என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
    • ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என இ.பி.எஸ். அறிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

    இந்நிலையில், ஆண்களுக்கும் இலவச பயண வாக்குறுதி ஏன்? என்பதற்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    சிவகாசியில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "மகளிருக்கு மட்டும் இலவச பயணத்தை அறிவித்து ஒன்றாக இருந்த குடும்பத்தை திமுக அரசு பிரித்துள்ளது. மனைவியோடு, காதலியோடு இலவசமாக பயணித்து சினிமாவிற்கு செல்லலாம், ஊர் சுற்றலாம் என்பதற்காகத்தான் ஆண்களுக்கும் இலவச பயணத்தை இபிஎஸ் அறிவித்துள்ளார்" என்று வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்தார்.

    • அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், இபிஎஸ்-ஐ சந்தித்து பேசி இருப்பதாக கூறப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்ததாக தகவல் வெளியானது.

    அவர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாகவும், அதிமுக- பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

    கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தாம் சந்திக்கவில்லை என கொ.இ.பே தலைவர் தனியரசு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

    • 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்தவர்.
    • கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் படைத் தளபதியாக இருந்தவரும், தனது விடா முயற்சியாலும் நம்பிக்கையாலும், கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது, 90 கிலோமீட்டர் வரை செல்லும் காலிங்கராயன் கால்வாயை அமைத்து, வறண்ட பகுதிகளிலும் பாசன வசதி செய்து தந்து, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே விவசாய புரட்சியை தமிழ்நாட்டில் மேற்கொண்டவருமான காலிங்கராயன் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் தை 5ஆம் நாளான காலிங்கராயன் தினத்தில், அவர்தம் தியாகத்தையும் புகழையும் போற்றி வணங்குவதுடன்...

    கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோட்டில் காலிங்கராயன் அவர்களின் மணிமண்டபத்தை நான் திறந்துவைத்ததையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. திட்டங்களை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
    • 5 தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்த உடனே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது.

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.

    இதற்கிடையே எம்.ஜி.ஆர். பிறந்தநாளான நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், ஆண்களும் இலவசமாக பஸ் பயணம், 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம், நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்கள் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இது, 150 நாட்களாக உயர்த்தப்படும். அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறுகையில், தி.மு.க. திட்டங்களை காப்பியடித்து அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், எடப்பாடி பழனிசாமியின் இந்த நாடகத்தை மக்கள் நம்பபோவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிடவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    5 தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்த உடனே தி.மு.க. ஆட்டம் கண்டுவிட்டது. மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.

    அப்போது, டி.டி.வி. தினகரனை கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, கூட்டணி தர்மத்தில் இருந்தவர்களை கூப்பிட்டு சேர்த்துக்கொள்ள பா.ஜ.க. நினைப்பது தவறு இல்லை. அதை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது. அவர்கள் அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறார்கள் என்று கூறினார்.

    • அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 23-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பா.ஜ.க. தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    இந்நிலையில் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உள்ளார்.

    கடந்த நவம்பர் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தனியரசு பேசி இருந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது
    • பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று சொல்லமுடியாது; சொல்லக்கூடாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட அவர் இருக்கமுடியாது என செயற்குழு, நிர்வாககுழு, பொதுக்குழு என மூன்று குழுக்களும் சொல்லியபிறகும், அவர் பாமகவின் தலைவர் என சொல்லிக்கொண்டு திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்ற தீர்ப்பின்படி கட்சியின் கொடி, சின்னம், பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. என தெரிவித்தார். 

    தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர், 

    பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்; இதுதான் 'சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி" என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்தக் கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். என தெரிவித்தார். 

    அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், 

    தேர்தல் வாக்குறுதிகளில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த வகையில் மக்கள்தான் தீர்ப்பளிப்பர் என தெரிவித்தார். 

    • பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.
    • அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.

    கோவை:

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகை குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆண்களுக்கும் இலவச பஸ் பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அதில் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக அந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்தந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று கோவை வந்தனர். கோவை காளப்பட்டி ரோடு சுகுணா கலையரங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பலர் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், தாமோதரன், செ.ம.வேலுசாமி, வைகைசெல்வன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டனர்.

    பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் உறுதி அளித்தனர். இதுதொடர்பாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
    • யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.

    உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.

    எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.

    ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.

    வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். 

    • திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!
    • தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?

    நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அஇஅதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

    எது ஒரிஜினல்? எது காப்பி?

    அம்மா மருந்தகம் ஒரிஜினல்- முதல்வர் மருந்தகம் காப்பி!

    அம்மா மினி கிளினிக் ஒரிஜினல்- மக்களைத் தேடி மருத்துவம் காப்பி!

    தாலிக்கு தங்கம் ஒரிஜினல்- அதை உல்டா செய்தது தானே புதுமைப் பெண் திட்டம்?

    இப்படி அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!

    மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்!

    ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?

    மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அஇஅதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாக தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- என அறிவித்தோம்!

    மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய "டூப்" முதல்வர் ஸ்டாலினின் அரசு, வேறென்ன செய்து கிழித்தது?

    திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாயே, அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் லேட்டா தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் இன்று வரை, சொன்னபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறதா? தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?

    அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால்,

    ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு ஒன்று வந்தால், தான் கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி விட்டு, வேறொரு வேட்டிக்கு தாவி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளக் கூட தயங்காத இந்த ரகுபதி எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?

    இன்னொருவர் டி.ஆர்.பி. ராஜா. பாக்ஸ்கான் துணை கம்பெனி என்று சட்டமன்றத்திலேயே கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டியவர் தானே இவர்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி..." என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெச்சல்!

    நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே...

    இன்னும் 2 மாசம் தான்!

    Tic Toc Tic Toc...

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது.
    • நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

    திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்பை அதிமுக வெளியிடுகிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

    ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக மாண்புமிகு திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது !

    2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

    இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.

    அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?
    • ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உதவித்தொகை ரூ.2000 என்ற அ.தி.மு.க.வின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * இலவச பேருந்து வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது?

    * முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?

    * தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா?

    * ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

    * எங்கள் தாய்மார்களுக்கு தேவையாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்று அவர் கூறினார்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
    • எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. நிறுவன தலைவரான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். அவரை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர்.

    அப்போது வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி 109 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. இந்த கேக்கையும் எடப்பாடி பழனிசாமி வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன. இவற்றையும் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், பாலகங்கா, ஆதிராஜாராம், புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், இலக்கிய அணி மாநில இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர் மன்னன், எம்.ஜி.சக்திவேல்,

    அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் டி.சி. கோவிந்தசாமி, மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் காரப்பாக்கம் லியோ சுந்தரம், தேனாம்பேட்டை முன்னாள் கவுன்சிலர் சின்னையன், கழக மாணவர் அணி துணை செயலாளர் வக்கீல் பழனி, வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், வி.எஸ்.வேல்ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் சைதை சொ.கடும்பாடி, சைதை சி.எம்.சாமி, எம்.என்.இளங்கோ, ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×