விஷால், தனது கதைக்காக பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார். பின்னர் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறி வருகிறார். ஆனால் இவரது முயற்சி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணுவின் மாமாவான ராமதாஸ், விஷ்ணு விஷாலை போலீஸ் வேலையில் சேர சொல்லி வற்புறுத்துகிறார். ராமதாஸின் உதவியுடன் போலீஸ் அதிகாரியாகும் விஷ்ணு விஷால் பதவியேற்ற 2 நாளில், பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார்.



    இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் அந்த கொலையில் இருக்கும் மர்மங்களை களைந்து பல தடங்களை சேகரிக்கிறார். இதற்கிடையே பள்ளி ஆசிரியையான அமலா பாலுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அமலா பால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறாள்.

    ஒருவழியாக சை்ககோ கொலையாளியை நெருங்கும் விஷ்ணு விஷாலால், அந்த கொலைகாரனை பிடிக்க முடியவில்லை. மேலும் பணியில் இருந்தும் விஷ்ணு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.



    கடைசியில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூர கொலைகளை செய்யும் ராட்சசனை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? தனது அக்கா மகளை மீட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை விஷ்ணு விஷாலே ஆக்கிரமித்திருக்கிறார். படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அமலாபாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்ந்து செல்கிறார்.



    காமெடி தோற்றத்தில் நடித்து வந்த ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து செல்கிறார். காளி வெங்கட் ஆங்காங்கு வந்து செல்கிறார். ஒரு சில இடங்களிலேயே அவருக்கு சொல்லும்படியான காட்சிகள் இருக்கிறது. ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூசேன் ஜார்ஜ் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

    முண்டாசுப்பட்டி என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படைப்பில் முழு த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும் என்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் காட்சி நீள்வது, ஒருவித சோர்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.



    படத்தில் சைக்கோ கொலையாளி பற்றி எந்த இடத்திலும் கொடூரமான முகத்தையோ, தோற்றத்தையோ காட்டவில்லை. ஆனால், படம் பார்ப்பவர்களை படம் முழுக்க அச்சுறுத்தியிருக்கிறார் ஜிப்ரான். பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார். வில்லன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ராட்சசன்' ஆர்வத்தை தூண்டுகிறான். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul

    ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வரும் அமலாபால், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறார். #Amalapaul #Ratsasan
    விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராட்சசன்’. இந்த படத்தை ராம்குமார் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். ஜி.டில்லிபாபு தயாரித்துள்ளார். ராட்சசன் படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அமலாபால் கூறியதாவது:-

    ‘‘ராட்சசன் கதையை டைரக்டர் சொன்னபோது குழப்பமாக இருந்தது. விஷ்ணு விஷால் போனில் மீண்டும் கதையை விளக்கி சொன்னார். மிகவும் பிடித்து போனது. வித்தியாசமான கதையாக இருந்தது. எனது கதாபாத்திரமும் அழுத்தமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. 

    இந்த படம் மூலம் விஷ்ணு விஷால் நண்பராகி விட்டார். நடிகர் கனவோடு வருபவர்களுக்கு விரக்தி ஏற்பட்டால் விஷ்ணு விஷாலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். தனது கதாபாத்திரம் சிறப்பாக அமைய நூறு சதவீதம் உழைப்பை கொடுப்பார். இது அவருக்கு திருப்புமுனை படமாக இருக்கும். திகில் படங்களுக்கு ரசிகர்கள் உண்டு. ராட்சசன் நமது மண்சார்ந்த திகில் படமாக இருக்கும். ஜிப்ரான் இசை படத்துக்கு பெரிய பலம். இந்த படத்தில் சொந்த குரலில் பேசி இருக்கிறேன். வேறு ஒருவரை டப்பிங் பேச வைப்பது குழந்தையை பெற்று மற்றவரிடம் கொடுப்பது போன்றது. நானே டப்பிங் பேசுவேன் என்று ஒப்பந்தம் போட்டு படங்களில் நடிக்கிறேன். 



    எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்குள்ள இயற்கையான சூழலில் மனம் இதமாகிறது. ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலைதான். அங்கு செல்வது கடவுளிடம் போவது மாதிரி இருக்கும். ஆடை படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் கவர்ச்சியாக நடிக்கிறேன்.’’

    இவ்வாறு அமலாபால் கூறினார். 

