என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

#Vijay மனைவி சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - தமிழிசை வலியுறுத்தல்
- நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன் என்று சங்கீதா குற்றச்சாட்டு
- விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது என்று சங்கீதா தெரிவித்தார்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும். விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது. நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுகின்றனர்.
படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும். பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிகிறார் என்று சங்கீதா கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "விஜய் மனைவி சங்கீதாவுக்கு நியாயம் கிடைத்திட வேண்டும். அவர் சிரமத்தில் இருக்கிறார், கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அது தடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.






