search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamilNadu Cricket Association"

    • 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன.
    • சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்ப்பதற்காக 6 வகையான டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் 5-வது டிவிசன் லீக் கிரிக்கெட் போட்டியின் 'பி' பிரிவில் இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இதன் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் சென்னை மேக்னா கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டம் ஒன்றில் சிங்கம் புலி கிரிக்கெட் கிளப்-கிராண்ட் பிரிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கிராண்ட் பிரிக்ஸ் அணி, சிங்கம் புலி கிளப் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.2 ஓவர்களில் 177 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராம்குமார் 55 ரன்னும், நவீன் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சிங்கம் புலி கிளப் தரப்பில் ஜெப செல்வின் 4 விக்கெட்டும், சந்தான சேகர், தர்ஷன் தலா 2 விக்கெட்டும், ராஜலிங்கம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதைத்தொடர்ந்து ஆடிய சந்தான சேகர் தலைமையிலான சிங்கம் புலி அணி 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜோபின் ராஜ் 47 ரன்னும், ஆனந்த் 31 ரன்னும், திவாகர் 30 ரன்னும் சேர்த்தனர். தனிஷ் குமார் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கிராண்ட் பிரிக்ஸ் கிளப் தரப்பில் குமரேசன் 3 விக்கெட்டும், நவீன் 2 விக்கெட்டும், கிருஷ்ண குமார், அர்விந்த் சாமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். லீக் முடிவில் இந்த டிவிசனில் அனைத்து (11) ஆட்டங்களிலும் வெற்றி கண்டு அசத்திய சிங்கம் புலி அணி 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வி.பி.ராகவன் கேடயத்தை தனதாக்கியது. அத்துடன் சிங்கம் புலி அணி 4-வது டிவிசன் போட்டிக்கு முன்னேறியது.

    • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
    • விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.

    சென்னை:

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். மேலும் 100-வது டெஸ்டில் விளையாடி புதிய மைல் கல்லை தொட்டார். அஸ்வின் 100 டெஸ்ட்களில் 516 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    இதற்கிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.

    ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கும்ப்ளே, சி.எஸ்.கே. நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்ட னர்.

    விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீரரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடினமான விஷயம். 100 போட்டியில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனையாகும்.

    எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். அவரது புகழை வரலாறு சொல்லும். மிக சிறந்த சுழற்பந்து வீரர் சென்னையைச் சேர்ந்தவர் என்று வரலாறு கூறும் என்றார்.

    முன்னாள் சுழற்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அஸ்வினுக்கு வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது. அப்போது கும்ப்ளே பேசியதாவது:

    நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சிறந்தவர்களில் அஸ்வினும் ஒருவர். அவரது விக்கெட் எண்ணிக்கை சிறப்பானது. அவருக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் அமோகமான தொடர்பு இருக்கிறது. வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர். அவர் தனது 100-வது டெஸ்டை முன்பே விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது அவர் எப்போதும் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வின் கிளப் டி.என்.பி.எல். மற்றும் மாநில அணிக்கான தொடரில் விளையாடி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கூறினார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் வீடியோ பதிவு மூலம் அஸ்வினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    வீடியோ காலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு புதுமை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அஸ்வின் சுழற்பந்து வீச்சை முன்னோக்கி கொண்டு சென்றார். கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் சுழற்பந்து வீரர் பற்றிய நமது புரிதலையும், அறிவையும் அவர் முன்னோக்கி நகர்த்தி உள்ளார் என தெரிவித்தார்.

    இறுதியில், ஏற்புரை நிகழ்த்திய அஸ்வின், வாழ்நாள் முழுவதும் டோனிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    ×