    மறுமணம் எப்போது செய்துகொள்வீர்கள்? என்று கேட்டபோது, ‘‘இன்னும் அதுபற்றி யோசிக்கவில்லை. முடிவு செய்யும்போது தெரிவிக்கிறேன்’’ என்றார்.
    ராம்குமார் இயக்கத்தில் ராட்சசன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இயக்குநர் கதை சொல்வதை கேட்டு படத்தில் நடிக்க அமலாபால் மறுத்துவிட்டதாகவும், நான் தான் அவரை நடிக்க வைத்தேன் என்றும் விஷ்ணு விஷால் கூறினார். #Ratsasan
    ராட்ச‌சனாக களம் இறங்கி இருக்கும் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் இருந்து....

    ராட்ச‌சன் படம் ஒரு சைக்கோ இன்வெஸ்டிகே‌ஷன் திரில்லர். சீட்டு நுனியிலேயே அமர்ந்து பார்க்கும் அளவுக்கு சஸ்பென்ஸ் இருந்துகொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்களை அச்சத்திலேயே வைத்திருக்கும். போலீசே பிடிக்காத ஒருவன் போலீஸ் வேலையில் சேர்ந்து ஒரு பெரிய வழக்கை துப்பு துலக்கும் வேடம். 2 போலீஸ் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு முழு படத்திலும் போலீசாக நடித்ததில்லை. விக்ராந்த், கருணா என்று என் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

    போலீஸ் அதிகாரியான அப்பாவிடம் ஆலோசனை பெற்றீர்களா?

    கேட்டேன். அவரும் சில ஆலோசனைகள் சொன்னார். ஆனால் இந்த வேடம் போலீஸ் தான் லட்சியம் என்று வாழ்பவன் கிடையாது. எனவே பெரிய ஆலோசனைகள் தேவைப்படவில்லை.

    அமலாபால்?

    அழகான டீச்சராக வருகிறார். படத்தில் மிகச்சில கதாபாத்திரங்களே வருவதால் அனைவருமே நன்றாக நடிப்பவர்களாக வேண்டும் என்று தேர்ந்தெடுத்தோம். அமலாபால் படத்திற்குள் வந்ததே சுவாரசியமான வி‌ஷயம். இயக்குனர் ராம்குமார் ரொம்ப கூச்ச சுபாவம். அமலாவிடம் கதை சொல்லும்போதே கூச்சப்பட்டுக் கொண்டே சொன்னதால் அமலாவுக்கு படத்தின் மீது சந்தேகம் இருந்தது. மறுத்துவிட்டார். பின்னர் நானே அமலாவிடம் கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன். அமலா மட்டுமல்ல முனீஸ் காந்த், காளி வெங்கட் என அனைவருமே நீங்கள் இதுவரை பார்த்தது போல் அல்லாமல் புதிதாக தெரிவார்கள்.



    ராட்சசன் யார்?

    வில்லன் தான். அந்த வேடத்தை பற்றியோ, அந்த வேடத்தில் நடிப்பவர் பற்றியோ இப்போது எதுவும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரம்.

    காமெடி படங்களிலும் நடிக்கிறீர்கள், ராட்ச‌சன் போல சீரியஸ் படங்களிலும் நடிக்கிறீர்களே?

    எனக்கு கதை தான் முக்கியம். முண்டாசுப்பட்டி காமெடி படமாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல கதை இருந்தது. இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை என நான் நடித்த படங்கள் எல்லாமே அப்படித்தான். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு பிறகு மாவீரன் கிட்டு. இப்போது கதாநாயகனுக்கு பிறகு ராட்ச‌சன். அடுத்து ஜெகஜ்ஜால கில்லாடி பக்கா காமெடி படம். அதற்கு அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் காடன். எல்லாவற்றிலுமே கதை தான் முக்கியம். காமெடி படங்களை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என்றால் நடிப்பதில் விருப்பம் அதிகம். #Ratsasan #VishnuVishal #AmalaPaul

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Ratsasan #VishnuVishal
    விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ராட்சசன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்திருக்கும் இந்த படம் ஒரு சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது.

    நேற்று வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலரிலிருந்து சைக்கோ கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்று ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநோளில் தான் விஜய் சேதுபதியின் 96 படமும், விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Ratsasan #VishnuVishal

    ராட்சசன் டிரைலரை பார்க்க:

    ×